அமைச்சர் ஜெகதீஸ்வரி போட்ட கம்பி வேலியை பிய்த்து எறிந்த சொந்த ஊர் மக்கள்! - பதட்டத்தில் பனைவிளை
'அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி!' – வருந்தும் சொந்த கிராம மக்கள் என்கிற ஒரு செய்தியை
நான்கு தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம்.
தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் தனது சொந்த ஊரில், ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த கிண்ற்றைச் சுற்றிக் கம்பி வேலி அமைத்தது குறித்த செய்தி அது.
திசையன் விளை அருகேயுள்ள பனைவிளை கிராமத்து மக்கள் இதுதொடர்பாக நம்மிடம் வருத்தத்துடன் பேசியதைத் தொடர்ந்து அமைச்சர் தரப்பிலும் நாம் கருத்து கேட்க முயன்றும் அவர் தரப்பில் பதில் தராதது குறித்தும் குறிப்பிட்டிருந்தோம்.

நம் தளத்தில் செய்தி வெளியானதும் மாவட்டத்திலிருக்கும் பத்திரிகையாளர்கள் சிலரைத் தொடர்பு கொண்ட அமைச்சரது ஆட்கள் சிலர் செய்தியை யார் கொடுத்தது என விசாரித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக அமைச்சர் வீட்டார் அமைத்திருந்த அந்தக் கம்பி வேலி பிடுங்கி எறியப்பட்டுள்ளது.
ஆனால் யார் பிடுங்கி எறிந்தது எனத் தெரியவில்லை.
’அமைச்சரிடம் முதலில் ஒரு மரியாதைக்கு நேரில் போய் பேசி கிணற்றைப் பழைய மாதிரியே எல்லாரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுப் பார்ப்போம்’ அவர் மறுத்தால் என்ன செய்வது என பிறகு யோசிப்போம் என உள்ளூர் இளைஞர்கள் ஏற்கனவே பேசி வந்ததாகவும் தெரியவருகிறது.
முன்னதாக ஊர் மக்கள் கிணறு தொடர்பாக மனு கொடுக்க வந்த போது மனுவை வாங்க மறுத்து விட்டார் ஜெகதீஸ்வரி என்பதையும் நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியில் சுட்டிக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அமைச்சர் தரப்பில் காவல்துறையினரைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப் படுவதால் பனைவிளை கிராமத்தில் ஒருவித பதட்டம் நிலவி வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)