திருத்தணி: வீல்சேருடன் அம்மாவை ரயிலில் தள்ளி கொலை செய்த மகன் - அதிர்ச்சி பின்னணி

Aug 20, 2026 - 22:30
0
திருத்தணி: வீல்சேருடன் அம்மாவை ரயிலில் தள்ளி கொலை செய்த மகன் - அதிர்ச்சி பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி (71). இவரின் கணவர் பத்தாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் அந்த ஓய்வூதிய பணத்தில் பத்மாவதி வாழ்ந்து வந்தார். இவரின் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பத்மாவதியின் கடைசி மகன் பார்த்தசாரதி. இரண்டு மகன்கள் இவரை பார்க்க வருவதில்லை கடைசி மகன் பார்த்தசாரதி (45). இவருக்கு திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் பார்த்தசாரதி மதுவுக்கு அடிமையானவர். அதனால் பத்மாவதியை பார்த்தசாரதிதான் கவனித்து வந்தார். இந்தநிலையில், பத்மாவதிக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதோடு பக்கவாதம் ஏற்பட்டு அவரால் பேசவும் நடக்கவும் முடியவில்லை. அதைத் தொடர்ந்து வீல்சேருடன் பத்மாவதி வாழ்ந்து வந்தார்.

மூதாட்டி பத்மாவதி

இந்தநிலையில் பெற்ற தாயான பத்மாவதியை பார்த்தசாரதி சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பத்மாவதி, வியாதியோடு அவதிப்படுவதையும் பார்த்தசாரதியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே மதுவுக்கு அடிமையான பார்த்தசாரதி, சம்பவத்தன்று மது அருந்தியிருக்கிறார். பின்னர் பத்மாவதியை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வீல்சேரில் பத்மாவதியை மணவூர் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் பார்த்தசாரதி. பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதிக்கு வீல்சேரில் பத்மாவதியை தள்ளிக் கொண்டு வந்த பார்த்தசாரதி ஈவு இரக்கம் இல்லாமல் அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தள்ளிவிட்டிருக்கிறார். இதில் வீல் சேரோடு பத்மாமவதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பார்த்தசாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூதாட்டி பத்மாவதி இறந்த தகவல் கிடைத்ததும் அரக்கோணம் ரயில்வே போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி பத்மாவதியால் நடக்க முடியாது என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாள பகுதிக்கு யார் தள்ளிக் கொண்டு வந்தார் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மணவூர் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பத்மாவதியை வீல்சேரில் உட்கார வைத்து அவரின் மகன் பார்த்தசாரதி தள்ளி வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. உடனடியாக பார்த்தசாரதியிடம் போலீஸார் விசாரித்தனர். முதலில் நான் இந்தக் கொலையை செய்யவில்லை என மறுத்த பார்த்தசாரதி, போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்தனர்.

கைது
கைது

இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் கூறுகையில், ``மதுவுக்கு அடிமையான பார்த்தசாரதி, ஆவடியில் உள்ள நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்த பார்த்தசாரதி, அம்மா பத்மாவதியை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்திருக்கிறார். பார்த்தசாரதியின் அண்ணன்கள் யாரும் பத்மாவதியை கவனித்துக் கொள்ள முன்வரவில்லை. அதனால்தான் இந்தக் கொடூர முடிவை பார்த்தசாரதி எடுத்திருக்கிறார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User