முடிவிலிருந்து ஒரு தொடக்கம்!

Nov 25, 2026 - 18:01
0
முடிவிலிருந்து ஒரு தொடக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அதென்ன முடிவிலிருந்து ஒரு தொடக்கம்? மீண்டும் மீண்டும் இதை படித்துப் பார்த்தால் மட்டுமே அர்த்தம் விளங்கும். ஒரு பாடலில் முடியும் ஒரு அடி அடுத்து வரும் பாடலில் தொடக்கமாக அமையும். இதை 'அந்தாதி' என்று சொல்வார்கள்.

"ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம், கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்... காவிரியின் ஓரம்... ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதை சாரம், ஓசையின்றி பேசுவது ஆசை என்னும் வேதம்..." என்று 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் கவியரசர் எழுதிய அற்புதமான, இனிமையான ஒரு பாடல் அந்தாதி வடிவில் இருக்கும். அந்தப் படத்தின் இன்னொரு பாடலான 'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்' என்பதையும் அதே வடிவில் எழுதினார்.

சூரனை வதம் செய்ய அன்னையிடம் சக்திவேல் வாங்குகிறாரே முருகப்பெருமான், அந்த இடத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது தீய சக்தியின் முடிவுக்கான தொடக்கம். "வெற்றிவேல் வீரவேல், சுற்றி வந்த பகைவர் தம்மைத் தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல், ஞான சக்திவேல்..." என்று அந்த சக்திவேலைக் கவியரசர் போற்றிப் பாடியிருப்பார்.

அக்னி தீர்த்ததில் நீராடிய பக்தர்கள்

மாப்பிள்ளை, பெண் பார்த்து எல்லா சம்பிரதாயங்களும் கடந்த பிறகு 'நிச்சயதார்த்தம்' நடக்கும். அதிலிருந்து தொடங்கி திருமணம் என்ற நல்ல நிகழ்வில் முடியும். அதாவது நல்ல முடிவின் தொடக்கம் என்றும் சொல்லலாம். "கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ, கடமை முடிந்தது கல்யாணமாக..." என்று நெஞ்சிருக்கும் வரை படத்தில் அண்ணனாக நடிகர் திலகம் பாடி நடித்திருப்பார். "பூ முடித்தாள் இந்த பூங்குழலி, புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி..." என்ற அப்பாடலின் கடைசிப் பத்தியில், அண்ணனின் கடமை முடிந்து தங்கையின் புது வாழ்க்கை தொடங்குகிறது என்று பொருத்தமாகக் கவியரசர் எழுதியிருப்பார்.

"இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை, தாமரைப் பூவினில் வந்தான் - மறை சாற்றிய தேவன் திருக்கழ லாணை, மாமகளைக் கொண்ட தேவன் - எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் கழலாணை, காமனைக் கண்ணழலாலே - சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடி ஆணை..." எனப் பாஞ்சாலி சபதம் காப்பியத்தில் மகாகவி திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு பொங்கியெழுந்து பீமன் சபதம் செய்வதாக எழுதியிருப்பார். கௌரவர்களின் முடிவுக்கான தொடக்கம் இங்கிருந்து ஆரம்பமாகிறது. நல்லது நடக்கிறது.

வங்கிகளில் கணினிமயம் கூடாது என்று தொழிற்சங்கங்கள் 90-களில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். காரணம் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகும் என்று சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கம்ப்யூட்டர் உள்ளே வந்தது. இன்று முழுவதும் கணினிமயமாகிவிட்டது. வங்கிப் பக்கம் செல்லாமலே செல் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

மின்னணு வாக்குப்பதிவு

தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மேற்பார்வையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. பல நாடுகளில் இன்றும் வாக்குச்சீட்டுதான் நடைமுறையில் இருக்கிறது. நாம்தான் மின்னணு வாக்குப்பதிவு முறையில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம்.

தேர்தல் முடிவுகளை உடனே தெரிந்துகொள்ள இது வழிவகுத்தது. சிறந்த முடிவுகளுக்கான சிறந்த தொடக்கமாக மாறியது. முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இல்லாதபோது சில கட்சிகள் பழைய வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரச் சொல்லித் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். திரு. கார்த்தி சிதம்பரம் எம்.பி. அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு ஆதரவாகப் பேசினார். தவறு, முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று அடித்துச் சொன்னார். ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் அதற்கு எதிராகப் பல குரல்கள் ஒலிக்கும்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயம் கூட இயந்திரமயமாகிவிட்டது. "மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்ட உழுது போடு செல்லக்கண்ணு..." என்ற பாடல் வயல்வெளிகளில் தற்போது ஒலிப்பது இல்லை. "ஏ சம்பா நாத்து சாரக்காத்து..." என்ற பாட்டும் இல்லை. நடவுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. பழையன முடிந்து புதிய தொடக்கம் வந்தது. விவசாயம் செழிப்பாக இருந்துகொண்டிருக்கிறது.

ரயில்வேயில் ஆரம்ப காலத்தில் நிலக்கரி மூலம் வண்டிகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் டீசல், தற்போது முழுமையாக மின்மயமாகிவிட்டது. பயணிகள் ரயில், விரைவு ரயில் என்ற நிலை மாறி தற்போது அதிவிரைவு ரயில், சதாப்தி, ஜன சதாப்தி, வந்தே பாரத் என்று அடுத்தடுத்து புதிது புதிதாக அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டபோது இது பணக்காரர்களுக்கானது, ஏழைகளுக்கு எதிரானது என்று கூக்குரல் எழுந்தது. தற்போது எங்கள் பகுதியில் வந்தே பாரத் ரயில்கள் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ஒன்று முடிந்து இன்னொன்று ஆரம்பமாகிக்கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன்

கல்கி அவர்களின் சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்' இன்றளவும் பலரும் விரும்பிப் படிக்கும் ஒன்று. ஐந்து பாகங்கள் கொண்ட இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது. சுந்தர சோழர் உடல்நிலை சரியில்லாமல் போனதற்குப் பிறகு சோழ சாம்ராஜ்யத்தில் ஏற்படும் நிகழ்வுகளோடு கதை ஆரம்பமாகும். ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், குந்தவை, பிரதான கதாபாத்திரமாக அறிமுகமாகும் வந்தியத்தேவன் மற்றும் பழுவேட்டரையர்கள், நந்தினி இவர்களைச் சுற்றி நடந்தவைகளைச் சுவையாகப் படைத்திருப்பார்.

'தியாகச் சிகரம்' என்ற தலைப்பில் ஐந்தாம் பாகம் வெளியானது. அத்துடன் நாவலும் முடிந்தது. அந்த முடிவில் பல கேள்விகளுக்குக் கல்கி அவர்களே பதில் அளித்திருப்பார். அதன் பிறகு நடந்ததை, பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாக வெளிவந்த சரித்திர நாவல்தான் விக்கிரமன் அவர்கள் எழுதிய 'நந்திபுரத்து நாயகி'. இது மூன்று பாகங்களாக வந்தது. பின்னர் பாலகுமாரன் அவர்கள் 'உடையார்' என்ற பெயரில் ஒரு சரித்திர நாவல் எழுதினார். ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம், தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாறு இரண்டையும் அடிப்படையாக வைத்து எழுதினார்.

இயக்குநர் பாலா அவர்களின் முதல் திரைப்படமான 'சேது' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கிளைமாக்ஸில் 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா' பாடல் ஒலிக்கச் சேது மனநலக் காப்பக வேனை நோக்கி நடந்து சென்று அதில் ஏறிச் செல்வதோடு படம் முடிந்துவிடும். காரில் சென்று இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் விக்ரமன் அவர்கள் அதை மறந்து தியேட்டரை விட்டு வெளியே வந்து நடந்தே வீடு வந்து சேர்ந்ததாகப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். அந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய படம். அதன் பிறகு சேதுவின் வாழ்க்கை என்ன ஆச்சு என்று சிந்தித்தால் இன்னொரு புதிய தொடக்கம் அவன் வாழ்க்கையில் வரலாம் என்ற புதிய கதை உருவாகும்.

சேது

எதற்கும் இங்கு முடிவு கிடையாது. தொடர்ந்துகொண்டே இருக்கும் புதிய வடிவில். வெட்டிய மரம் கூடத் துளிர்க்கும். முடிவு என்பது தற்காலிகம் மட்டுமே, ஒரு விளம்பர இடைவேளை. கிரிக்கெட்டில் 'தல' தோனி படைத்த சாதனைகளை மறக்க முடியுமா? 2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை ஐந்து முறை எனப் பல முறை அணித் தலைவராக இருந்து கோப்பைகளைப் பெற்றுத்தந்தார். அவரின் தனிமனித சாதனை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது அனைத்து வகைப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது பயணம் வேறு வகையில் தொடர்கிறது. ஆம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முடிவிலிருந்து தொடங்குவது புதிய அத்தியாயம். அது அந்தாதி போலத் தொடர்ந்துகொண்டே, "மணியே மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே" என்ற அபிராமி அந்தாதி போல என்றுமே இருக்கும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User