நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' - Gen Z அரசியல்| அலசல்

Apr 24, 2026 - 13:33
 0
நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' - Gen Z அரசியல்| அலசல்

நேபாளத்தில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷா (பாலேந்திர ஷா) வெற்றிபெற்று மார்ச் 27 அன்று பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலையில், பதவியேற்ற சில வாரங்களிலேயே, மாணவர் சங்கத் தடை முடிவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது சீர்திருத்த அரசு தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த அரசியல் மாற்றம், தற்போது அமைச்சர்களின் ராஜினாமா, முறைகேடு புகார்கள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான மக்கள் கோபம் ஆகியவற்றால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

நேபாள் பிரதமர் பாலன் ஷா
நேபாள் பிரதமர் பாலன் ஷா

பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, அரசியல்வாதிகளின் சொத்துக்களை விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைப்பது உள்ளிட்ட 100 அம்ச சீர்திருத்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் அமைச்சர்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேபாள் உள்துறை அமைச்சர் சுதன் குருங் தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மைக்ரோ - இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உள்ள பங்குகளை அவர் மறைத்ததாகவும், பணமோசடி வழக்கில் விசாரணையில் இருக்கும் தொழிலதிபர் தீபக் பட்டாவுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு மறுப்பு தெரிவித்த சுதன் குருங், ``எனக்கு பதவியை விட அறநெறியே முக்கியமானது. பொது வாழ்க்கை தூய்மையாக இருக்க வேண்டும், தலைமை பொறுப்புக்கூறல் உடையதாக இருக்க வேண்டும். சொத்துக்களை மறைக்க நினைப்பவர் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை பகிரங்கமாக அறிவிக்க மாட்டார். குற்றச்சாட்டுகளும் உண்மையும் ஒன்றல்ல," என வாதிட்டார்.

நேபாள் பிரதமர் பாலன் ஷா
நேபாள் பிரதமர் பாலன் ஷா

இருப்பினும், நேபாளி காங்கிரஸ் மற்றும் 'ஜென்-இசட் இயக்கம்' (Gen-Z Movement) போன்ற அமைப்புகளின் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது. இந்த அரசாங்கத்திற்கு சுதன் குருங் ராஜினாமா சமீபத்திய பெரும் பாதிப்பு ஆகும்.

இந்த மாத தொடக்கத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தீபக் குமார் ஷா, தனது மனைவியை அரசு வாரியம் ஒன்றில் நியமிக்க அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கத்திற்கு, சில வாரங்களிலேயே இரண்டு அமைச்சர்கள் வெளியேறியது அதன் பிம்பத்தை சிதைத்து, அரசுக்குள்ளேயே இருக்கும் பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

உள்நாட்டுப் பிரச்சனைகள் மட்டுமின்றி, அரசின் சில கொள்கை முடிவுகளும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கும் முடிவு, எல்லைப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் உலகளாவிய அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இது மக்களின் பொருளாதாரச் சுமையை அதிகரித்துள்ளது. மாணவர் சங்கங்களைக் கலைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

நேபால் பிரதமர் பாலன் ஷா
நேபால் பிரதமர் பாலன் ஷா

முந்தைய ஆட்சியை வீழ்த்திய இளைஞர் போராட்டங்களின் எழுச்சியில் உருவானதுதான் பாலேந்திர ஷாவின் அரசு. சுதன் குருங் போன்றவர்கள் அந்த மாற்றத்தின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்டனர். ஆனால், தற்போது தலைமைத்துவத்தின் உறுதித்தன்மை மற்றும் கொள்கை திசை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

வாக்குறுதிக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. உள்நாட்டு சர்ச்சைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மக்கள் போராட்டங்கள் என அனைத்தும் ஒரே நேரத்தில் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பாலேந்திர ஷா தனது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான் இந்த ஆட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0