நடிகர் அர்ஜுன் புகார்: பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு; 'கைது செய்யப்படுவாரா?'- போலீஸின் பதில் என்ன?
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் அர்ஜுன், நவ., 19-ம் தேதி பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "என்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவையும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே என்னுடைய மூத்த மகள் குறித்து அவதூறுக் கருத்துக்களைப் பரப்புவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’' எனக் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதையொட்டி நடிகர் அர்ஜுனின் மகள் குறித்து விமர்சித்த நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையின்போது நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் நடிகர் அர்ஜுன் மகளைக் குற்றம் சாட்டினீர்கள் எனச் சைபர் க்ரைம் போலீஸார் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு பயில்வான் ரங்கநாதன், "எனக்குக் கிடைத்த தகவலின்படி பேசினேன்" என்று பதிலளித்தாக போலீஸார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா என போலீஸார் கேள்வி கேட்டதும் பயில்வான் ரங்கநாதன் அமைதியாக இருந்திருக்கிறார்.
பின்னர், அவர் பேசிய வீடியோ அடிப்படையில் அடுத்தடுத்த கேள்விகள் பயில்வான் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு எல்லாம் பதிலளித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் பேசியது தப்புதான், என்னை மன்னித்து விடுங்கள் என்ற ரேஞ்சில் போலீஸாரிடம் அவர் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததோடு அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``நடிகர் அர்ஜுன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணை முடிந்திருக்கிறது. இந்த வழக்கில் தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். பொதுவாக யூடியூப் நடத்துபவர்கள், அங்கு கருத்துக்களைப் பகிருபவர்கள் தனிப்பட்ட நபர் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது. பயில்வான் ரங்கநாதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் கைது செய்யப்படுவாரா என்று சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு, "வழக்கு விசாரணையில் இருக்கிறது. அதனால் வெளிப்படையான தகவல்களைச் சொல்ல முடியாது" என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)