சாதனைப் பெண் மருத்துவரை உருவாக்கிய விவாகரத்து வழக்கு! - ருக்மாபாய் ராவத்தின் போராட்டக் கதை

Nov 06, 2026 - 03:00
0
சாதனைப் பெண் மருத்துவரை உருவாக்கிய விவாகரத்து வழக்கு! - ருக்மாபாய் ராவத்தின் போராட்டக் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மருத்துவர்.ருக்மாபாய் ராவத் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராகவும், உறுதியான பெண்ணியவாதியாகவும் திகழ்ந்தவர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலவிய குழந்தை திருமண முறைக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம், நாட்டில் சட்ட சீர்திருத்தங்களுக்கு அவர் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

ருக்மாபாய் 1864-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி, அன்றைய பம்பாயில் (தற்போதைய மும்பை) ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜனார்தன் பாண்டுரங், ருக்மாபாய்க்கு இரண்டு வயதாக இருந்தபோதே காலமானார். அவருக்கு 11 வயதாக இருந்தபோது, அவரது தாயார் ஜெயந்திபாய், புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான டாக்டர் சக்காராம் அர்ஜுனை மறுமணம் செய்துகொண்டார். மருத்துவர்.சக்காராம் அர்ஜுன், ருக்மாபாயின் கல்விக்கும், பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கும் ஆதரவாக இருந்தார்.

பெண்கள் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்த 19-ஆம் நூற்றாண்டில், ருக்மாபாய் தனது ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே பெற்றார். 'ஃபிரீ சர்ச் மிஷன்' என்ற நூலகப் புத்தகங்களைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே அறிவியல், இலக்கியம், சமூகக் கருத்துக்கள் கொண்ட பல புத்தகங்களை சுயமாகப் படித்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார். இந்த வலுவான ஆரம்பக்கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கமே, பிற்காலத்தில் "அ ஹிந்து லேடி" என்ற புனைப்பெயரில் தி டைம்ஸ் நாளிதழில் குழந்தை திருமணத்தின் கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கண்டித்து ஆங்கிலக் கட்டுரைகளை எழுதுவதற்கும், லண்டன் சென்று மருத்துவப் பட்டம் பெறுவதற்கும் அடித்தளமாக அமைந்தது.

அவருக்கு 11 வயதில் 19-வயதுடைய தாதாஜி பிகாஜி என்பவருடன் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட போதிலும், அவர் புகுந்த வீட்டிற்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே தங்கித் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1885-ஆம் ஆண்டில், அவரது கணவர் ருக்மாபாயைத் தன்னுடன் வாழ கட்டாயப்படுத்த "தம்பதியர் உரிமை மீட்பு" (Restitution of Conjugal Rights) வழக்கைத் தொடர்ந்தார். ஆனால் ருக்மாபாய் அவருடன் வாழ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். 1887-ஆம் ஆண்டில், காலனித்துவ நீதிமன்றம் ருக்மாபாய் தன் கணவருடன் வாழ வேண்டும், இல்லையெனில் ஆறு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தனக்கு விருப்பமில்லாத திருமண பந்தத்தில் வாழ்வதை விட சிறைக்குச் செல்லத் தயார் என்று துணிச்சலுடன் பதிலளித்தார்.

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த விவகாரத்தில், விக்டோரியா மகாராணி தலையிட்டு, அந்தத் திருமணத்தை செல்லாது என்று அறிவித்தார். சட்டப்பூர்வமாக விடுதலை பெற்றார்; ருக்மாபாய், பிகாஜிக்கு இழப்பீடாக ரூ.2,000 வழங்கினார். இந்த வழக்கு, 1891-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 'சம்மத வயதுச் சட்டத்திற்கு' (Age of Consent Act) ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது. இச்சட்டத்தின் மூலம், சிறுமிகளுக்கான திருமணச் சம்மத வயது 10-லிருந்து 12-ஆக உயர்த்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விவாகரத்து வழக்கிற்குப் பிறகு, ருக்மாபாய் மருத்துவக் கல்வி பயில விரும்பியதை பல சமூக ஆர்வலர்கள் ஆதரித்தனர். காமா மருத்துவமனையின் மருத்துவர் எடித் பெச்சி மற்றும் பல பெண்ணியவாதிகள் இணைந்து, ருக்மாபாயின் உயர்கல்விக்கான நிதியைத் திரட்ட 'ருக்மாபாய் பாதுகாப்பு குழுவை' (Rukhmabai Defence Committee) உருவாக்கினர். இதன் மூலம், 1889-ஆம் ஆண்டில் ருக்மாபாய் மருத்துவம் படிக்க இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டார்.  இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லண்டன் மகளிர் மருத்துவப் பள்ளியிலும், ராயல் ஃப்ரீ மருத்துவமனையிலும் தனது ஐந்தாண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டார்.

லண்டனில் பெண்களுக்கு முழுமையான மருத்துவத் தகுதிச் சான்றிதழ்களை வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்தில், ருக்மாபாய் ஸ்காட்லாந்தின் எடின்பர்க், கிளாஸ்கோ நகரங்களுக்குச் சென்று, அங்கு தனது பயிற்சியின் இறுதிக்கட்டத்தை வெற்றிகரமாக முடித்து, மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.டி. (Doctor of Medicine) பட்டத்தையும், ஸ்காட்லாந்தின் முத்தகுதிச் சான்றிதழையும் பெற்றுத் தனது மருத்துவத் தகுதியை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டார்.

ஆனந்திபாய் ஜோஷி மற்றும் காதம்பினி கங்குலி ஆகியோர் இவருக்கு முன்பே மருத்துவப் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், ஆனந்திபாய் ஜோஷி தனது பட்டத்தைப் பெற்ற சிறிது காலத்திலேயே காசநோயால் காலமானார். எனவே, காதம்பினி கங்குலிக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் முறையாக மருத்துவப் பணியைச் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமை ருக்மாபாயைச் சாரும்.

1895-ல் இந்தியா திரும்பிய அவர், சூரத்திலிருந்த பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றில் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்; அங்கேயே தனது மருத்துவப் பணியைத் தொடங்கினார். சூரத் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனைகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக 35 ஆண்டுகள் அவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். தனது பணிக்காலத்தில், அந்தப் பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைகளை நிறுவுவதற்கும் அவர் பாடுபட்டார்.

1929-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகும், சமூகச் சீர்திருத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பர்தா முறை மற்றும் விதவைகள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு எதிராகப் பல கட்டுரைகளை எழுதினார். பர்தா அணிவதால் பெண்களுக்குப் போதிய சூரிய வெளிச்சமும், காற்றும் கிடைக்காமல் அவர்கள் காசநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு ஆளாவதை ஒரு மருத்துவராக சுட்டிக்காட்டினார். விதவைகளுக்கு மறுமணம் செய்யும் உரிமை வேண்டும் என்றும், அவர்கள் சுயமாக வாழ அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்..

பெண்கள் தங்களின் உரிமைகளைப் பெற கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம் என்று ருக்மாபாய் நம்பினார். ஏழைப் பெண்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் கல்வி கற்கப் பல்வேறு வழிகளில் உதவினார். ருக்மாபாய் தனது இறுதிக்காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பழமைவாதச் சமூகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், 1955-ஆம் ஆண்டு செப்டம்பர் 25 வரை (அவர் மறையும் வரை) பெண்களின் விடுதலைக்காகவும், சமூகச் சமத்துவத்திற்காகவும் பேனா மூலமும், நேரடிப் பணிகள் மூலமும் ருக்மாபாய் தொடர்ந்து போராடினார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User