'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

Apr 24, 2026 - 12:01
 0
'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

சென்னை அணிக்கு நேற்றைய போட்டியை வென்று கொடுத்தது அகீல் ஹூசைனும் நூர் அகமதுவுமே. இருவருமே சரமாரியாக விக்கெட்டுகளை எடுத்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு வித்தியாசமாக செலிப்ரேட் செய்கிறார்கள். 'நீங்க ஏன் மூஞ்ச மூடுறீங்க. சொந்த ஊர்ல அடிவாங்குனதுக்கு பங்காளிங்கதான் மூஞ்ச மூடிக்கணும். நீங்க தலை நிமிர்ந்து நடங்க பார்த்திபன்' என மஞ்சள் பாய்ஸ் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர்.

MI vs CSK
MI vs CSK

'எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன். சிவாஜியை பார்த்திருக்கேன். ஆனா, உன்னை மாதிரி ஒரு நடிகனை பார்த்ததே இல்ல...' எனுமளவுக்கு அம்பியாகவும் அந்நியனாகவும் மாறி மாறி குழப்பிக் கொண்டிருக்கிறது சி.எஸ்.கே. கடந்த போட்டியில் சன்ரைசர்ஸூக்கு கையிலிருந்த மேட்ச்சை கோட்டைவிட்ட சி.எஸ்.கே, வான்கடேவில் மும்பைக்கு எதிராக ஒரு சராசரி ஸ்கோரை எடுத்து டிபண்ட் செய்து ஜெயித்திருக்கிறது. 'ஏன் சார் எல்லா மேட்ச்சும் இப்படியே ஆடலாம்ல...' எனும் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸூக்கு 'என்னால ஜெயிக்க முடியும். ஆனா, பண்ணமாட்டேன்...' என கன்னத்தில் புஜூக்கு புஜூக்கு செய்து அனுப்பி விட்டிருக்கிறது சி.எஸ்.கே.

தோனி 'மூன் லைட்' ஆக வேறெதுவும் கம்பெனியில் வேலை பார்க்கிறாரா என தெரியவில்லை. எல்லா ப்ராக்டிஸ் செஷனுக்கும் வருகிறார். முழுமையாக பேட்டிங் ஆடுகிறார், ஓடுகிறார். ஆனால், போட்டி அன்று மட்டும் காணாமல் போய் விடுகிறார். அன்றைக்கு மட்டும் வில்லன் அஜித் பாணியில் கையையும் காலையும் ஒரு பக்கமாக திருப்பிக் கொண்டு ரூமில் ரெஸ்ட்டை போட்டு விடுகிறார்.

கடந்த போட்டியில் மும்பை அணி குஜராத்தை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்டு விட்டு எல் க்ளாஸிகோவில் ஆட வந்ததால் சென்னை ரசிகர்களுக்கு கொஞ்சம் கெதக் என்றே இருந்தது. 'வான்கடேன்னு வந்துட்டா மும்பைக்காரன் சுழலுவான். மேட்ச் டேல அவன ஒன்னுமே பண்ண முடியாது' என்கிற அட்டியூடோடுதான் பாண்ட்யா டாஸூக்கே வந்திருந்தார். ருத்துராஜ் எப்போதும் போல, 'நாங்க என்ன ஜெயிக்கவாப்பா போறோம்...' என்கிற பாடிலாங்குவேஜ்தான். அதற்கேற்றார் போல டாஸிலேயே தோல்வி.

Samson
Samson

டீமில் இருப்பவர்களை இரண்டே வார்த்தையில் பேசிவிட்டு, க்ரவுண்டுக்கே வராத தோனியை பற்றி இரண்டு நிமிடம் பேசிவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார் ருத்துராஜ்.

ருத்துராஜூக்கு கடந்த சீசனில் கையில் அடிபட்டிருந்தது. பாதி சீசனோடு வெளியேறிவிட்டார். ருத்துராஜின் கையில் அடிபட்டதை கவனித்த சென்னை நிர்வாகம், அவர் தலையில் லேசாக கீறல் இருந்ததை பார்க்கவில்லை போல. 'பாஸ் இப்போ நா எங்க இருக்கேன்...' டைப்பில் அம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் போல்தான் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். எலெக்சன் டேவில் சென்னையை தாண்ட மறுத்த பேருந்துகளை போல பவர்ப்ளேவை தாண்டுவதற்குள் கசன்பரின் பந்துவீச்சில் அவுட் ஆகினார். ரொம்பவே மனவேதனை அடைந்ததைப் போல முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டே பெவிலியனுக்கு திரும்பினார். அவர் வளர்க்கிற நீண்ட முடி, அடர் தாடி இதையெல்லாம் பார்க்கையில் ஸ்பை ஹம்சாவை பார்ப்பதை போலவே இருக்கிறது.

'என்ன மீறி எப்படி ஜெயிக்கிறீங்கனு பார்க்கலாம்டா' என சொந்த டீமுக்கு எதிராகவே சபதம் போட்டுவிட்டு வந்ததைப் போல தெரிகிறது. உட்கார்ந்த சீட்டை விட்டு நகரமாட்டேன் என அடம்பிடிக்கும் ப்ளெம்மிங் ஐயா ருத்துவுக்கு என்ன பிரச்னை என கவனிக்க வேண்டும்.

ருத்துராஜ் அவுட் ஆன எண்ட்டில் சர்பராஸ் கான், துபே, ப்ரெவிஸ் என அடுத்தடுத்து உள்ளே வந்து ஹர்திக்குக்கு ஒரு வணக்கதை வைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். 'கோபால்னு ஒருத்தன் ரெண்டு வருசமா பெயிண்ட் அடிச்சிட்டு இருக்கான்' என்பதைப் போல தனி ஆளாக பெர்பார்ம் செய்து கொண்டிருந்தார் சாம்சன். 'டிபன்ஸ் வேணுமா டிபன்ஸ் இருக்கு. ஸ்ட்ரைக் ரொட்டேட்டுக்கு ஸ்ட்ரைக் ரொட்டேட். சிக்சர் வேணுமா சிக்சர் இருக்கு' என கலந்து கட்டி அடித்தார் சாம்சன். மும்பை முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச். இங்கே முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சமாக 220 ரன்களை அடித்தால்தான் வெல்ல முடியும்.

Samson
Samson

'120 பந்தையும் ப்ரீ ஹிட்டாக வீசினால் கூட சி.எஸ்.கே 220 யை எல்லாம் தொடாது' என்பது மும்பை பௌலர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் எந்த பிரஷரும் இல்லாமல் ஜாலியாக வீசினர். ஆனால், சாம்சன் கடைசியில் கொஞ்சம் வேகமெடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு செஞ்சுரி அடித்து அணியின் ஸ்கோரையும் 200 யை கடக்க செய்தார். கடைசிப் பந்தில் சாம்சன் நூறை கடந்தார். 'இனிமே நீங்க ஜெயிச்சா ஜெயிங்க. இல்லேன்னா எக்கேடும் கெட்டு போங்க...' என்கிற மைண்ட் வாய்ஸில் பூரண திருப்தியோடு பெவிலியனை நோக்கி பேட்டை தூக்கி காண்பித்தார். ப்ளெம்மிங் கண்ணில் ஜலம் வைத்துவிட்டார். 'ஆனந்த கண்ணீரா சார்...' 'இல்ல அடுத்து நடக்கப் போறதை நினைச்சு கண்ணீர்' என்பதை போல முழித்தார் ப்ளெம்மிங். சென்னை பௌலர்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு, 'நியாயமான பயம்தான் சார்...' என சென்னை ரசிகர்களும் ஆமோதித்தனர்.

ஆனால், 'அவசரப்பட்டு சந்தேகப்பட்டுட்டீங்களே சார்..' என்பதைப் போல இருந்தது சென்னை அணியின் பௌலிங். 'அங்குட்டு வேணாம். இங்குட்டு போவோம்' என்பதைப் போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் ஸ்பின்னரான அகீல் ஹூசைனை வைத்து அட்டாக்கை ஆரம்பித்தார் ருத்துராஜ். கடந்த மூன்று ஆண்டுகளின் ருத்துராஜின் கேப்டன்சி க்ரைண்டர் முதல் முறையாக ஓடியதைப் போல தெரிந்தது. மலேவர், நமன் தீர், சூர்யகுமார், திலக் வர்மா என முக்கிய விக்கெட்டுகள் எல்லாவற்றையும் வீழ்த்தினார் ஹூசைன். 'பந்தயத்துக்கு நாங்க வரலாமா..' என முக்கியமான கட்டத்தில் ஹர்திக் மற்றும் ரூதர்போர்டின் விக்கெட்டை நூர் வீழ்த்தினர். 'வான்கடேல மும்பைக்காரன் சுழலுவானா பதிலுக்கு நாங்க சுழலட்டுமா...' என சேலஞ்ச் செய்து ஹூசைனும் நூரும் விக்கெட்டுகளை அள்ளியதைப் போல இருந்தது. மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்.

ஹூசைன்
அகீல் ஹூசைன்

சென்னை அணியை சென்னை ரசிகர்களே கடந்த சில நாட்களாக காதுகள் கருகிப் போகுமளவுக்கு திட்டியிருந்தாலும், நேற்று 'போடி...என் புள்ளைக்கு ஹீரோ ஹோண்டால வேலை கிடைச்சிருக்கு' என்கிற ரேஞ்சில் எமோஷனல் ஆகி பீல் செய்து கொண்டிருந்தனர். ரொம்ப பீல் பண்றானுகளே அடுத்த மேட்ச்ல ஒரு பாயாசத்தை போட்ற வேண்டிதான் என சென்னை அணி நினைக்காமல் இருந்தால் சரி.

முகத்தை மூடிக்கொண்டு மைதானத்தை விட்டு நீதா அம்பானி வெளியேறுகையில், லோனேஷ் லனகராஜ் என்கிற ரிப்போர்ட்டர் மைக்கை நீட்டி 'மாற்றம் வருமா மேடம்...' எனக் கேட்க, 'மாற்றம் வந்ததுனாலதாண்டா இவ்வளவு அடி' என குறியீடோடு பேசிச் சென்றிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0