``மீசைய முறுக்கு பார்த்து சென்னைக்கு ஓடி வந்தேன்!" - ரசிகர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்த ஆதி
'ஹிப்ஹாப் தமிழா' ஆதி இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' திரைப்படம், இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹர்ஷத் கான், சைத்ரா ஜே.ஆச்சார், கேட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படத்தின் சமீபத்திய புரோமோஷன் நிகழ்வு ஒன்றில், சுரேஷ் என்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதியிடம் தன்னுடைய சினிமா கனவு பற்றிப் பகிர்ந்திருக்கிறார்.
அதாவது 'மீசைய முறுக்கு' திரைப்படம் பார்த்த பிறகுதான் சினிமா கனவை நோக்கிச் சென்னைக்கு வந்ததாக சுரேஷ் இந்த நிகழ்வில் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு ஆதி நெகிழ்ந்திருக்கிறார்.
சுரேஷ் பேசுகையில், "நானும் சினிமாவுலதான் வேலை பார்க்கணும்னு வந்தேன். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே நீங்கதான். நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிச்சப்போ உங்களோட 'மீசைய முறுக்கு' படம் ரிலீஸ் ஆச்சு.
அந்தப் படத்தைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான், கையில எதுவுமே இல்லாம சினிமா கனவோட சென்னைக்கு ஓடிவந்தேன். அன்னைக்கு சென்னைக்கு வந்தேன். இந்த தீபாவளிக்கு என் படம் ரிலீஸ் ஆகுது.
சூர்யா சாருடன் 'சீன்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கேன். நான் இன்னைக்கு இந்த இடத்துல ஓடிட்டு இருக்கேன்னா, அதுக்கு முதன்முதல் காரணமா இருந்தவர் நீங்கதான்.
அதை உங்ககிட்ட நேர்ல சொல்லணும்னுதான் முக்கியமா இன்னைக்கு இங்க வந்தேன். என்னோட படம் ரிலீஸ் ஆகுது, நல்லாவும் நடிச்சிருக்கேன். கண்டிப்பா எங்க அம்மாவைத் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போய் என்னோட படத்தைக் காட்டுவேன்" என்றார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, "சுரேஷ், நீ 'மீசைய முறுக்கு 2' படத்தைக் கண்டிப்பா பார்க்கணும். எங்களுடன் நீ இந்தப் படத்தைப் பார்க்கணும்.
நான் எதுக்காகப் படம் எடுக்கிறேன், உங்களை மாதிரியான தம்பிங்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன்னு ஒரு நம்பிக்கையை எனக்குக் கொடுக்கும்.
நான் சரியான பாதையில்தான் போயிட்டு இருக்கேங்கிற நம்பிக்கையை உன்னை மாதிரி தம்பிங்கதான் எனக்குக் கொடுக்குறீங்க" என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)