'கொன்னுடுவேன்னு மிரட்டி வீடியோ எடுத்தாங்க' - துணை சபாநாயகர் தாக்கியது குறித்து கார்த்திக்

Nov 09, 2026 - 17:31
0
'கொன்னுடுவேன்னு மிரட்டி வீடியோ எடுத்தாங்க' - துணை சபாநாயகர் தாக்கியது குறித்து கார்த்திக்

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக்குமார் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது.

ஆனால் தன்னை ரவிசங்கர் அடிக்கவில்லை, என்று வீடியோ வெளியிட்டிருந்த கார்த்திக்குமார் தனக்கும், தனது குடும்பத்திற்கும் துணை சபாநாயகர் ரவிசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

கார்த்திக்குமார் - ரவிசங்கர்
கார்த்திக்குமார் - ரவிசங்கர்

இதுகுறித்து கார்த்திக்குமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், " எனது வார்டில் அடிப்படை வசதி கோரி நகராட்சியில் பல தடவை மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறையூர் சட்டமன்ற அலுவலகத்திற்குச் சென்றும் மனு கொடுத்தேன். அங்கும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று எதார்த்தமாக சமயபுரம் கோவிலுக்குச் சென்றபோது துணை சபாநாயகரின் வீட்டின் முன் வண்டி நின்றது. அவரைப் பார்த்து அவரிடம் கோரிக்கை தெரிவிக்கச் சென்றேன். அப்போது அங்கிருந்து இறங்கி வந்து எந்த விசாரணையும் இன்றி என்னை கைநீட்டி அடித்து, மிகவும் அசிங்கமாகவும் தரக்குறைவாகவும் பேசி என் கண்ணாடி, வண்டி சாவி எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.

நான் மிகவும் இருட்டிய நேரத்தில் எல்லாம் போகவில்லை. ஆறரை மணிக்குத் தான் போனேன். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் என்னை அடித்தார். என் செருப்பு, கண்ணாடி எல்லாவற்றையும் கழற்றி எறிந்ததில், நான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் காணவில்லை.

அதன் பின் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று OP சீட்டு பெற்றேன். OPயில் புகார் கொடுத்தேன். அங்கு பணியில் இருந்த மருத்துவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் வந்து யார் அடித்தது என்று கேட்டார். நான் “துணை சபாநாயகர், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் என்னை அடித்தார்” என்று பதிவு செய்தேன். ஆனால், அங்கு அடையாளம் தெரியாத நபர் அடித்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கார்த்திக்குமார்
கார்த்திக்குமார்

இது நடந்து கொண்டிருக்கும்போதே மணச்சநல்லூர் ஆய்வாளர் கிருபாநிதி வந்து என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். காவல் நிலையத்தில் வைத்து நான் யாரையோ அடித்தது போல் புகார் வந்திருப்பதாகக் கூறி, “உன்னை நான் ரிமாண்ட் செய்கிறேன்” என்று மிரட்டினார்.

என்னை வலுக்கட்டாயமாக துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து மிரட்டினார்கள். “நாங்கள் சொல்வது போல் பேசவில்லை என்றால் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்; நான் சொன்னால் புஸ்ஸி ஆனந்த் என்ன வேண்டுமானாலும் செய்வார்” என்று மிரட்டினார்.

இதையடுத்து துணை சபாநாயகருடன் என்னை அமர வைத்து, அவர்கள் சொல்வது போல் பேச வைத்து 6, 7 டேக் வீடியோ எடுத்தார்கள்.

அந்த இடத்தில் தர்மசங்கடத்தில் இருந்த என்னை வலுக்கட்டாயமாகப் பேச வைத்து வீடியோ எடுத்துக்கொண்டார்கள்; நான் விருப்பப்பட்டு அதைக் கொடுக்கவில்லை. என் உயிருக்கு பயந்தும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசினேன். என் மனதார நான் அந்த வீடியோவைக் கொடுக்கவில்லை.

சமூக வலைதளங்களில் என்னை அவதூறாகப் பேசுகிறார்கள்; நான் பணம் வாங்கும் ஆள் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User