சபரிமலை தங்கக் கொள்ளை: குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் வக்கீல் அரசு வழக்கறிஞரா? எதிர்ப்பால் ராஜிநாமா
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தடினமாக இருந்த தங்கப் பூச்சைத் திருடிவிட்டு மெல்லியதாக தங்கம் பூசி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பங்கஜ் பண்டாரி 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தில்தான் தங்கம் பிரிக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது. இந்த வழக்கில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞராக கே.பி.பிரதீப் செயல்பட்டார்.
தொடக்கக் காலத்தில், பங்கஜ் பண்டாரி மற்றும் அவரது நிறுவனத்திற்காக ஊடகங்களிடம் பேசியது வழக்கறிஞர் கே.பி.பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வி.டி.சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் அரசு வழக்கறிஞராக கே.பி.பிரதீப்பை நியமித்தது. இதன் மூலம் அரசு தரப்பு தகவல்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கைமாற வாய்ப்பு உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

தேவசம்போர்டு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடிய ஒருவரை, அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமிப்பது முறையானதுதானா என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்த தேவசம்போர்டு அமைச்சர் கே.முரளீதரன், "குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் பலவீனங்களை அறிந்த ஒரு நபர் அரசு வழக்கறிஞராக இருப்பது நல்லதுதான். அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. இருப்பினும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைச்சர்கள் கட்டுப்பட வேண்டும், அது கூட்டுப் பொறுப்பு. இந்தத் தங்கக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பிக்க முடியாது" என்றார்.

தேவசம்போர்டில் இதற்கு முன்பு 'மூத்த அரசு வழக்கறிஞர்' பதவி மட்டுமே இருந்தது. தற்போது மூன்று 'சிறப்பு அரசு வழக்கறிஞர்கள்' பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் தேவசம்போர்டு சிறப்பு அரசு வழக்கறிஞராக கே.பி.பிரதீப் நியமனம் செய்யப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து முதல்வர் பினராயி விஜயன் வழிகாட்டுதல்படி அரசு வழக்கறிஞர் பதவியை ராஜிநாமா செய்தார் கே.பி.பிரதீப்.
பதவி வழங்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)