ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்: விளக்கேற்றி வழிபட்டால் பிரச்னைகள் தீரும்!

Apr 3, 2026 - 08:31
 0
ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்: விளக்கேற்றி வழிபட்டால் பிரச்னைகள் தீரும்!

காஞ்சியில் நடைபெற்ற சிவ - பார்வதி திருமணத்தைத் தரிசிக்க வந்த அகத்தியர், கௌதமர், அத்திரி, பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீகி, காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள், மனித குலம் நோயின்றி வாழ்வதற்காக, கல்ப மூலிகைகள் பற்றிய ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பினர்.

காஷ்யபர் தவிர்த்த பிற ஆறு ரிஷிகளும் பாலாற்றின் கரையில் அமர்ந்து ஈசனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவ்வாறு ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்கள்தாம், `ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்' என்று போற்றப்படுகின்றன. அதையே தமிழில் ஆறு காடுகள் கொண்ட பகுதி என்பதால் ஆற்காடு என்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்
ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்

அப்படிப்பட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்று குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்.

குடிமல்லூர் வாலாஜாவில் இருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி, ஒரு காலத்தில் குடமல்லிகை நிறைந்த காடாக இருந்ததால் ‘குடமல்லிகா வனம்’ என்று அழைக்கப்பட்டதாம். இப்போது குடிமல்லூர் என்றாகிவிட்டது.

இங்கே அம்பாள் திரிபுரசுந்தரியுடன் அழகுற கோயில் கொண்டுள்ளார் திருவந்தீஸ்வரர். அத்ரி முனிவர் வழிபட்டதால் அத்திரீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது இந்தக் கோயில்.

சுமார் 120 வருடங்களுக்கு முன்பு, இவர்களின் முன்னோர்களான தியாகராஜ ஐயரும் அவரின் சகோதர் முனிரத்தின ஐயரும் சிவாலயம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள், கட்டுமானப் பணிக்காக பாலாற்றங்கரையில் மணல் கொண்டு வர சென்றபோது, அங்கே சுயம்பு வடிவாய் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம், புராண காலத்தில் அத்ரி முனிவரால் பூஜிக்கப்பட்டது என்பதை அறிந்து, அந்த லிங்க மூர்த்தத்தை தாங்கள் கட்டிவந்த கோயிலில் எழுந்தருளச் செய்தார்களாம்.

ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்
ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்

அத்ரி மகரிஷி அமர்ந்த நிலையில் இருந்து சிவனை பல காலம் பூஜித்ததால், அவருக்குச் சிவனருள் கைகூடியதாம். இதையொட்டி இந்த ஆலயத்தில், அமர்ந்த நிலையில் உள்ள அத்ரி முனிவரின் திருமேனியை, கருவறைக்கு எதிரே இறைவனை நோக்கி ஸ்தாபித்துள்ளனர். அவர்கள் 1898-99-ம் வருடம் கோயிலைக் கட்டி முடித்துக் குடமுழுக்குச் செய்துள்ளனர்.

இந்த விவரங்களை கருவறைக்கு வெளியே மேற்கூரையில் உள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். பிற்காலத்தில் 1978, 1998 ஆகிய வருடங்களில் மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது, இந்த வருடம் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

ஆலய நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் மேற்குப்புறத்தில் சிவன், பார்வதி, விநாயகர் திருமேனிகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் இடப்புறம் கல்யாண மண்டபமும், விநாயகர் சந்நிதியும் உள்ளன.

வலம் வரும்போது கொடி மரம், பலிபீடம், நந்திதேவரைத் தரிசிக்கலாம். பிரமாண்ட மதில் சுவரில் அடிகொன்றாக அகல் விளக்குகள் பதிக்கப்பட்டுள்ளன.

உள் பிராகாரத்தில் கருவறையில் ஈசன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறையின் வெளிபுற சுவர்களில் வண்ண ஓவியங்கள் அழகூட்டுகின்றன. அம்பாள் திரிபுரசுந்தரி தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்கிறாள்.

ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்
ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்

திருவந்தீஸ்வரர் சந்நிதியில் நிற்கும்போதே மனம் ஈசனின் அன்பில் உருகுவதை நம்மால் உணரமுடியும். நம் பிரச்னைகள் அனைத்தும் கரைந்துபோவதைப்போன்ற உணர்வு பெருகுவதை அனுபவிக்கலாம்.

அன்னை திரிபுரசுந்தரி அழகே வடிவானவள். அன்னையை ஒருமுறை தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் ஆவல் உண்டாகும். அதேபோன்று நாமும் பலமுறை சென்று வழிபடும் பாக்கியமும் உண்டாகும் என்கிறார்கள்.

இங்கு வந்து அம்பாள் மற்றும் திருவந்தீஸ்வரர் சந்நிதியில் தீபங்கள் ஏற்றிவைத்து, மனதார வணங்கி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் மகா சிவராத்திரி திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, முருகப் பெருமான், பிரம்மா, மகாவிஷ்ணு, துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், மற்றும் நாக மூர்த்தங்களையும் இங்கே தரிசிக்கலாம். நவகிரகங்களுக்கும் தனிச் சந்நிதி உண்டு.

ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்
ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்

பிரதோஷம், சோமவாரம் முதலான சிவ பெருமானுக்கு உகந்த நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிவனாரை மும்முறை வலம் வந்து மனமுருகிப் பிரார்த்தித்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்; வேண்டிய வரம் கிடைக்கும்.

குருவருளும் திருவருளும் கிடைக்க ஒருமுறை குடிமல்லூர் திருவந்தீஸ்வரரை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0