ஒரு வீடியோவுக்கு ரூ.400; வாடகை ஐடியில் வலம் வந்த சிவகங்கை ரவுடிகள்! - கண்டுபிடித்த காவல்துறை

Oct 25, 2026 - 01:30
0
ஒரு வீடியோவுக்கு ரூ.400; வாடகை ஐடியில் வலம் வந்த சிவகங்கை ரவுடிகள்! - கண்டுபிடித்த காவல்துறை

சிவகங்கை மாவட்டம்  ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் பெருமளவில் பரவத் தொடங்கின.

"இன்னும் பல தலைகள் சிதறும், ரத்த ஆறு ஓடும்" என்றெல்லாம் அடுத்தடுத்து ஆத்திரமூட்டும் வகையிலான மிரட்டல் ரீல்ஸ் வீடியோக்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவேற்றப்பட்டன. இந்த வன்முறைப் பதிவுகள் சிவகங்கை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, சட்டம்-ஒழுங்கையும் கேள்விக்குறியாக்கின.

சுள்ளான் மதன்



இந்த கொலை வழக்கு தொடர்பாக இதில் ஈடுபட்ட மானாமதுரை மிதுன் மாணிக்கம்(26), திருமங்கலம் பிரதீப் (28), உடைகுளம் பாலமுருகன் (19), மானாமதுரை ஏ.விளாக்குளம் பாபு (23), திருப்புவனம் அதிபதிராஜா (26), சந்துரு (19), மாணிக்கம் (26), காரைக்குடி வாசு, அஜித்குமார் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

 போலீஸாரின் எச்சரிக்கையும்
விலகிய மர்மமும்!

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வெறித்தனமான வன்முறைப் பதிவுகள் குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்தது. போலீசாரின் இந்த அதிரடி எச்சரிக்கையைக் கண்டு பயந்த பலரும் தாங்கள் பதிவிட்டிருந்த வீடியோக்களைத் தாமாகவே நீக்கத் தொடங்கினர்.

மிதுன் மாணிக்கம்

அப்போது சில இளைஞர்களோ, "இந்தச் சண்டைகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; சிலர் பணம் தருவதாக ஆசை காட்டியதால், அவர்கள் கொடுத்த ரீல்ஸ் வீடியோக்களை எங்களது ஐடியில் பதிவிட்டோம்" என்று பகிரங்கமாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ரவுடிகள் கையில் எடுத்த புதிய தந்திரம் வெளிச்சத்திற்கு வந்தது.

ரவுடிகளின் புதிய ரூட்: வாடகை ஐடி!

போலீசாரின் நேரடி கண்காணிப்பில் தங்களது சொந்த சமூக வலைதளக் கணக்குகள் சிக்கிக்கொள்ளும் என்பதால், குற்றப்பின்னணி இல்லாத சாதாரண இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ரவுடி கும்பல்கள் வாடகைக்குப் பெற்றுள்ளன. இதில் கொலை மிரட்டல் பதிவுகளை வெளியிட ஒரு பதிவுக்கு 400 ரூபாய் வீதம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

சமூக வலைதளக் கணக்குகளை வாடகைக்கு எடுத்த நபர்களே, என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், எந்தப் பின்னணி இசை சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்த முழுமையான அறிவுறுத்தல்களையும் சம்மந்தப்பட்ட கணக்கு உரிமையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் போலீசாரின் ஆரம்பகட்ட கண்காணிப்பு திசைமாறி, குற்றப்பின்புலம் இல்லாத அப்பாவி இளைஞர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

சமூக வலைதளக் கணக்கில் மிரட்டல் விடுவது யார், பின்புலத்தில் இருந்து இயக்குவது யார் என்ற உண்மைத் தடம் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. இந்த முறைகேடு நெட்வொர்க்கில் சிவகங்கை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் கணக்குகளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசாரின் அதிரடி வேட்டை!

இளைஞர்களைத் திசைதிருப்பும் இந்த சமூக விரோதச் செயலை ஒடுக்கும் நோக்கில் சிவகங்கை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர். இதுவரை வன்முறையைத் தூண்டிய 41 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 3 முகநூல் கணக்குகள் என மொத்தம் 44 சமூக வலைதளக் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

எஸ்.பி.அபிஷேக் குப்தா

வன்முறையைத் தூண்டும் பதிவு சம்பவத்தோடு தொடர்புடைய 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் பதிவுகளும் பழிக்கு பழி சம்பவங்களும் தொடராமல் இருக்க காவல்துறையினர் முழுமூச்சில்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களை கண்காணிக்க 'மீடியா மேனேஜ்மெண்ட்' சென்டர் மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி.அபிஷேக் குப்தா
தெரிவித்துள்ளார்.

இன்று இளைஞர்களின் அறியாமையைப் பயன்படுத்தியும், பண ஆசை காட்டியும் அவர்களைச் சாதி மோதல்களிலும் வன்முறையிலும் ஈடுபடுத்த சமூக வலைதளங்கள் குற்றவாளிகளால் ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருவது சமூக ஆர்வலர்களைக் கடும் கவலை அடையச் செய்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User