இலக்கியக் கடலில் ஒரு முத்து: கலைமகள் 95வது ஆண்டு சிறப்பு மலர் மதிப்பாய்வு

Mar 25, 2026 - 19:00
 0
இலக்கியக் கடலில் ஒரு முத்து: கலைமகள் 95வது ஆண்டு சிறப்பு மலர் மதிப்பாய்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

1932ஆம் வருடம் ஆரம்பித்த கலைமகள் பத்திரிகை, 95வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அரசியல், சினிமா இவற்றை ஒதுக்கி, பத்திரிகையை நடத்த முடியும் என்று உலகிற்கு உணர்த்தியுள்ளது கலைமகள். இதனையொட்டி, கலைமகள் 95வது ஆண்டு சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது. பாரதியாரின் இளவல் எழுதிய கட்டுரை, கி.வா.ஜ. அவர்கள் புனை பெயரில் எழுதிய கவிதை மற்றும் கட்டுரை என்று எண்ணற்ற கட்டுரைகள் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 18 கட்டுரைகள் அடங்கிய இந்த சிறப்பு மலரில் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்று சொல்லலாம். பாரதியார், தம்முடைய படிப்புச் செலவுக்கு, எட்டயபுரம் மன்னரிடம் உதவி கேட்டு 1897ஆம் வருடம் எழுதிய கவிதையை, அவருடைய இளவல் விவரித்திருக்கிறார். இந்தக் கவிதை, அவருடைய கவிதைத் தொகுப்பில் வந்திராத கவிதை. கவிதையில் என்னைக் கவர்ந்த சில வரிகள்:

கைப்பொருள் அற்றான் கற்ப தெவ்வகை?

பொருளால் அன்றிக் கல்வியும் வரவில

கல்வியான் அன்றிப் பொருளும் வரவில!

“மாலன்” அவர்களின் கட்டுரையிலிருந்து கலைமகளைப் பற்றி பல விவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. முதலில் தோன்றிய பத்திரிகை ஆனந்த விகடன் 1926ஆம் வருடம். கலைமகள் 1932. மணிக்கொடி 1933. இவற்றில் முதல் இரண்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. “திரிவேணி” என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஒட்டி கலைமகள் தொடங்கப்பட்டது என்கிறார் மாலன். கலைமகளில் நிறைய சிறுகதைகள் வந்த காரணத்தால் “கலைமகள் கதைமகளாகிவிட்டது” என்ற விமரிசனங்கள் வந்தனவாம். கலைமகள் ஆரம்பித்த காலத்தில், பிறமொழிகளில் எழுதப்பட்ட கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு அதிகம் காணப்பட்டது.

மாஸ்தி வேங்கடேசய்யங்கார் கன்னடத்தில் எழுதிய கதை, திரிவேணியில் ஆங்கிலத்தில் பதிக்கப்பட, அதை தமிழில் “வேணுகானம்” என்ற பெயரில் கலைமகளில் எழுதியவர் ராஜாஜி. கல்கி அவர்கள் கதை 1936ல் வெளிவந்தது.

1948ஆம் வருடம் கலைமகளில் அநுஷம் என்ற பெயரில் கி.வா.ஜ. அவர்கள் எழுதிய “தலையும் படமும்” என்ற கட்டுரை மலரில் இடம் பெற்றுள்ளது. தபால்தலை என்று சொல்லப்படுகின்ற ஸ்டாம்ப் பற்றிப் பல விவரங்கள் அளித்துள்ளார் ஆசிரியர். ஸ்டாம்ப் என்பதற்கு தபால் முத்திரை என்பதே சரியானது என்று கருதும் ஆசிரியர், பெரும்பாலும் முத்திரையில் ராஜா அல்லது ராணி தலையைப் போட்டுக் கொண்டு வந்த காரணத்தால் தபால் தலை என்ற பெயர் வந்திருக்கலாம் என்கிறார். லண்டனில் அச்சாகி இந்தியா வந்த தபால் தலைகள் 1926ஆம் வருடம் முதல் நாசிக்கில் அச்சிடப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான், திருவனந்தபுரம் அரசரைச் சந்தித்து, அவருக்கு தமிழின் பெருமைகளை எடுத்துரைத்த வரலாற்றை, தமிழ்த் தாத்தாவின் கட்டுரை “தமிழ் தந்த வளம்” விளக்குகிறது.

விவேகானந்தர்

சுவாமி அபவர்கானந்தர் எழுதிய “சுவாமி விவேகானந்தர் பார்வையில் நாகரிகம்”, பல அரிய கருத்துக்களைக் கொண்டது. பண்பாடு மற்றும் நாகரிகம் ஆகியவற்றின் வித்தியாசம், ரோமானிய, கிரேக்க, இந்து நாகரிகங்களின் ஒப்பீடு, மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாகரிகங்கள் பற்றிய அலசல் இந்தக் கட்டுரையில் முக்கியமான அம்சங்கள்.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கும், பௌத்த மதத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி, இந்தக் காப்பியம் மகாயான பௌத்த காப்பியம் என்று விளக்குகிறது மணிமேகலை பற்றிய கட்டுரை.

சிறுகதை எழுதுபவர்கள், எழுத ஆரவமுள்ளவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை தேவி பாலாவின் “சிறுகதை சிறுத்தை”. சிறுகதை எழுத ஆரம்பித்த தேவிபாலாவுக்கு, எழுத்தாள ஜாம்பவான்கள் கொடுத்த அறிவுரைகளை சுவைபட விளக்கியுள்ளார் தேவிபாலா. “உன்னைச் சுற்றியிருக்கும் சம்பவங்கள்” உனக்கு கதைக் கரு கொடுக்கும் என்ற சாவியின் அறிவுரை, “சிறுகதைக்கு தலைப்பு மிக மிக முக்கியம்” என்ற ரா.கி.ரங்கராஜன், “முதல் வார்த்தைல கதையைத் தொடங்க வேண்டும்” என்று சொன்ன சுஜாதா இவை நிச்சயமாக எழுத்தாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.

“செட்டிநாட்டு செந்தமிழ் அறிஞர்கள்” கட்டுரை தமிழ் தொண்டாற்றிய நகரத்தாரைப் பற்றிய பட்டியல் இட்டிருக்கிறது. தமிழக அரசவைக் கவிஞர் கண்ணதாசன் என்று கவியரசரைப் பற்றி எழுதும் போது “இவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவை. மேற்கோளாகப் பயன்படுத்தப்படுபவை” என்று கூறுகிறார் ஆசிரியர். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, பயணக் கட்டுரைகளின் முன்னோடி சோமலெ அவர்கள் பற்றிய விவரங்களும் உள்ளன.

இந்த தொகுப்பில் இரண்டு ஆன்மீகக் கட்டுரைகள் உள்ளன. கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்களின் “இந்திரன்”, தேவர்களின் தலைவன் பற்றிய புராணக் கதைகள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம். பூசை ஆட்சிலிங்கம் “சரஸ்வதி” கட்டுரையில் பல சுவையான தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார். பௌத்தர்கள் சரஸ்வதியை, சிந்தாதேவி என்றும், சமணர்கள் “ஜினவாணி” என்றும் வழிபடுவதாகக் கூறுகிறார்.

அனைத்துக் கட்டுரைகளும் சுவாரசியமாகவும், பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், இடமின்மை காரணமாக சில கட்டுரைகளை மட்டுமே சுட்டிக்காட்ட முடிந்தது. மொத்தத்தில், இந்த சிறப்பு மலர் ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம்.

-கே.என்.சுவாமிநாதன், சென்னை

தேர்தல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0