Doctor Vikatan: உயிரைப் பறிக்குமா மஞ்சள் காமாலை... உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

Oct 25, 2026 - 07:00
0
Doctor Vikatan: உயிரைப் பறிக்குமா மஞ்சள் காமாலை... உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

Doctor Vikatan: என்னுடைய உறவினர்களில் இருவர் மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழந்து விட்டனர். மருத்துவம் இவ்வளவு முன்னேறியுள்ள இந்தக் காலத்திலும் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா?

அதை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்பில்லையா? கண்கள் மஞ்சளாக மாறுவது தவிர, இது வேறெப்படிப்பட்ட அறிகுறிகளைக் காட்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்.

மருத்துவர் பி.செந்தில்நாதன்
மருத்துவர் பி.செந்தில்நாதன்

மஞ்சள் காமாலை என்பதைப் பொதுவாகப் பலரும் ஒரு நோயாக நினைக்கிறார்கள். அது நோய் அல்ல; நோயின் அறிகுறி என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி நமக்குக் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் வருகின்றனவோ, அவற்றைப் போன்றதுதான் மஞ்சள் காமாலை. 

மஞ்சள் காமாலை வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அது சாதாரண மருந்து மாத்திரையிலேயே சரிசெய்யக்கூடிய காரணமாக இருக்கலாம் அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமைக்குக் கொண்டு செல்லக்கூடிய காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக மஞ்சள் காமாலையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஒன்று, கல்லீரல் பழுதடைந்து அதனால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை. அதை கல்லீரல் சார்ந்த மஞ்சள் காமாலை, ஹெப்படோசெல்லுலார் ஜாண்டிஸ் (Hepatocellular Jaundice) என்று சொல்வோம். பல்வேறு காரணங்களால்... உதாரணத்துக்கு, மதுப் பழக்கத்தாலும், வைரஸ் கிருமித் தொற்று போன்று பல்வேறு விதமான கல்லீரல் நோய்கள் ஏற்பட்டும், கல்லீரலில் பித்தம் சரியாக உற்பத்தி செய்யப்படாமல் இருப்பதால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை 'ஹெப்படோசெல்லுலார் ஜாண்டிஸ்' என்று சொல்வோம்.

பித்தம் உற்பத்தியாகக்கூடிய கல்லீரலில் இருந்து குடலுக்குச் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால், அதனாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

மற்றொரு வகை மஞ்சள் காமாலைக்கும் கல்லீரலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கல்லீரல் நன்றாக வேலை செய்யும், பித்தம் உற்பத்தியாகும். ஆனால், பித்தம் உற்பத்தியாகக்கூடிய கல்லீரலில் இருந்து குடலுக்குச் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால், அதனாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

இதை 'அப்ஸ்ட்ரக்டிவ் ஜாண்டிஸ்' (Obstructive Jaundice) என்று சொல்வோம். பித்தப்பையில் கல், பித்தநாளத்தில் கல், பித்தநாளச் சுருக்கம் அல்லது கணையத்திலோ, பித்தப்பையிலோ, பித்தநாளத்திலோ புற்றுநோய் ஏற்பட்டு அதனால் கூட மஞ்சள் காமாலை வரலாம். 

டெங்கு காய்ச்சல் (Dengue fever) வரும்போது, அதற்குரிய சிகிச்சையைக் கொடுத்துக் காய்ச்சலைச் சரிசெய்வதுபோல மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது என்ற மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதனைச் சரிசெய்தாலே மஞ்சள் காமாலை தானாகச் சரியாகிவிடும்.

யாரும் பயப்படத் தேவையில்லை. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி, இது எந்த வகையான மஞ்சள் காமாலை, அதற்கு என்ன காரணம் என்று பார்த்து அதனைச் சரிசெய்தாலே இதற்கான முழுமையான தீர்வு  நிச்சயமாகக் கிடைக்கும்.

டாக்டர்  பி. செந்தில்நாதன்:

சென்னை,  ஜெம் மருத்துவமனையின் குடல்-இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User