தன் மரணத்திற்குத் தானே விருந்து வைத்த விசித்திர மனிதன்! - நெகிழ்ந்து போன கிராம மக்கள்

Mar 31, 2026 - 16:01
 0
தன் மரணத்திற்குத் தானே விருந்து வைத்த விசித்திர மனிதன்! - நெகிழ்ந்து போன கிராம மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான, ராகேஷ் யாதவ். திருமணம் செய்துகொள்ளாத இவருக்குத் துணையாக இருந்த இரண்டு சகோதரர்களில் ஒருவர் நோயால் இறக்க, இன்னொருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். பூர்வீகச் சொத்துகளை உறவினர்களுக்கே தானமாகக் கொடுத்துவிட்டு, ஒரு சிறிய குடிசையில் தனி மரமாக வாழ்ந்து வருகிறார் ராகேஷ்.

அரசு தரும் முதியோர் உதவித்தொகையும், கையில் எஞ்சியிருக்கும் சிறு சேமிப்புமே அவரது வாழ்வாதாரம். ஆனால், அவரை பணக்கஷ்டத்தை விட 'தனிமை' என்னும் வலிதான் அதிகம் வாட்டியது.

ராகேஷ் யாதவ்
ராகேஷ் யாதவ்

"நான் செத்த பிறகு எனக்கு யார் இறுதிச்சடங்கு செய்வார்கள்? ஊருக்கு ஒருவேளை சோறு போடக்கூட ஆள் இல்லையே?" – இந்தக் கேள்வி ராகேஷை நிம்மதியாக உறங்க விடவில்லை. மரணத்திற்குப் பிறகு நடக்கும் 13-ம் நாள் சடங்கான 'தெரவி' விருந்தை, ஊர் மக்கள் புறக்கணித்துவிடுவார்களோ அல்லது யாரும் செய்ய முன்வரமாட்டார்களோ என்ற அச்சம் அவருக்குள் எழுந்தது.

உடனே ஒரு முடிவெடுத்தார். "மரணத்திற்குப் பின் கிடைக்கும் மரியாதையை விட, நான் வாழும்போதே என் கையால் ஊர் மக்களுக்கு உணவளிக்க வேண்டும்."

திருமணப் பத்திரிகையைப் போலவே ஓர் அழைப்பிதழை அச்சடித்தார். ஆனால் அதில் இருந்த வரிகள் ஊர் மக்களை உலுக்கியது:

"எனது உயிருள்ள 'தெரவி' விருந்துக்கான அழைப்பு. நான் தனிமையில் இருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும்போதே இந்த அன்னதானத்தைச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும்."

தனிமை
தனிமை

கையில் பத்திரிகையுடன் அவர் ஊர் ஊராகச் சென்றபோது, மக்கள் முதலில் கிண்டல் செய்தனர். "என்ன இவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?" என்று கேட்டனர். ஆனால், அவர் கண்களில் இருந்த தனிமையின் வலியைக் கண்டபோது அந்த ஏளனம் மறைந்து, பெரும் நெகிழ்ச்சி உருவானது.

தனிமை
தனிமை

மார்ச் 30, 2026 அன்று அந்த விசித்திரமான விருந்து நடைபெற்றது. மதச் சடங்குகள் எதுவும் இல்லை, ஒப்பாரிகள் இல்லை; அங்கு இருந்தது ராகேஷின் அன்பும் அவர் பரிமாறிய உணவும் மட்டுமே. அவர் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக, சுமார் 1,900 பேர் அந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

தன்னைத் தகனம் செய்ய ஆள் இருக்குமா என்று அஞ்சிய ராகேஷிற்கு, அன்று 1,900 கைகள் ஆதரவாக நீண்டன. வயிறார உண்ட மக்கள், ராகேஷின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "நீ இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்" என்று வாழ்த்திச் சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0