மாணவர் தலைவர் டு கேரள முதல்வர்... டெல்லி தலைமையால் தவிர்க்கவே முடியாத இந்த வி.டி.சதீசன் யார்?

May 15, 2026 - 10:02
0
மாணவர் தலைவர் டு கேரள முதல்வர்... டெல்லி தலைமையால் தவிர்க்கவே முடியாத இந்த வி.டி.சதீசன் யார்?

பத்து ஆண்டு ​பினராயி விஜயன் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கேரளத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கிறார். 1964 மே 31-ல் எர்ணாகுளம் மாவட்டம் நெட்டூரில் வனத்துறை அதிகாரியான வடச்சேரி தாமோதர மேனன் மற்றும் விலாசினி அம்மா தம்பதியினரின் மகனாகச் சதீசன் பிறந்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தேவாரா சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் பட்டப்படிப்பையும், ராஜகிரி கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து கேரள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி மற்றும் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.எம் பட்டங்களைப் பெற்றார். சுமார் 10 ஆண்டுகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். வடச்சேரி தாமோதரன் சதீசன் என்பதையே வி.டி.சதீசன் என அழைக்கிறார்கள். வி.டி.சதீசனுக்கு லக்ஷ்மி பிரியா என்ற மனைவியும், உன்னி மாயா என்ற மகளும் உள்ளார். எர்ணாகுளத்தில் மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, பறவூர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டார், தற்போது ​61 வயதில் கேரள முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கப்போகிறார்.

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த வி.டி.சதீசன்

கல்லூரி காலத்திலேயே அவரது அரசியல் பயணம் தொடங்கியது. எஸ்.எச் கல்லூரியின் யூனியன் நிர்வாகியாகச் செயல்பட்ட அவர், பின்னர் எம்.ஜி பல்கலைக்கழக யூனியன் தலைவராகவும், என்.எஸ்.யு.ஐ தேசியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். பறவூர் தொகுதியின் முகமாக மாறிய வி.டி.சதீசன், 1996-ல் தனது முதல் தேர்தலில் சி.பி.எம் கட்சியின் பி. ராஜுவிடம் தோல்வியடைந்தார். ஆனால் 2001-ல் பி.ராஜுவை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து வென்றவர்

2026 தேர்தலிலும் 20,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறாவது முறையாகத் எம்.எல்.ஆகியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் பறவூர் தொகுதி வாக்காளர்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட மக்கள் பிரதிநிதியாக அவர் மாறினார்.

வி.டி.சதீசன்

கேரள சட்டமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும், ஐந்து ஆண்டுகள் கேரள மாநில துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2016-ல் உம்மன் சாண்டி அரசில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் 'சீஃப் விப்' ஆகவும் இருந்தார். 2006 முதல் 2011 வரையிலான உம்மன் சாண்டியின் எதிர்க்கட்சித் தலைவர் காலத்தில், சட்டமன்றத்தில் 33 அவசர தீர்மானங்களை முன்மொழிந்து கேரள சட்டமன்ற வரலாற்றிலேயே சாதனையை ஏற்படுத்தினார். சதீசனின் அரசியல் வாழ்வில் 2021-ம் ஆண்டு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குப் பிறகு, பல மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சதீசனை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தது டெல்லி தலைமை. சட்டசபையில் எதிர்க்கட்சியின் வலுவான குரலாக மாறிய அவர், பினராயி அரசைப் பல விஷயங்களில் கடுமையாக விமர்சித்தார். அவரது தலைமையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 20-ல் 18 இடங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி சாதனை படைத்தது. இப்போது முதல்வர் பதவிக்காக கே.சி.வேணுகோபால், முன்னாள் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் போட்டியில் இருந்தாலும் தொண்டர்களின் உணர்வில் கலந்த வி.டி.சதீசனை கேரள முதல்வர் பதவியில் அமரவைக்க முடிவெடுத்தது டெல்லி ஹை கமான்ட். வரும் திங்கள்கிழமை வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User