`தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு' - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

Jun 18, 2026 - 21:31
0
`தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு' - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஏப்ரல் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்போது அமலில் இருந்ததால், அப்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்ஸை மாற்றிவிட்டு சாய்குமாரை தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளராக நியமித்தது.

பணி நீட்டிப்பு முடிவு

தேர்தலுக்குப் பின்பு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பின்பு கடந்தகால அரசில் பதவி வகித்த ஜூனியர் முதல் சீனியர்கள் வரையிலான பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புதிய டி.ஜி.பி-யும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமைச் செயலாளரான சாய்குமார் ஐ.ஏ.எஸ் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை. வழக்கமாக ஒரு புதிய அரசு அமையும்போது முதலில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்ட பின்புதான், பிற அதிகாரிகளின் மாற்றங்களை தலைமைச் செயலாளரை வைத்து அரசு மேற்கொள்ளும். ஆனால் தவெக அரசு அமைந்த பின்பு இந்த நடைமுறை தொடரவில்லை.

தலைமைச் செயலகம்

இந்நிலையில் தான் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஆக்ஸ்ட் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவரை பணி நீட்டிக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு அகில இந்திய சேவை விதிகளின்படி எடுக்க வேண்டும்.

சாய்குமார் ஐ.ஏ.எஸ்

அப்படியே எடுத்தாலும் பணி ஓய்விற்கு பின் 3 மாதங்கள் முதலில் நீட்டிப்பு செய்யப்படுவார்கள் அதன்பின் மேலும் 3 மாத காலம் நீட்டிப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் அந்த அதிகாரிகளின் பணி நன்மதிப்பை பொருத்தே மத்திய அரசு முடிவெடுக்கும். ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தொடர்ந்து அரசுப் பணியில் இருப்பது பணி நீட்டிப்பு என்று சொல்லப்பட்டாலும், அரசு பதிவுகளின் படி அதனை மறுநியமனம் (Re-employment) என்று சொல்வார்கள்.

மாறிய நடைமுறை 

வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முடிவினை, மாநில அரசுக்கு அந்தக் குறிப்பிட்ட அதிகாரி ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே எடுக்கும், ஆனால் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான தேவை ஏன் எழுந்தது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்குள் பேசிக் கொள்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் டிஜிபி-யை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி பொறுப்பு டிஜிபி நியமித்ததற்கு... `சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கும் அதுவே காரணம்' என திமுக-வை விமர்சித்த இன்றைய முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தகுதியுடன் இருந்தும் ஏன் சாய்குமார் ஐ.ஏ.எஸ்ஸுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

விஜய்
விஜய்

தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்., மதுரை மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைச் செயலாளர் - 1 ஆகவும் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User