Chef Damu: ''இனி அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது" - ரம்யா பாண்டியன்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.

கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராகக் கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தப் பதிவில் ரம்யா பாண்டியன், "தாமு சார், நீங்கள் இப்போது நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் பார்த்த மனிதர்களிலேயே மிகவும் அன்பான மனிதர்களில் நீங்களும் ஒருவர்.
எப்போதும் மென்மையாகப் பேசக்கூடியவர், அளவற்ற அன்பைப் பொழியக்கூடியவர். நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும்போது கூட, உங்களுடைய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நீங்கள் அவ்வளவு கவனமாக இருப்பீர்கள்.
சார், நான் பார்ப்பதற்கு முன்பே என்னுடைய 'அருள்வன்' திரைப்படத்தை தியேட்டரில் போய் நீங்கள் பார்த்ததை என்னால் இன்னமும் மறக்கவே முடியாது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடிற்கும் முன்பு நாம் பேசிய உரையாடல்கள், எனது திருமணத்திற்கு உங்களை அழைப்பதற்காக உங்கள் வீட்டிற்கு வந்தபோது என்னை நீங்கள் வரவேற்ற விதம், மற்றும் என் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதன்முதலாக வந்து வாழ்த்தியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தீர்கள்.

உங்களுடனான ஒவ்வொரு சிறிய நினைவும் எனக்கு மிகவும் பொக்கிஷமானது. நாம் சந்திக்கும் போதெல்லாம், முழுமனதோடு உங்களின் அன்பையும் ஆசிகளையும் எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்.
மீண்டும் ஒருமுறை உங்களிடமிருந்து அந்த அன்பான வார்த்தைகளைக் கேட்க முடியாது, அந்த ஆசீர்வாதங்களைப் பெற முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது என்றே தெரியவில்லை. உங்களுடைய ஆசீர்வாதங்களை நான் எப்போதும் வேண்டிக்கொண்டே இருப்பேன் சார்.
சமையல் கலை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பு மகத்தானது, உங்களுடைய பாரம்பரியமும் புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் சார்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)