TVK MLA Meeting: 'பரிசு, பாராட்டு, வார்னிங்' - விஜய்யின் ரெசார்ட் மீட்டிங் இன்சைடு ஸ்டோரி!
முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில் நடந்து முடிந்திருக்கிறது. பரிசு... பாராட்டு... கடும் எச்சரிக்கை என இந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பல எமோஷன்களையும் வெளிக்காட்டியிருக்கிறார். ரெசார்ட்டில் அந்த 3 மணி நேரமும் என்னதான் நடந்தது?

முதல்வரின் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு எங்கே வைத்து நடக்கிறது என்பதிலேயே பெரும் குழப்பம் இருந்தது. காலை 9 மணிக்குத்தான் ஈ.சி.ஆர் ரெசார்ட்டை தவெக தலைமை லாக் செய்து எம்.எல்.ஏக்களுக்கும் அறிவித்தது.
மதியம் 2 மணிக்கு மேல் கூட்டம் என மெசேஜ் போடப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் வழக்கம்போல நீலாங்கரை வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு வந்துவிட்டார். மதியம் வரை அங்கே அதிகாரிகளுடன் சில முக்கியமான சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
டிஜிபி மகேஸ் குமார் அகர்வாலும், உளவுத்துறை ஐ.ஜி அஸ்ராவும் முதல்வரைச் சந்தித்திருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு சம்பந்தமாகவும் குதிரை பேர விவகாரமாகவும் முதல்வர் அப்டேட்களைக் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார். மேலும் சில சந்திப்புகளை நடத்திவிட்டு மதிய உணவையும் முடித்துவிட்டு 3 மணிக்கு முதல்வர் தலைமைச் செயலகத்திலிருந்தே கிளம்பியிருக்கிறார்.

மதியம் 1 மணியிலிருந்தே எம்.எல்.ஏக்கள் ரெசார்ட்டுக்கு வரத் தொடங்கியிருந்தனர். எம்.எல்.ஏக்களின் உதவியாளர்கள் கூட ரெசார்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகர் என்பதால் ஜே.சி.டி.பிரபாகர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. வி.எஸ்.பாபுவுக்கு உடல்நிலை சரியில்லை. அமைச்சர் ஸ்ரீநாத் அரசு வேலையாக வெளியே சென்றிருந்தார். இவர்களைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ரெசார்ட்டில் குறித்த நேரத்தில் ஆஜராகியிருந்தனர்.
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி எதிர்க்கட்சிகளின் கண்டன அறிக்கைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் துணை சபாநாயகர் ரவிசங்கரும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷும் இறுகிய முகத்துடனேயே கூட்டத்துக்கு வந்திருந்தனர். முதல்வரின் கான்வாய் சரியாக மாலை 3:50 மணிக்கு ரெசார்ட்டுக்குள் நுழைந்துவிட்டது.
முதல்வரைக் கண்டவுடன் எம்.எல்.ஏக்கள் கைத்தட்டி உற்சாகமாக, புன்சிரிப்புடனேயே அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி ஹாலுக்குள் நுழைந்திருக்கிறார் முதல்வர்.

முதலில் ஆனந்தும் ஆதவ் அர்ஜுனாவும் மைக் பிடித்திருக்கின்றனர். 'தலைவரின் முகத்துக்காகத்தான் நாம் எல்லாம் ஜெயித்திருக்கிறோம். அதை உணர்ந்து பொறுப்போடு மக்கள் பணி ஆற்ற வேண்டும். ஆனால், சில எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கி கட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் எச்சரித்துக் கொண்டே இருக்க மாட்டோம். இனிமேலும் எதாவது தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை பாயும். பொறுப்பாக நடந்துக் கொள்ளுங்கள்' எனக் கறாராகவே பேசியிருக்கின்றனர்.
இதன்பிறகுதான் பத்து பத்து எம்.எல்.ஏக்களாக குழுக்குழுவாக அழைத்து முதல்வர் தனியாகச் சந்தித்திருக்கிறார். முதலில் பெண் எம்.எல்.ஏக்களை வரச் சொல்லியவர், 'பெண்கள்தான் நம் ஆட்சிக்கே பெரும் பலம். நீங்கள் எல்லாரும் துணிச்சலாக களத்தில் நின்று நம்முடைய மகளிர் வாக்கு வாங்கியைச் சோடைபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறி வேட்டி, சேலையை பரிசாகக் கொடுத்து தீபாவளி வாழ்த்தும் கூறி அனுப்பியிருக்கிறார்.
அடுத்தடுத்து வந்த எம்.எல்.ஏக்களிடம், 'ஆறு மாத ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். நம்முடைய நலத்திட்டங்களை மக்களிடம் பிரசாரமாக எடுத்துச் செல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். உங்களுக்கு எதாவது பிரச்னை என்றால் மாவட்ட அமைச்சரை நீங்கள் அணுகலாம். அப்படியும் இல்லையென்றால் நீங்கள் என்னையே சந்தித்து முறையிடலாம். தொகுதிப் பிரச்னைக்காகவும் கட்சிப் பிரச்னைக்காகவும் நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். பொதுவெளியில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

நமக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் நாம் விழுந்துவிடக் கூடாது. மக்கள் பணியில் மட்டும் முழுக்கவனம் செலுத்துங்கள். உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாம் நல்லதாகவே நடக்கும்' என நம்பிக்கை வார்த்தைகள் கூறி, சிலரின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு, 'நான் உங்களின் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாகச் செயல்படுகிறீர்கள்' என்றும் பாராட்டியிருக்கிறார்.
எல்லா எம்.எல்.ஏ-க்களிடமும் பேசி முடித்த பிறகு துணை சபாநாயகரையும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவையும் தனியாக அழைத்திருக்கிறார். இறுக்கமான முகத்தோடு அவர்களிடம் பேசிய முதல்வர், 'ஆட்சியமைத்த முதல் நாளிலிருந்தே இங்கே யார் தவறு செய்தாலும் நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன், தூக்கி எறிந்துவிடுவேன் என எச்சரித்து வருகிறேன். அப்படியிருந்தும் நீங்கள் கட்சிக்கு அவப்பெயரை தேடிக் கொடுத்திருக்கிறீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள்' நான் ஸ்டாப்பாக ரைடு விட்டிருக்கிறார்.
முதல்வரின் எரிச்சல் வார்த்தைகளில் நொந்து போன கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீடியாக்களிடம் முகத்தைக் காட்டிக் கொள்ளாமல் கடைசி ஆளாக ரெசார்ட்டிலிருந்து காரைக் கிளப்பிச் சென்றார்.
தீபாவளி கிப்ட் கொடுப்பதற்கு முதல்வர் மூன்று மணி நேர கூட்டத்தை நடத்தியதைப் போல தோன்றும். ஆனால், வேட்டி சேலையோடு முதல்வர் ஒரு முக்கிய மெசேஜையும் எம்.எல்.ஏக்களுக்குக் கடத்தியிருக்கிறார் என்கின்றனர் தவெகவின் சீனியர்கள். 'கட்சி ஆட்களை குழுக்களாக தனித்தனியாக அழைத்து பேசுவது முதல்வர் வாடிக்கையாகக் கையாளும் ஸ்ட்ராட்டஜி.
தவெகவின் வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்பும் வாக்குப்பதிவுக்கு பின்பும் இப்படித்தான் சிறுசிறு குழுக்களாக தனியாகச் சந்தித்துப் பேசினார். இது அவர்களுக்கு முதல்வருடனான பிணைப்பை இன்னும் அதிகப்படுத்தும். ஒரு பெர்சனல் கனெக்ட்டை உருவாக்கும். முதல்வரே நம்மை அழைத்து கவனம் கொடுத்து பேசுகிறார் எனும் அந்த எண்ணம் அவர்களை கட்சிக்கு விசுவாசியாக மாற்றும். எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏக்களை விலை பேச நினைக்கும் இந்தத் தருவாயில் இது ஒரு முக்கியமான மூவ்' என்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார்களா எனும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்த மூன்று மணி நேர கூட்டத்தின் மூலம் ரெசார்ட் பாலிட்டிக்ஸூக்கு டீசர் காட்டியிருக்கிறார் முதல்வர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)