கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

Apr 21, 2026 - 22:31
 0
கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து;
13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வாகும். திருச்சூர் பூரம் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ளது. பூரம் விழாவுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவாம்பாடி தேவசம் போர்டுக்கு பட்டாசுகள் தயாரிக்கப்படும் முண்டத்திக்கோடு என்ற இடத்தில் இன்று  பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலானதாக இருந்ததை அடுத்து மீட்புப்பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, காம்பவுண்ட் சுவரை உடைத்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

பட்டாசு விபத்து நடந்த பகுதி

சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக தீ எரிந்ததுடன் பட்டாசுகளும் வெடித்து சிதறின. மாலை சுமார் 6 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் அதிக அளவில் புகை எழுந்து வருகிறது. பட்டாசு வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகளும், இறந்தவர்கள் உடலை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகின்றன. வெடிக்காத வெடிமருந்துகள் மீட்புப்பணிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

காயம் அடைந்தவர்களை மீட்டுச் செல்லும் காட்சி

திருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 உடல்களும், மூன்று பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் தெரிவித்தார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில், ஐந்து பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக உள்ளவர்கள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாம்பிள் வெடிக்கட்டுக்கான பட்டாசுகள் தயாரித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0