Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா?
Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக நைட் ஷிஃப்ட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். தொடர்ச்சியாக நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் எனச் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். இது எந்த அளவுக்கு உண்மை? நைட் ஷிஃப்ட் வேலை ஆரோக்கியமற்றதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை மருத்துவர் அஸ்மி சௌந்தர்யா

இன்றைய சூழலில் பல பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை, மருத்துவமனைகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பெண்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் வேலை செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இரவில் வேலை செய்வதும், அதனால் தூங்கும் நேரம் அடிக்கடி மாறுவதும் மார்பக ஆரோக்கியத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி கவனம் பெறுகிறது.
தொடர்ந்து இரவுப் பணியில் ஈடுபடுவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரவுப் பணியே நேரடியாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.
மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வயது, குடும்ப மருத்துவப் பின்னணி, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைமுறை உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன.
இரவுப் பணி உடலை பாதிக்குமா?
நமது உடல் இயற்கையான உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது தூக்கம், விழிப்பு மற்றும் உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. பொதுவாக இரவில் தூங்கி, பகலில் விழித்திருப்பதற்கு ஏற்ப நமது உடல் இயங்குகிறது. ஆனால், தொடர்ந்து இரவில் விழித்திருந்து, பகலில் தூங்கும்போது இந்த இயற்கையான சுழற்சி பாதிக்கப்படலாம்.
இதனால் தூக்க முறையில் மாற்றம் ஏற்படுவதுடன், ஹார்மோன்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் செயற்கை வெளிச்சத்திற்குத் தொடர்ந்து ஆளாவது, உடலின் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியைப் பாதிக்கலாம். இத்தகைய மாற்றங்கள் நீண்டகாலத்தில் உடல்நலத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்... அலட்சியம் வேண்டாம்!
இரவுப் பணியில் ஈடுபடும் பெண்கள் தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுவிடும் என்று பயப்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில், மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது அவசியம்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
மார்பகத்தில் புதிதாகக் கட்டி தோன்றுவது.
மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவது.
மார்பக சருமத்தில் குழி அல்லது சுருக்கம் ஏற்படுவது.
மார்பகக் காம்பு உள்நோக்கி இழுக்கப்படுவது.
வழக்கத்திற்கு மாறாக மார்பகக் காம்பிலிருந்து திரவம் வெளியேறுவது.
இத்தகைய மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால், அவற்றை மன அழுத்தம் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டவை என்று நினைத்துப் புறக்கணிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
நைட் ஷிஃப்ட் வேலையா... இதில் எல்லாம் கவனம்!
இரவுப் பணியை முழுமையாகத் தவிர்க்க முடியாத சூழலில், சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது உடல்நலத்தைப் பாதுகாக்க உதவும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, போதுமான நேரம் தூங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
தூங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் சத்தத்தைக் குறைத்து, அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். தினமும் முடிந்தவரை ஒரே மாதிரியான தூக்க நேரத்தைப் பின்பற்ற வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிடுவதுடன், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புகைபிடிப்பதைத் தவிர்ப்பதுடன், மது அருந்துவதையும் கட்டுப்படுத்த வேண்டும். உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டும்.
இந்தப் பழக்கங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும், நல்ல தூக்கத்திற்கும் உதவக்கூடும். இருப்பினும், இவை மட்டும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

மார்பகப் பரிசோதனை ஏன் முக்கியம்?
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும். வயது, குடும்ப மருத்துவப் பின்னணி மற்றும் தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளைப் பொறுத்து, எப்போது மேமோகிராம் போன்ற பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மார்பகத்தில் புதிதாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அடுத்த வழக்கமான பரிசோதனைக்காகக் காத்திருக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
பயம் வேண்டாம்!
பல ஆண்டுகளாக நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பெண்கள் இதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. ஆனால், தங்களுடைய தூக்கப் பழக்கம், உடல்நலம் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும், மருத்துவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும், சந்தேகத்திற்குரிய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதும் மார்பக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
டாக்டர் அஸ்மி சௌந்தர்யா
Consultant – Radiation Oncology, Gleneagles Hospital Chennai.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)