கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது சில வீடுகளுக்குள்ளும் கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கொசு மருந்து அடித்த சிறிது நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் (65) மற்றும் ராணி என்ற பிரேமா (75) ஆகியோருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். பின்னர் இருவரது உடலும் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே அளவுக்கு அதிகமாக மருந்து கலந்து ஊழியர்கள் கொசு மருந்து அடித்ததாக கூறி, பொதுமக்கள் தூய்மை பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இது குறித்து விளக்கம் அளித்த பேரூராட்சி அதிகாரிகள், “கொசு மருந்தால் மக்களுக்கு எவ்வித மூச்சு திணறலும் ஏற்படாது. உயிரிழந்த மோகன் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வந்தது. அவர்கள் உடல்நலப் பிரச்சனையால் தான் உயிரிழந்துள்ளனர். கொசு மருந்து அடித்ததால் யாரும் உயிரிழக்கவில்லை” என்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)