The Odyssey: இந்தியா வரும் நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட் - ரசிகர்களுக்கான வரலாற்றுத் தருணம்!

Jun 18, 2026 - 21:01
0
The Odyssey: இந்தியா வரும் நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட் - ரசிகர்களுக்கான வரலாற்றுத் தருணம்!

உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். 'ஓப்பன்ஹைமர்' (Oppenheimer) படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் 'தி ஒடிஸி' (The Odyssey). இந்தப் படம் உலகம் முழுவதும் ஜூலை 17, 2026 அன்று வெளியாகிறது. இதன் உலகளாவிய வெளியீட்டிற்கு முன்பாக, படத்தின் சிறப்புக் காட்சியை இந்தியாவில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட்
நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட்

இதில் கலந்துகொள்ள இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர் எம்மா தாமஸ், படத்தின் முன்னணி நடிகர்களான மாட் டேமன், டாம் ஹாலண்ட் ஆகியோர் மும்பை வரவுள்ளனர். லண்டன், பாரிஸ், நியூயார்க் ஆகிய உலகப் பெருநகரங்களுக்கு இணையாக மும்பையிலும் இந்த படத்தின் பிரீமியர் காட்சி நடப்பது இந்திய ரசிகர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. கிறிஸ்டோபர் நோலன் படமொன்று இந்தியாவில் பிரீமியர் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

'தி ஒடிஸி' திரைப்படம் பல பிரமாண்டங்களை உள்ளடக்கியது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற பழமையான கிரேக்க காவியமான 'ஒடிஸி'யை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாகா நாட்டின் அரசனான ஒடிசியஸ் தனது நாட்டை நோக்கியும், தனது மனைவி பெனிலோப்பை நோக்கியும் மேற்கொள்ளும் 10 ஆண்டு கால சாகசப் பயணமே இதன் கதை.

The Odyssey
The Odyssey

ஐமேக்ஸ் கேமராக்களைப் பயன்படுத்தி முழுவதும் படமாக்கப்பட்ட முதல் முழு நீளத் திரைப்படம் இதுதான். சுமார் 250 மில்லியன் டாலர் (தோராயமாக 2000 கோடி ரூபாய்) பொருட்செலவில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை (CGI) குறைத்துக் கொண்டு, நிஜமான உணர்வைக் கொடுப்பதற்காக இத்தாலி, ஐஸ்லாந்து, கிரீஸ், மொராக்கோ, ஸ்காட்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அரசன் ஒடிசியஸ் கதாபாத்திரத்திற்காக நடிகர் மாட் டேமன் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டு தனது எடையை 76 கிலோவாக குறைத்துள்ளார். மேலும் நோலன் ஒட்டுத் தாடியை விரும்பாததால், மாட் டேமன் நிஜமாகவே ஒரு வருடத்திற்கும் மேலாக தாடி வளர்த்து நடித்துள்ளார்.

ஸ்பைடர்மேன் புகழ் டாம் ஹாலண்ட், நடிகைகள் ஆன் ஹாத்வே, செண்டாயா, சார்லிஸ் தெரோன், பேட்மேன் புகழ் ராபர்ட் பேட்டின்சன் என ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பலர் இதில் நடித்துள்ளனர்.

The Odyssey
The Odyssey

நோலன் தனது படங்களில் Green Screen போன்ற கணினி வரைகலை (VFX/CGI) தொழில்நுட்பங்களை முடிந்தவரை தவிர்த்து விடுவார். வெடிகுண்டு காட்சிகளாக இருந்தாலும் சரி, விண்வெளி காட்சிகளாக இருந்தாலும் சரி, அதனை நிஜமாகவே செட் அமைத்து படமாக்குவது தான் இவரது வழக்கம்.

OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், "திரைப்படங்கள் தியேட்டரில், குறிப்பாக IMAX திரையில் பார்க்கப்பட வேண்டியவை" என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நோலன்.

இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டார்க் நைட், டன்கிர்க் போன்ற காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்த இவர், கடந்த ஆண்டு 'ஓப்பன்ஹைமர்' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார்.

நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட்
நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட்

இந்நிலையில் நோலன் இந்தியா வருவது, ஹாலிவுட் திரையுலகம் இந்தியாவை வெறும் ஒரு சிறிய சந்தையாகப் பார்க்காமல், லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு இணையாக வைத்துப் பார்ப்பது இந்திய சினிமாவின் வியாபார சந்தை எவ்வளவு பெரிது என்று காட்டுகிறது.

ஒரு பிரமாண்டமான வரலாற்றுப் புனைவை, முழுநீள ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில், நிஜமான லொகேஷன்களில் நோலன் எடுத்திருக்கிறார் என்பதே 'தி ஒடிஸி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிறச் செய்துள்ளது. உலக அளவிலான நோலன் ரசிகர்களுக்கு ஜூலை மாதம் ஒரு மாபெரும் திரை விருந்து காத்திருக்கிறது!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User