`கோவை தெற்கு தொகுதி தேர்தலை நிறுத்துங்கள்' - தர்ணாவில் இறங்கிய அதிமுக வேட்பாளர்!

Apr 22, 2026 - 16:32
 0
`கோவை தெற்கு தொகுதி தேர்தலை நிறுத்துங்கள்' - தர்ணாவில் இறங்கிய அதிமுக வேட்பாளர்!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறியதாக தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்தும், தேர்தலை நிறுத்தக் கோரியும் அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று உள்ளதால், ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் வரை ரகசியமாக விநியோகிக்கப்படுகிறது என அம்மன் அர்ஜுனன் ஆவேசமாக குற்றம்சாட்டினார். முறையாகப் புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும், இதனால் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அம்மன் அர்ஜுனன் மற்றும் நிர்வாகிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், "மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. போராட்டம்
அ.தி.மு.க. போராட்டம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன், “வெளி மாவட்ட நபர்கள் (கரூர்க்காரர்கள்) தொகுதியில் தங்கிப் பணப்பட்டுவாடா செய்வதை அதிகாரிகள் தடுக்கவில்லை. சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகார் அளித்தும், பறக்கும் படையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். தெற்கு தொகுதியில் வரலாறு காணாத அளவில் பண விநியோகம் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்” என்றார்.

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த அம்மன் அர்ஜுனன், தேர்தல் நாளன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி மனு அளித்தார். பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து, அம்மன் அர்ஜுனன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிளம்பிச் சென்றனர். முன்னதாக ஆதரவாளர்களிடம் பேசிய அவர், “இதற்கு முன்பு பல லட்சம் ரூபாய் பணத்தை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்துள்ளோம். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதும், வடகோவை பகுதியில் தி.மு.க நிர்வாகிக்கு சொந்தமான லாட்ஜில் வைத்து கரூர்காரர்கள் பணத்தை விநியோகிக்கின்றனர். ஆனாலும் ஆதாரம் கேட்கிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் ஜனநாயகத்தை காக்க நாமே முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0