கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

Jul 28, 2026 - 13:30
0
கடலூர்: காதலிக்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திய கொடூரம்; பயத்தில் இளைஞர் எடுத்த முடிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், பக்கத்து கிராமத்தில் ஒரு வீட்டுக்கு ஒயரிங் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டில் இருந்த பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நட்பாகப் பேசி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 26-ம் தேதி அந்த வீட்டுக்குச் சென்ற ஐயப்பன், அங்கு தனியாக இருந்த அந்த மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் கிழித்துவிட்டு தப்பிவிட்டார். சிறுமியின் அலறலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் சிறுமி.

ஐயப்பன்
ஐயப்பன்

இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிதம்பரம் தாலுகா போலீஸார், தலைமறைவாக இருந்த ஐயப்பனைத் தேடி வந்தனர். இந்த நிலையில் சி.முட்லூர் அரசுக் கல்லூரிக்குப் பின்புறம் யாரோ தூக்கில் தொங்குவதாக போலீஸாருக்குத் தகவல் சென்றது.

அதனடிப்படையில் மரத்தில் தொங்கிய அந்தச் சடலத்தை மீட்ட போலீஸார், அதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மரத்தில் சடலமாகத் தொங்கிய நபர், சிறுமியை கத்தியால் கிழித்துவிட்டு தப்பிச் சென்ற ஐயப்பன் என்பது தெரிய வந்தது.

அதன்பிறகு அந்தச் சடலம் உடற்கூராய்வு சோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தாலுகா காவல் நிலைய விசாரணை அதிகாரிகள், ``இன்னும் விசாரணை முடியவில்லை. ஐயப்பன் ஒயரிங் வேலைக்காகச் சென்றபோது அந்த வீட்டிலிருந்த சிறுமியிடம் பேசியிருக்கிறான். வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர் என்ற அடிப்படையில் சிறுமியுடன் ஐயப்பனுடன் எதார்த்தமாகப் பேசியிருக்கிறார்.

அதையடுத்து சிறுமியிடம் அவரைக் காதலிப்பதாகக் கூறிய ஐயப்பன், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதில் பயந்து போன அந்தச் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும், ஐயப்பன் சிறுமியை அடிக்கடி சந்தித்து, காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

தூக்கு தண்டனை
தற்கொலை

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டு, அங்கு போயிருக்கிறார் ஐயப்பன். அப்போதும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சிறுமியிடம் வற்புறுத்தியிருக்கிறார். சிறுமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த ஐயப்பன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சிறுமியின் உடலில் பல இடங்களில் கிழித்துவிட்டு ஓடிவிட்டார்.

போலீஸார் தீவிரமாகத் தேட ஆரம்பித்ததால் பயந்து போன ஐயப்பன், அன்றைய தினமே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். ஆனாலும் உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது உறுதியாகத் தெரியவரும்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User