கந்த சஷ்டி விரதம்: 'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - ஆறுமுகன் நம் மனதில் இன்று உதிக்கட்டும்...

Nov 10, 2026 - 09:00
0
கந்த சஷ்டி விரதம்: 'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - ஆறுமுகன் நம் மனதில் இன்று உதிக்கட்டும்...

தட்சன் பக்தன்தான். பக்தியாலும் தவத்தினாலும் முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் பிரபஞ்சத்துக்கு எடுத்துக் காட்டியவன். பிரபஞ்சத்தின் முதல் மகளே தனக்கு மகவாக வரவேண்டும் என்று வரம் கேட்டான்.

அப்போது அந்த ஆதி ஈசன் தன் மருமகன் ஆவான் என்கிற ஆசை. ஆசைப்படுவதில் தவறென்ன இருக்கிறது... அதுவும் தவம் செய்யும் துணிவும் வலிமையும் இருக்கும் ஒருவனுக்கு... அவன் கனவு நிஜமானது. வேண்டுதல் பலித்தது. அன்னை ஆதி சக்தி அவன் மகளாக அவதரித்தாள், தாட்சாயினி என்கிற திருநாமத்தோடு.

ஈசனும் உரிய காலத்தில் அன்னையின் கரம் பிடித்தார். அதன்பின்தான் விதி விளையாடியது. தனக்கு ஈடு யாருமில்லை என்று இறுமாப்பு கொண்டான். மாமனாரை விட மருமகன் உயர்ந்தவன் இல்லை என்பது அவரின் எண்ணம். ஈசனைப் புறக்கணித்து வேள்வி செய்தான். மருமகனையோ மகளையோ அந்த வேள்விக்கு அழைக்கவில்லை. யார் வேள்வி செய்தாலும் ஈசனுக்கு அவிர்பாகம் உண்டு. அதையும் தர அவன் விரும்பவில்லை.

வீரபத்திரர்
வீரபத்திரர்

சரி ஆணவம் கொண்டவன் அழிவின் பாதையில் செல்பவன் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அனைத்தும் உணர்ந்த தேவர்கள் அப்படிச் செய்யலாமா... ஈசனை அவமதிக்கும் ஓர் இடத்தில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கலாமா... வலிமையிருந்தால் அவர்களை எதிர்த்து நின்று பேசவேண்டும். இல்லை என்றால் அங்கிருந்து விலகி ஓட வேண்டும். கிடைக்கும் சொற்ப லாபத்துக்காகப் பேசாமல் இருந்தால் கிடைக்கும் பாவ பலன் சொல்லில் அடங்காது.

வீரபத்ரர் தோன்றி தட்சனின் யாகத்தை அழித்தார். சிவகணங்கள் தேவர்களை அடித்துத் துரத்தினர். சூரியனுக்கு அதில் பற்கள் உடைந்துபோயினவாம். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தப்பி ஓடினார். ஆனால் தட்சனால் அவ்வாறு தப்ப இயலவில்லை. தலை வீழ்ந்தது. பிறகு ஈசனின் கருணையால் ஆட்டுத்தலை கிடைத்தது.

இந்த நிகழ்வுதான் கந்தன் அவதாரத்தின் ஆதிமூலம். சிவனை அவமதித்த பாவம் தேவர்களைத் துரத்தியது. அதுவே சூரன் வசம் அவர்களைச் சிறைப்படுத்தியது. ஒருநாள் லாபத்துக்காக அநீதியைக் கண்டு வாய்மூடி இருந்ததன் பலன்... ஓராயிரம் ஆண்டுகள் சிறைவாசம்.

பதவி இழந்தனர்... பாடுபட்டனர். மறைந்து வாழ்ந்தனர். மகிமை இழந்தனர். தம் தவற்றை உணர்ந்தனர். வேறு வழியின்றி தொலைத்த இடத்தில்தானே தேட வேண்டும் என்பதை உணர்ந்து அந்தக் கயிலாயத்தானையே சரண் அடைந்தனர்.

சிவனைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் சூரபத்மனுக்கு. 'தன்னைக் கொல்ல சிவனே வரவேண்டும். அல்லது அவரின் மகனே வரவேண்டும்.' இதுதான் அவன் பெற்ற வரம். ஒரு நாள் சிவனார் மனம் கனிந்தார். அவரின் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் பிறந்தன.

அக்னி தேவன் அதைச் சுமக்க முடியாமல் சுமந்தார். அக்னியையே சுட்டன அந்தத் தீப்பொறிகள். பிறகு வாயு தேவன் வாங்கிக்கொண்டான். அதை கங்கையில் மிதக்க விட்டான். அந்த இடத்தில் சரவணம் என்னும் நாணல் புற்கள் வளர்ந்து நிறைந்திருந்தது. அவற்றுள் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு தீப்பொறிகளும் தவழ விட்டான். அதுவே மழலையானது. ஆறு குழந்தைகளாய் கந்தன் அவதரித்தான்.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

கங்கையில் பிறந்ததால் காங்கேயன்... சரவணப்பொய்கையில் பிறந்ததால் சரவணன். விசாக நட்சத்திர நாளில் உதித்ததால் விசாகன். ஆறுமுகம் கொண்டு திகழ்ந்ததால் ஆறுமுகன்.

கந்தன் அவதரித்துவிட்ட செய்தி அறிந்த தேவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் துயரங்கள் எல்லாம் விரைவில் கெடப்போகிறோமே என்று வருந்தின. பக்தர்களுக்குத் துணிச்சல் அதிகரித்தது. இனி வாழ்வில் இருள் இல்லை. ஒளியே என்று குதூகலித்தனர்.

கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். அன்னை உமையவள் ஓடிவந்தாள். ஆறுபிள்ளைகளையும் சேர்த்து அணைத்தாள். அவர்கள் ஒன்றாகினர். ஆனால் அவர்கள் முகங்கள் மட்டும் அப்படியே நிலைத்தன. ஆறு முகமும் பன்னிரு கரங்களும் கொண்டு ஓர் உருவானான் கந்தன்.

ஏன் ஆறுமுகங்கள்... ஐயன் சிவனுக்கு ஐந்து முகம்... அம்மைக்கு ஒரு முகம். இருவரும் சேர்ந்த திருவடிவம்தான் ஆறுமுகன். ஈசன் பர இன்பங்களை அருள்வார். அதாவது மோட்சம் முதலான நன்மைகளை அருள்பவர். அன்னையோ இக இன்பங்களான இந்த உலக வாழ்வுக்கு வேண்டிய நன்மைகளை அருள்வாள். ஆறுமுகனை வணங்கினால் இக, பர சுகங்கள் இரண்டும் ஒருங்கே கிடைக்கும் என்பது உறுதி.

அப்படிப்பட்ட கந்தன் அவதாரத்தை கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாளில் நினைக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் இந்த நாளின் காலையில் நீராடி நீறுபூசி கந்தன் என்னும் மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி வணங்க வேண்டும். விளக்கேற்றி வைத்து கந்த சஷ்டிக் கவசம் படித்து கந்தன் அந்த நாளில் அவர்கள் மனத்தில் புகுந்தான் என்பதை உணர வேண்டும். கந்தன் பிறந்துவிட்டால் கவலைகள் விலகிவிடும்.

ஆறுமுகன்

அன்றாடம் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் கவலைகள். கவலைகளைத் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருப்பது துன்பங்களைவிடத் துயரம். அது நம்மைச் சோர்வுக்குள் தள்ளிவிடும். அதில் இருந்துவிடுபட ஒரே வழி கந்தனை தியானிப்பதுதான்.

கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களும் சரி... விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்களும் சரி யாராக இருந்தாலும் கந்த சஷ்டியின் முதல் நாளில் முருகனை மனத்தில் நினைத்து வழிபட வேண்டும். அவன் நாமத்தைச் சொல்லச் சொல்ல நமக்குள் ஒளி தோன்றும். கவலைகள் கொஞ்சம் ஓயும். பிரச்னைகளை மறந்து முருக மந்திரத்தை உச்சரியுங்கள். கந்த சஷ்டிக் கவசத்தை வாசியுங்கள். மெல்ல மெல்லக் கவலைகள் விலகுவதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

யுகங்களாக அடைபட்டுக்கிடந்த தேவர்களின் துன்பமே கந்தன் அவதரித்ததும் நீங்கியதாம். நம் துன்பங்கள் எல்லாம் மிகவும் சிறியன என்று நம்புங்கள். இந்தக் கந்த சஷ்டி நாளில் அவனைப் பாடப்பாட அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.

வாருங்கள்... அந்த ஆறுமுகனின் வைபவத்தைத் தொடர்ந்து தியானிப்போம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User