சனி தசை: வெளியே சொல்ல முடியாமல் உள்ளூர அழுகிறீர்களா... பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்

Oct 03, 2026 - 08:00
0
சனி தசை: வெளியே சொல்ல முடியாமல் உள்ளூர அழுகிறீர்களா... பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்

ஒருவரின் ஜாதகத்தின்படி சனி தசை தொடங்கினால் கஷ்டகாலமும் தொடங்கும். நம் முன்வினைக்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கும் நியாயாதிபதி சனிபகவான் கொடுக்கும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும். சிலர் வாழ்வில் விரக்திக்கே சென்றுவிடுவார்கள். அதுவும் ஆரம்ப காலமான சனி தசை சனி புக்தி மிகவும் சோதனைக்காலமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கை குறித்த புரிதலை அவர் நமக்கு உருவாக்குவார். யாரெல்லாம் நல்ல வழிகளைத் தேடி நடக்கிறார்களோ குறுக்கு வழிகளைத் தவிர்க்கிறார்களோ அவர்களை சனிபகவான் ஏதும் செய்வதில்லை. அப்படிப்பட்ட சனிபகவானின் அருளைப் பெற சில தலங்கள் உள்ளன. அங்கே சென்று தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தீரும். சனியினால் உண்டாகும் தீயபலன்கள் குறைந்து மகிழ்ச்சி பொங்கும். அப்படி ஒருதலம்தான் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர். இவரைப் பொங்கு சனி என்றே சொல்வார்கள்.

குச்சனூர் பொங்கு சனீஸ்வரர் கோயில்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் சுயம்பு வடிவில் சனீஸ்வர பகவான் திருக்கோயில் உள்ளது.‌ பெரியாறும் சுருளியாறும் சேர்ந்து உருவானதுதான் சுரபி ஆறு. இங்கு சுயம்பு மூர்த்தியாக, பொங்கு சனி காட்சியளிக்கிறார். புராணத்தில் செண்பகநல்லூர் என்றழைக்கப்பட்ட இவ்வூர், பின்னர் குச்சுப்புல் குடிலில் சனீஸ்வரர் எழுந்தருளியதால் குச்சனூர் எனப்பட்டது. சனீஸ்வரரும் குச்சனூரான் என்று விளங்குகிறார்.

பாண்டிய குலத்தின் ஒரு பிரிவின் அரசனான தினகரன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். குழந்தை பாக்கியம் இல்லாத அவனுக்கு இறைவனின் ஆணைப்படி சந்திரவதனன் என்ற பிள்ளை வளர்ப்பு மகனாய் கிடைத்தான். பிறகு, தினகரனுக்கே ஒரு பிள்ளையும் பிறந்து அவனுக்கு சதாகன் என்ற பெயரும் உண்டானது. வளர்ப்பு மகனான சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால் அவனிடமே ஆட்சியும் சென்றது. கிரக நிலைகள் மாற, தினகரனுக்கு சனி திசை தொடங்கியது. இதனால் சோதனைகளையும் உடல் உபாதைகளையும் சந்திக்கிறார் தினகரன்.

இதனால் துன்புற்ற அரசன் சந்திரவதனன், தன் வளர்ப்புத் தந்தையான தினகரனின் துன்பங்களை எல்லாம் தான் ஏற்பதாகவும் அவரை விட்டுவிட்டுத் தன்னைப் பிடித்துக்கொள்ளுமாறும் சனிபகவானை வேண்டினான். அவனுடைய தியாகத்தைப் போற்றிய சனிபகவான், அவன் தவமிருந்த இடத்திலேயே சுயம்புவாகத் தோன்றினார்.

அதுமட்டுமன்றி சந்திரவதனனின் வேண்டுகோள்படி அங்கு வரும் பக்தர்களுக்கு பொங்கு சனியாக நின்று அளவற்ற வரங்களை அளிப்பதாகவும் கூறி, இன்றளவும் அதைச் செய்தும் வருகிறார் இந்தக் குச்சனூர் கொடைவள்ளல்.

குச்சனூர் பொங்கு சனீஸ்வரர் கோயில்

சந்திரவதனன் சனீஸ்வரரின் ஆணைப்படியே குச்சுப்புல் ஆலயத்தை அமைத்தாராம். மூலவர் சனீஸ்வரர் அரூப லிங்கம்வடிவில் பூமியிலிருந்து வளர்ந்துகொண்டே வருவதாகக் கூறுகிறார்கள். இதனாலேயே இதைக் கட்டுப்படுத்த அவர்மீது மஞ்சள்காப்பு கட்டப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். தேவர்களுக்கு ஆதரவாக இருந்து, நளனை ஆட்டிப்படைத்த சனீஸ்வரர், ஈசனால் தண்டிக்கப்பட்டார். இதனால் சனீஸ்வரருக்குப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவென்றும் கூறப்படுகிறது.

இங்கு விடத்தை மரம் தல மரமாகவும், கருங்குவளை மலர் தல மலராகவும், வன்னி இலை தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்குக் காகம் வாகனமாகவும், எள் விருப்ப தானியமாகவும் உள்ளது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உள்ளவர்கள், இங்கு வந்து மண்ணாலான காகத்தை வாங்கி சனீஸ்வரருக்கு சமர்ப்பித்தால் தடைகள், தோஷங்கள் நீங்கி உயர்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

அஷ்டமத்து சனி, கண்ட சனி, ஜீவன சனி, ஏழரைச் சனி என எந்த சனி தோஷம் கொண்டவரும் இங்கு வந்து கருங்குவளையாலும், வன்னி இலையாலும் சனீஸ்வரரை அர்ச்சித்து, காகத்துக்கு உணவிட்டு வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் நைவேத்யம் செய்து வணங்க எல்லா சனிதோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இங்கு நடைபெறும் ஆடிப்பெருந் திருவிழாவின்போது காக்கை உருவம் கொண்ட கருநீலக் கொடி ஏற்றப்பட்டு, விழாவின் முக்கிய நிகழ்வாக சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும். அப்போது இங்குள்ள காவல் தெய்வமான சோணைக் கருப்பண்ண சுவாமிக்கு மாமிச, மதுப் படையலுடன் திருவிழா நிறைவு பெறும்.‌

குச்சனூர் பொங்கு சனீஸ்வரர்

தொடர்ந்த துன்பங்கள், எடுத்துக்கொண்ட எல்லாக் காரியங்களிலும் தடைகள் என அவதிப்படுவோர், குறிப்பாக சரியான வேலை அமையாதவர்கள், தொழில் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள், தேனியிலிருந்து குச்சனூருக்கு வரலாம். பஸ் வசதி உண்டு.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User