பெரம்பலூரில் கடும் வறட்சி; 1000 ஏக்கர் மஞ்சள் பாதிப்பு; இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை

Oct 02, 2026 - 09:30
0
பெரம்பலூரில் கடும் வறட்சி; 1000 ஏக்கர் மஞ்சள் பாதிப்பு; இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர், குடிகாடு, தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், எசனை, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம், வேப்பந்தட்டை வடக்கு, வேப்பந்தட்டை தெற்கு, பூலாம்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதிய மழை இன்மை மற்றும் எல் நினோ வெப்ப அலை காரணமாக ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, மஞ்சள் பயிர்கள் கருகி, பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இதனால், மஞ்சள் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, வரும் தை பொங்கலையொட்டி அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள், மஞ்சள் பயிர்கள் பாதிப்பால் வேதனை அடைந்தனர். இதனால், பொங்கலுக்கு மஞ்சள் கிடைப்பது கடினம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்தப் பாதிப்பால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

perambalur
perambalur

இந்நிலையில், இந்த இழப்பீட்டை ஈடு செய்ய மாநில அரசு தோட்டடக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரவலாக விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர் கோரிக்கை எழுந்த நிலையில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தியாகராஜன், உதவி இயக்குநர் பிரவீன், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர், வேளாண் துறை அலுவலர் ஆகியோர் வேப்பந்தட்டையில் மஞ்சள் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதோடு, இந்த ஆய்வில் எல் நினோ வெப்ப அலை மற்றும் பருவ மழை பொய்த்துப் போனதின் காரணமாக மஞ்சள் பயிர்கள் கருகியது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

'வெறும் பேச்சாக இல்லாமல் எங்களுக்கு உரிய நிவாரணத்தை அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான், வறட்சியால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும். தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும்' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User