''இறைவன் ஒருவன் தானே''- மீனாட்சி அம்மனை வரவேற்ற இசுலாமியர்கள்; சமத்துவம் பேசும் மதுரை சித்திரை விழா!
மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19 அன்று சிறப்பாக கொடியேற்றபட்டு வெகு விமர்சையாக நடந்துகொண்டிருக்கிறது. மதுரை அரசி மீனாட்சி அம்மையும், சுந்தரேஸ்வர பெருமானும், பிரியாவிடை தாயாரும் தினந்தோறும் மதுரையின் வீதிகளில் உலா வந்து நகரத்தை அலங்கரித்துக் கொண்டிருகின்றனர், அந்த வகையில் நான்காம் நாள் விழாவான இன்று மீனாட்சி அம்மனும், சொக்கநாதர், பிரியாவிடையும் தங்க பல்லக்கில்; எப்போதும் வலம் வரும் நான்கு மாசி வீதிகளில் அல்லாமல்; வில்லாபுரம் , அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம் , கீரைத்துறை பனையூர் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் வழியாக வந்து காட்சி தரும் நிகழ்வு, பாகற்காய் மண்டகப்படி.
இதனை ஒட்டி மீனாட்சி அம்மன் தெற்குவாசல் வழியாக கோவிலை சென்றடையும் பாதையில், மதுரையின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான தெற்குவாசல் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இன்று அந்த பகுதியில், இரண்டு மதங்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக ஒற்றுமையின் நிகழ்வாக திருவிழா அரங்கேறி அனைவரையும் மகிழ்வித்தது.
அழகான இந்த மாலைப் பொழுதில் ஒரு பக்கம் "அல்லாஹு அக்பர்" என ஓதப்பட்டுக் கொண்டிருக்க மறுபக்கம் "பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி" என்று இசைக்கப்பட்டது. பள்ளிவாசலைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் ரோஸ் மில்க், ரஸ்னா, லட்டு என இனிப்புகளையும் குளிர்பானங்களையும் கொடுத்து அன்புடன் வரவேற்றனர்.
மீனாட்சி அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு உள்ளே சென்று அங்கே அல்லாவையும் வணங்கிச் சென்றனர்.
கருப்பசாமி, மீனாட்சியம்மன், முருகன், சிவன் என வேடமிட்டு க்யூட்டாக காட்சி தரும் குட்டி குழந்தைகள் அனைவரையும், அந்த பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் தோள்களில் அப்படியே தூக்கிக் கொண்டு சென்று ரோஸ் மில்க் கொடுத்து அன்பாக வழி அனுப்பி வைத்தனர். சிவ முரசு கொட்டுவோர், கோலாட்டம் ஆடும் பெண்கள், பல்லாக்கு தூக்கும் நண்பர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் தாமாக முன் சென்று குளிர் பானங்களை வழங்கினர்.
இப்படி மத நல்லிணக்கத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் அளவிற்கு, திருவிழா நடந்து கொண்டிருக்க பள்ளிவாசலில் ரோஸ் மில்க் வழங்கிக் கொண்டிருந்த ஷாஜகான் அவர்களிடம் பேசினோம், "வருஷா வருஷம் மீனாட்சி அம்மன் பாவக்கா மண்டபாடி அன்று இந்தப் பக்கம் செல்லும்போது, பள்ளிவாசல் சார்பாக வரும் பக்தர்கள் தாகம் தணிப்பதற்காக நாங்கள் இதனை தொடர்ந்து செய்து வருகிறோம், இது ஏழாவது வருடம்.
சித்திரை திருவிழாவில் இந்த நாள்ல தெற்கு வாசல் இரண்டு மதத்தையும் ஒன்று சேர்க்குற பகுதியா மாறிடுது. எம்மதமும் சம்மதம் தானே, நாங்களும் மீனாட்சி அம்மாவுக்கு மரியாதை செலுத்தி இந்த திருவிழாவுல கலந்துக்குற விதமா இப்படி கொண்டாடுகிறோம்.
கடவுளுக்கு பேர் வேற வேற இருக்கலாம் ஆனால் இறைவன் ஒருவன் தானே, இதை செய்றதே அந்த இறைவன் பாக்கியம் என்று கருதுகிறோம். இங்க எந்த பாகுபாடும் கிடையாது; ஒரு மாமனா, மச்சானா, மாப்பிள்ளையா, எல்லாரும் ஒன்னா இங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம். இதுதான் நம்ம மதுரை, நம்ம இந்தியாவும் கூட" என்றார் புன்னகையுடன்.
மீனாட்சி அம்மனை வழிபட வந்த பக்தர், ஓய்வு பெற்ற பேராசிரியர் சேதுராமநாதன், பள்ளிவாசல் உள்ளே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார் அவரிடம் பேசினோம், "என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் இந்த பள்ளிவாசலில் இருக்கிறாங்க, அவங்க வேற மதத்துக்காரர்களா நான் பார்க்கிறது இல்ல.
மனிதனும் தெய்வமும் ஒன்னு னு சொல்லுவாங்க. இங்கு எந்த வித்தியாசமும் கிடையாது, நம்ம அன்னதானம் பண்ற மாதிரி அவங்க வர்ற பக்தர்களுக்கு குளிர்பானம் கொடுக்கிறாங்க. அதே மாதிரி பல்லக்கு வரும்போதும் நம்ம எப்படி மாலை மரியாதை செய்து வணங்குவோமோ அதே மாதிரி அவங்களும் பண்றாங்க. அந்த வகையில் மத நல்லிணத்திற்கு மதுரை ஒரு உதாரணம். இது இன்னைக்குன்னு மட்டும் இல்லாம என்னைக்குமே இருக்கணும். இருக்கும்!" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0