"அவர் உயிரோடு இருந்திருந்தால் 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்" - நினைவுகளைப் பகிரும் ஆர்யா

Nov 24, 2026 - 14:00
0
"அவர் உயிரோடு இருந்திருந்தால் 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்" - நினைவுகளைப் பகிரும் ஆர்யா

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.

மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் இந்தப் படம் பற்றி ஆர்யா பேசினார்.

Arya - Hello Kadhal Movie
Arya - Hello Kadhal Movie

அவர் பேசுகையில், "ரொம்ப நாளாகவே தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தேன்.

என் மனைவியும், 'எல்லாப் படத்திலும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். கொஞ்சம் மென்மையான, ஜாலியான படம் பண்ணுங்கள்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

எனக்கும் அப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

அந்த வகையில் நான் பெரிதும் மிஸ் பண்ணுவது மறைந்த இயக்குநர் ஜீவா சாரைத்தான். ஜீவா சார் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் 'உள்ளம் கேட்குமே' போல ஒரு 10 படங்கள் செய்திருப்பேன்.

நடிகர் ஷாமும்கூட இதைத்தான் அடிக்கடி சொல்வார். ஜீவா சார் இருந்திருந்தால் தமிழ் சினிமாவுக்குப் புதியதாக 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்.

அதேபோல் நிறைய அழகான படங்களையும் கொடுத்திருப்பார். ஒரு படப்பிடிப்பிற்காக நான் கேரளா சென்றிருந்தபோது, 'இயக்குநர் நிகில் ஒரு கதை வைத்திருக்கிறார், கேளுங்கள்' என்று பரிந்துரைத்தார்கள்.

ஆர்யா
ஆர்யா

விமான நிலையத்திற்குச் செல்ல இரண்டு மணி நேரம் இருந்ததால், 'சரி, சும்மா கேட்போமே' என்றுதான் கதையைக் கேட்டேன். ஆனால், அந்தக் கதையின் ஐடியா மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

அதன்பிறகுதான் நிகில் இயக்கிய 'பிரணய விலாசம்' திரைப்படத்தைப் பார்த்தேன். அது ஒரு மிக அழகான படம். உடனே இந்தப் படத்தை நிச்சயம் பண்ண வேண்டும் என முடிவு செய்தேன்.

மலையாளத்தில் சுனு மற்றும் ஜோதிஷ் இந்தக் கதையை எழுதியிருந்தார்கள். தமிழில் இயக்குநர் ஹலிதா ஷமீமிடம் கேட்டேன்.

அவரும் தமிழ் வசனங்களை எழுதிக் கொடுத்தார். 'ராஜா ராணி' திரைப்படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இப்போதுதான் ஒரு மென்மையான திரைப்படத்தில் நடிக்கிறேன்" எனப் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User