கன்னியாகுமரி மாவட்டம், பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்: ஆயுள் பலம் அருளும் மிருத்யுஞ்ஜய அர்ச்சனை!

Apr 22, 2026 - 09:01
 0
கன்னியாகுமரி மாவட்டம், பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்: ஆயுள் பலம் அருளும் மிருத்யுஞ்ஜய அர்ச்சனை!

சிவாலயம் என்றாலே நந்தி பகவான் நிச்சயம் கோயில்கொண்டிருப்பார். நந்தி மாறுபட்ட திருக்கோலத்தில் இருப்பதைத் தரிசித்திருக்கிறோம். ஆனால் அவரே வராஹ வடிவில் இருப்பதைக்காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்தின் தென் கோடிக்கு வரவேண்டும்.

பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் அரண்மனைப் பகுதியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் மகாதேவர் ஆலயத்தில்தான் நந்திதேவர் வராஹ அம்சத்தில் அருள்கிறார்.

இங்கே பாக்யசூக்த அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் நல்ல வேலை கிடைக்கும், செய்தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்கிறார்கள்.

மகாபாரதக் காலத்தில், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்த சம்பவத்தை அறிவோம். அர்ஜுனனின் சிவபக்தியை உலகறியச் செய்ய சித்தம் கொண்டார் சிவனார். அவரின் சித்தப்படி வராஹமாக (பன்றி) வடிவெடுத்து, இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தார் நந்திதேவர்.

ஆவேசமாக வந்த வராஹம் பெரும் உறுமுலுடன் அட்டகாசம் செய்தது. அதனால் அர்ஜுனனின் தவம் கலைந்தது. கோபம் கொண்டவன், பன்றியை நோக்கி அம்பு செலுத்தினான். அதே வேளையில், வேடுவன் உருவில் அங்கு வந்த சிவனாரும் பன்றியை நோக்கி அம்பு செலுத்தினார்.

பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்
பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்

வேட்டையாடப்பட்ட பன்றி யாருக்குச் சொந்தம் என்பதில், அர்ஜுனனுக்கும் வேடனுக்கும் இடையே சண்டை மூண்டது. இருவரும் விற்போர் புரிந்தனர். ஒரு கட்டத்தில் களைப்புற்ற அர்ஜுனன், அம்புகள் தீர்ந்து போகவே... கையில் இருந்த வில்லால் வேடனின் தலையில் ஓங்கி அடித்துவிட்டுக் கீழே சாய்ந்தான்.

தரையில் விழுந்தவன், அங்கிருந்த கல் ஒன்றையே சிவலிங்கமாக பாவித்து, அருகிலுள்ள செடிகளில் மலர்களைப் பறித்து அர்ச்சனை செய்தான். `தேகத்தில் சக்தி கொடு’ என்று வேண்டினான். ஆனால், அவன் போட்ட மலர்கள் அனைத்தும் வேடனின் தலைமீதே விழுவதைக் கண்டான்.

வேடனாக வந்திருப்பது சாட்சாத் மகாதேவரே என்பதை உணர்ந்துகொண்டான். தனது தவற்றுக்கு மன்னிப்பு வேண்டியதுடன், அவரைத் தொழுது வணங்கினான். அர்ஜுனனை ஆசீர்வதித்த மகாதேவர் அவனுக்குப் பாசுபதாஸ்திரம் அளித்து அருள்புரிந்தார். எனவே இந்த ஈசனுக்கு கிராதமூர்த்தி என்கிற திருநாமமும் உண்டு.

இதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு, 'பன்றிப்பாகம்' என்று பெயர்பெற்றதாம். அதுவே மருவி `பன்னிப்பாக்கம்’ என்றானது என்கிறார்கள். இன்றைக்கும் இந்தத் தலத்தில் அருளும் நந்திதேவர், பன்றியின் முகச் சாயலுடன் அருள்பாலிப்பதைக் காணலாம்.

பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்
பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்

இந்த ஆலயத்தில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளைக் காணலாம். முற்காலத்தில் இவ்வூர் திருப்பானைக்குளம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. அந்தக் காலத்தில், பன்னிப்பாக்கம் சிவாலயத்தில் மூன்று வேளை பூஜைகளின் போதும் புல்லாங் குழல் இசைக்கப்பட்டதாகவும் தகவல் சொல்கின்றன கல்வெட்டுகள்.

முன்புறமும் பின்புறத்திலும் சிறியதும் பெரியதுமாக குளங்கள் அமைந்திருக்க, இயற்கை எழிலுடன் திகழ்கிறது பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம். முன்புறம் உள்ள சிறிய குளத்தில் பக்தர்கள் நீராடுகின்றனர்.

அர்ஜுனன் எய்த அம்பினால் உருவான குளம் இது என்கிறார்கள். கோயிலுக்குப் பின்னால் உள்ள குளம், புதர் மண்டி, பயன்படுத்த முடியாதபடி உள்ளது. இதன் கரையில் ஓர் அரச மரத்தடியில் அம்மனின் அம்சமாக சூலம் மற்றும் முருகனின் அம்சமாக வேல் இருப்பதைக் காணலாம்.

ஆலயப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதிக்குப் பின்னால், இரண்டு சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அண்ணன், தம்பி என்று அறியப்படும் இந்தச் சித்தர்களின் சமாதிகளிலும் தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்தத் தலத்தில் நாகர் மற்றும் பைரவர் சந்நிதிகளையும் காணலாம். பைரவரின் சந்நிதியும் மேற்கூரை இல்லாமல் திறந்தவெளியாகவே உள்ளது. மகாதேவர் ஆலயத்துக்கு இந்தப் பைரவரே காவல் என்பது நம்பிக்கை. கோயிலுக்குள் கருவறைக்கு இடப்புறம் உள்ள தர்ம சாஸ்தா பீடமும் திறந்த வெளியில் அமைந்துள்ளது. இந்தச் சாஸ்தாவின் கற்சிலை பின்னமாகிவிட்டதால், கவசம் சாற்றியுள்ளனர்.

மகாதேவர் அருளும் கருவறை மூன்றடுக்குக் கட்டடங்களுடன் திகழ்கிறது. வலம் வருவதற்கு சுற்றம்பலம் உள்ளது. இரண்டு சிறிய மண்டபங்களைத் தாண்டிதான் கருவறைக்குள் செல்ல முடியும். அங்கு செல்ல அர்ச்சகருக்கு மட்டுமே அனுமதி.

பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்
பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்

தினமும் இரண்டுகால பூஜை உண்டு. மகா சிவராத்திரியை ஒட்டி 3 நாள்கள் திருவிழா நடைபெறும். சிவபெருமானுக்கு உகந்த திங்கள் கிழமைகளில் சிறப்பு வழிபாடும் மதியம் அன்னதானமும் நடைபெறும். மேலும் பிரதோஷ வழிபாடு, தமிழ் மாத கடைசித் திங்களன்று விளக்குப்பூஜையும் இங்கே விசேஷம்.

இங்கு வந்து மிருத்யுஞ்ஜய அர்ச்சனை செய்தால் ஆரோக்கியம் மேம்படும்; ஆயுள் பலம் கூடும். சுயம்வர அர்ச்சனை செய்து வழிபட்டால், கல்யாண வரம் கிடைக்கும். அதேபோல், பாக்ய சூக்த அர்ச்சனை செய்து வழிபட்டால், நல்ல வேலை வாய்ப்பு, தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

பால்பாயாசம், கடும் பாயசம், உண்ணியப்பம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பு நைவேத்தியங்கள். அஷ்டமியில் பைரவருக்குத் தயிர்சாதம், வடை சமர்ப்பித்து வழிபடுவார்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் தீவினைகள், சத்ரு பயம், தோஷ பாதிப்புகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று பன்னிபாக்கம் மகாதேவரை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0