அறிவியலின் ஒளி, அங்கீகாரத்தின் நிழல் – 'டி.என்.ஏ நாயகி' ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்

Apr 24, 2026 - 15:02
 0
அறிவியலின் ஒளி, அங்கீகாரத்தின் நிழல் – 'டி.என்.ஏ நாயகி' ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அறிவியல் உலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினின் வாழ்க்கை ஆய்வுகளால் மட்டுமின்றி போராட்டங்கள், தவறான புரிதல்கள் ஆகியவற்றாலும் நிரம்பி இருந்தது. அக்காலத்தில் நிலவிய பாலினப் பாகுபாடும் ஜேம்ஸ் வாட்சன் எழுதிய 'டபுள் ஹெலிக்ஸ்' என்ற நூலும் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினினை பிறரோடு ஒத்துழைக்காத கடினமான நபராக சித்தரித்தது.

உண்மையில் ரோசாலிண்ட் ஒழுக்கமான, தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்திய நேர்மையான விஞ்ஞானி. டி.என்.ஏ சுருள் கட்டமைப்பைப் பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஊடுகதிர் (எக்ஸ்ரே கதிர்) தாக்கம் கொண்ட கருவியை முறையான கவசமின்றி கையாண்டதால் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்

ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் 1920-ஆம் ஆண்டு லண்டனில் கல்வி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் மூத்த மகளாக பிறந்தார். அவரது தந்தை எல்லிஸ் ஆர்தர் பிராங்கிளின் (Ellis Arthur Franklin) சமூக சேவையில் ஈடுபட்ட ஒரு வங்கி அதிகாரி. அவரது அவரது தாயார் பெயர் மியூரியல் வேலி பிராங்கிளின் (Muriel Waley Franklin). இவரது சகோதரர்களில் டேவிட் பிராங்கிளின் (David Franklin) பத்திரிகையாளராகவும், கூலின் பிராங்கிளின் (Colin Franklin) பதிப்பகத் துறையிலும் பின்னாளில் சிறந்து விளங்கினர்.

பெண்களுக்கு அறிவியல் துறையில் அதிக வாய்ப்புகள் இல்லாத அக்காலத்திலும், சிறுவயதிலேயே ரோசாலிண்ட் தான் விஞ்ஞானியாக வேண்டும் என உறுதியுடன் இருந்தார். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அறிவியல் கல்வி வழங்கிய  செயின்ட் பால்ஸ் பெண்கள் பள்ளி அவரது அறிவியல் ஆர்வத்தை வளர்த்தது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார்.

 தனது படிப்பின் போதும், தொழில் வாழ்க்கையின் போதும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவதை பழக்கமாகக் கொண்டிருந்தார். உணர்ச்சிவசப்படாத அவரது வெளிப்படையான குணத்தை காட்டும் அந்தக் கடிதங்கள் வாயிலாக ரோசாலிண்ட், அவரின் தேர்வுப் பதட்டங்கள், ஆய்வக அனுபவங்கள், வாழ்க்கை நோக்கங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தினார். கல்வியில் சிறந்து விளங்கிய ரோசாலிண்ட் மலையேற்ற முகாம்கள், நீண்ட நடைபயணங்கள், வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

1941-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற ரோசாலிண்ட், எரிபொருள் பற்றாக்குறை இருந்த இரண்டாம் உலகப்போரின் போது நிலக்கரி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தொழில் துறையினருக்கு பயனளிக்கும் வகையில் நிலக்கரியின் நுண்துளை அமைப்பு, அதன் எரிபொருள் திறன் குறித்து அவர் செய்த ஆய்வு அவருக்கு 1945-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று கொடுத்தது. நிலக்கரி குறித்த இந்த ஆய்வுகள் பல அறிவியல் கட்டுரைகளாக அறிவியல் இதழ்களில் வெளியாகின.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரெஞ்சு வேதியியலாளரும் தனது நண்பருமான வெயிலுடனின் உதவியுடன் பாரிஸில் உள்ள லேபரட்டோயர் சென்ட்ரல் டெஸ் சர்வீசஸ் சிமிக்ஸ் டி எல்'எடாட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஜாக்கியுஸ் மெரிங்கின் (Jacques Mering) தலைமையில் செயல்பட்ட ஆய்வகத்தில் எக்ஸ்ரே கதிர் படிகவியல் செயல்பாடுகள் குறித்து கற்றுக்கொண்டார். 

பாரிஸில் இருந்து இங்கிலாந்து திரும்பிய ரோசாலிண்ட் கிங்ஸ் கல்லூரியில் உள்ள ஜான் ராண்டாலின் ஆய்வகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சேர்ந்தார். அங்கு ஊடுகதிர் படிகவியல் முறையைப் பயன்படுத்தி உயிரியல் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். டி.என்.ஏ-வின் இரண்டு வெவ்வேறு வடிவங்களான ஏ (உலர்) மற்றும் பி (ஈரமான) ஆகிய இரண்டையும் ஆய்வு செய்ய உதவும் வகையில் ஈரப்பதக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு அறையுடன் பிரத்தியேகமாக உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கான ஊடுகதிர் அமைப்பையும் வடிவமைத்தார்.

இந்த ஆய்வகத்தில் டி.என்.ஏ குறித்த ஆய்வுக்காக ரோசாலிண்ட் அவரது மாணவர் ரேமாண்ட் கோஸ்லிங்குடன் (Raymond Gosling) இணைந்து பல ஊடுகதிர் புகைப்படங்களை எடுத்தார். இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஆய்வகத்தில் எண் கொடுத்து பதிவு செய்யப்பட்டது. வரிசை எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படங்களில் 51-வது ஊடுகதிர் புகைப்படமான “போட்டோ 51” டி.என்.ஏ இரட்டை சுருள் (double helix) அமைப்பில் இருப்பதை தெளிவாக காட்டியது.

பாஸ்பேட் அமைப்பு உள்நோக்கி இணைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி பிரான்சிஸ் கிரிக் மற்றும் வாட்சன் ஆகியோர் ஆரம்பத்தில் முன்வைத்த முன்வைத்த டிஎன்ஏ கட்டமைப்பு மாதிரி தவறானது என ரோசாலிண்ட் விமர்சித்தார். 

சக ஊழியரான வில்கின்ஸ் மௌரிஸ் (Maurice Wilkins) ரோசாலிண்ட் அனுமதி இல்லாமல் டி.என்.ஏவின் வடிவம், விட்டம், சுருள் இடைவெளி போன்ற முக்கியமான தகவல்களை  வழங்கிய அவரின் போட்டோ-51 ஊடுகதிர் படத்தை கிரிக் மற்றும் வாட்சன் ஆகியோருக்கு காட்டினார். மரபியல் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்திய போட்டோ-51 ஆராய்ச்சியில் நேர்மை, நெறிமுறை, தரவு பங்கீடு குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியது. 

டி.என்.ஏ இரட்டைச் சுருள் மாதிரி குறித்த கிரிக், வாட்சன்  ஆகியோரின் கட்டுரை, டி.என்.ஏ ஊடுகதிர் தரவுகள் குறித்த வில்கின்ஸ், அலெக்ஸ் ஸ்டோக்ஸ், ஹெர்பர்ட் வில்சன் ஆகியோரின் கட்டுரை, மற்றும் பாஸ்பேட் மற்றும் கார அமைப்புக் குறித்த ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின், ரேமண்ட் கோஸ்லிங் ஆகியோரின் கட்டுரை ஆகிய மூன்றும் டி.என்.ஏவின் அமைப்பைத் தெளிவுபடுத்தும் வகையில் 1953-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேச்சர் இதழில் வெளியாகின. பின்னர் பிர்க்பெக் கல்லூரியில் தனது சொந்த ஆய்வகத்தை அமைத்த  ரோசாலிண்ட், 1958-ஆம் ஆண்டு வரை புகையிலை மொசைக் வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மரணத்திற்குப் 1962-ஆம் ஆண்டு வாட்சன் மற்றும் வில்கின்ஸுக்கு டி.என்.ஏ ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படாது என்ற போதும் டி.என்.ஏ ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட தினத்தில், அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளில் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினின் பங்களிப்பு நினைவு கூறப்படவில்லை என்பது வேதனை. தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் உறுதியின் சின்னமாக படிகவியல், உயிர் இயற்பியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய, 37 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மரபியல் ஆய்வுகளுக்கும் ஆராய்ச்சி நெறிமுறை கோட்பாடுகளுக்கும் காரணமாக இருந்தவர் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0