திருமணம் தாண்டிய உறவைக் கண்டித்த கணவன்; கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?
பெங்களூரு பெட்டதாசனபுரா மெயின் ரோட்டில் உள்ள தொட்டதொகுருவில் வசிக்கும் உபேந்திராவும், அனிதாவும் தனியார் வங்கிகளில் கடன் தொடர்பான சிறிய கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்தனர்.
ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்களுக்கு அருகில் அவர்களது ஊரைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி (46) என்ற டாக்சி டிரைவரும் தங்கி இருந்தார். இந்நிலையில் உபேந்திரா கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அனிதா தனது மைத்துனர் ராஜேந்திராவிடம் தெரிவித்தார்.
உபேந்திராவின் மரணம் குறித்து அவரது சகோதரர் ராஜேந்திரா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து அனிதாவை விசாரித்தபோது, உபேந்திரா குளியலறைக்குச் செல்லும்போது வழுக்கி விழுந்து மாரடைப்பால் இறந்ததாகக் கூறினார்.

இருப்பினும், உபேந்திராவின் முகம் மற்றும் கழுத்தில் காயங்களை போலீசார் கவனித்தனர். எனவே உபேந்திராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ராஜேந்திரா அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸார் உபேந்திரா மற்றும் அனிதாவின் போன் அழைப்பு விவர பதிவுகளைச் சேகரித்து அனிதாவின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டது என்று கூறப்பட்டு இருந்தது. உபேந்திராவின் வீட்டைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சரிபார்த்து, முக்கியமான தகவல்களைச் சேகரித்தனர்.
அனிதா அடிக்கடி மதுசூதன் ரெட்டியுடன் போனில் பேசி இருப்பது தெரிய வந்தது. மேலும் மதுசூதனின் நடமாட்டம் உபேந்திராவின் வீட்டின் அருகே உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து மதுசூதன் ரெட்டியை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அனிதாவுடன் உறவு வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். மதுசூதனுடனான உறவு குறித்து உபேந்திரா அனிதாவைப் பல முறை எச்சரித்தும், துன்புபுறுத்தியும் வந்துள்ளார். இதையடுத்து மதுசூதனும் அனிதாவும் உபேந்திராவைக் கொலை செய்ய முடிவு செய்தனர்.
கடந்த மாதம் 11ம் தேதி உபேந்திரா தனது மனைவி அனிதாவை அடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அனிதா, மதுசூதனுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தார். மதுசூதன் நள்ளிரவில் உபேந்திராவின் வீட்டிற்கு வந்தார். அங்கு இரண்டு குழந்தைகள் ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தனர். படுக்கையறையில் உபேந்திரா தூங்கிக்கொண்டிருந்தார். உடனே மதுசூதன், உபேந்திராவின் மேல் அமர்ந்து, இரு கைகளாலும் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். அதே நேரத்தில், அனிதா தனது கணவரின் முகத்தையும் மூக்கையும் மூடினார். இதனால் சிறிது நேரம் போராடிய பிறகு, உபேந்திராவின் மூச்சு நின்றுவிட்டது.
இதையடுத்து மதுசூதன் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு அனிதா தனது மைத்துனர் ராஜேந்திராவிற்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். இதனை மதுசூதன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் அனிதா, மதுசூதன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இப்போது இருவரும் பிடிபட்டுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)