`ஆண்டுக்கு ரூ.200 கோடி வாடகை மிச்சமாகும்' - ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டடத்தை வாங்கிய மகா. அரசு

Jun 03, 2026 - 12:02
0
`ஆண்டுக்கு ரூ.200 கோடி வாடகை மிச்சமாகும்' - ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டடத்தை வாங்கிய மகா. அரசு

மும்பையின் தென்பகுதியில் இருக்கும் ஏர் இந்தியா கட்டடம் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்த போது இந்த ஏர் இந்தியா கட்டிடத்தை டாடா நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை. தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அக்கட்டடத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து மும்பையில் உள்ள அந்த ஏர் இந்தியா கட்டடத்தை மகாராஷ்டிரா அரசு உட்பட சில நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சி செய்து வந்தன.

மகாராஷ்டிரா அரசின் பல்வேறு நிறுவனங்கள், அலுவலகங்கள் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எனவே ஏர் இந்தியா கட்டன்டத்தை விலைக்கு வாங்கினால் அனைத்து அலுவலகத்தையும் ஏர் இந்தியா கட்டிடத்திற்கு மாற்றிவிட முடியும் என்று மாநில அரசு திட்டமிட்டு கடந்த பல ஆண்டுகளாக அக்கட்டடத்தை வாங்க மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

பட்னாவிஸ்

இப்பேச்சுவார்த்தை தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்னையில் தடைபட்டுக்கொண்டே வந்தது. மாநில அமைச்சரவை, அக்கட்டிடத்தை வாங்க ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து 23 மாடிகள் கொண்ட அக்கட்டிடத்தை 1,601 கோடிக்கு மத்திய அரசின் ஏர் இந்தியா அச்சர்ட் ஹோல்டிங் நிறுவனத்திடமிருந்து வாங்க மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. கட்டிடத்திற்கான விலை தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே சென்றது. தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதால் மாநில அரசு 1,601 கோடியை மத்திய அரசிடம் கொடுத்து அக்கட்டிடத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏர் இந்தியா அக்கட்டிடத்திற்கு பல்வேறு வகையான கட்டணங்களை மாநில அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. அக்கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து அனைத்து கட்டணங்களையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசுக்கு 1,601 கோடி ரூபாயும் எந்த வித பிடித்தமும் இல்லாமல் கிடைத்திருக்கிறது. 46,470 சதுர அடி கொண்ட இக்கட்டிடத்திற்கு மாநில அரசு தனது பல்வேறு அலுவலகங்களை மாற்ற இருக்கிறது.

வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்களையும் இந்த கட்டிடத்திற்கு மாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு வாடகையை சேமிக்க முடியும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆறு மாதங்களுக்கும் மேலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கட்டிடத்தில் உள்ள சில மின்தூக்கிகள் (lifts) இயங்கவில்லை. மேலும், கட்டிடத்தின் உட்புறத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பல உள்ளன. கட்டிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது என்பதால், மையக் குளிரூட்டும் அமைப்புகூடச் செயல்படவில்லை. அவை அனைத்தையும் சரி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் இக்கட்டிடமும் தாக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த பட்னாவிஸ், அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவைச் சந்தித்து, அந்தக் கட்டிடத்தைப் விற்பனை செய்யும் போது மாநில அரசுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தினார். அந்தக் கட்டிடத்தை வாங்குவதற்கான போட்டியில் இந்திய ரிசர்வ் வங்கியும் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User