Chef Damu: கின்னஸ் சாதனை, சத்துணவுத் திட்டம், பத்மஸ்ரீ... செஃப் தாமுவின் சாதனைப் பயணம்!
தமிழர்களின் சமையல் கலையைப் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் செஃப் தாமு என அழைக்கப்படும் டாக்டர் கே. தாமோதரன்.
சமையல் துறையில் தனது திறமையாலும் அர்ப்பணிப்பாலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர்.

தாயின் சமையலறையில் தொடங்கிய ஆர்வம்!
சமையல் மீது செஃப் தாமுவுக்கு ஏற்பட்ட ஆர்வம் சிறுவயதிலேயே தொடங்கியது. அவரது தாய் சமையல் செய்வதைப் பார்த்து அவருக்கும் சமைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
ஆரம்பத்தில் சமையலில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அந்த ஆர்வம் குறையவில்லை. குடும்பத்தின் விருப்பத்தின்படி படித்த அவர், பின்னர் ஹோட்டல் மேலாண்மைக் கல்வியைப் பயின்று சமையல் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
1977-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் கல்வித் துறையிலும் பணியாற்றி, பல ஹோட்டல் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களை வழிநடத்திவந்துள்ளார்.

617 உணவு வகைகள்… உலக சாதனை!
2010 டிசம்பர் 22 அன்று, 24 மணி நேரம், 30 நிமிடங்கள், 12 விநாடிகளில் 617 உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். மொத்தம் 190 கிலோ உணவுகளைத் தயாரித்த இந்தச் சாதனை, அவரது சமையல் திறனையும் விடாமுயற்சியையும் உலகிற்கு வெளிப்படுத்தியது.

சின்னத்திரையில் தனி அடையாளம்!
தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களிடம் அறிமுகமானார். குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று, தனது நகைச்சுவை உணர்வாலும் அன்பான அணுகுமுறையாலும் இளைஞர்கள் உட்படப் பலரின் மனதில் இடம்பிடித்தவர் செஃப் தாமு . சமையலை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்த முக்கியப் பங்கு இவருக்கு உண்டு.
பத்மஸ்ரீ விருது!
சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 2025-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. சமையல் கலைஞராக மட்டுமல்லாமல், சமையல் கல்வி மற்றும் பயிற்சித் துறையிலும் அவர் பங்களித்துள்ளார். சமையல் தொடர்பான பல புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

சாதனைகளைத் தாண்டிய சமூகப் பணி!
செஃப் தாமுவின் பங்களிப்பு தொலைக்காட்சியோடு முடிந்துவிடவில்லை. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் உணவின் தரத்தை மேம்படுத்துவதற்குப் பங்களித்ததுடன், மாநிலம் முழுவதும் சுமார் 1.4 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
மேலும், 6,000-க்கும் மேற்பட்ட கேட்டரிங் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற உதவியதாக அவரது பத்மஸ்ரீ விருதுக்கான வாழ்க்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.

பாரம்பரியத் தமிழ் உணவுகள், குறிப்பாகச் செட்டிநாட்டு உணவு வகைகள் மீதான அவரது ஆர்வம், அவற்றைப் பரவலாக அறிமுகப்படுத்துவதிலும் வெளிப்பட்டது. அவரது புத்தகங்கள் மூலம் அனுபவத்தையும் அறிவையும் அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
செஃப் தாமுவின் பயணம், ஆர்வம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை ஒருவரைச் சாதனையாளராக உயர்த்த முடியும் என்பதை நம்மிடம் எடுத்துக்காட்டுகிறது. சமையல் கலையில் அவர் ஆற்றிய இடைவிடாத பங்கு சமையல் கலை துறையில் நினைவுகூரப்படும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)