"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" - விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்!
இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும்.
அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக எது ஆட்சிக்கு வந்தாலும், அவர்களது முதல் பேச்சே, 'காவிரி நடுவே அணை கட்டுவதாக தான் இருக்கும்'.
இப்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸிற்கும் இடையே காவிரி குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக பிரச்னை நிலவி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவின் பாஜக மாநில தலைவர் ரூட்டை மாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு சமாதான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
கர்நாடகா பாஜக கடிதம்
அந்தக் கடிதத்தில் கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, "கர்நாடக மக்களிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துகள்!
கோவில்களின் பூமியாகவும், அளப்பரிய கலாச்சாரச் செழுமை கொண்ட நாகரிகத்தின் தொட்டிலாகவும் விளங்கும் தமிழகம், கர்நாடகாவோடு பல நூற்றாண்டுகளாகத் தழைத்தோங்கிய ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறது.
பகிரப்பட்ட வரலாறு, பண்பாடு, வர்த்தகம் மற்றும் அனைத்திற்கும் மேலாக நமது மக்களின் அன்பினால் பிணைக்கப்பட்ட இரு அண்டை மாநிலங்கள் நம்முடையவை.
இரு மாநிலங்களுக்கு இடையே பரஸ்பர சார்பு
பரஸ்பர மரியாதையையும் நன்மதிப்பையும் நமது உறவின் அடித்தளமாகக் கொண்டு, கர்நாடகாவும் தமிழகமும் சகோதர மாநிலங்களாக வாழ்ந்து வருகின்றன.
கோடிக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவை, குறிப்பாக பெங்களூருவைத் தங்கள் சொந்த வீடாக ஏற்றுக்கொண்டு, அதன் அசாதாரண வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
அதே அளவிற்கு, தமிழகத்தில் வாழ்ந்து பணிபுரியும் கன்னடிகர்களும் உங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ளனர். மாநில எல்லைகளைத் தாண்டிய நமது ஆழமான மக்கள் தொடர்பிற்கு இந்தச் பரஸ்பரச் சார்ந்திருப்பே சான்றாகும்.

கருணாநிதியும், எடியூரப்பாவும்!
அண்டை மாநிலங்கள் என்று வரும்போது, கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், அவற்றை நாம் எவ்வாறு தீர்த்துக் கொள்கிறோம் என்பதே முக்கியம்.
முன்னாள் கர்நாடக முதல்வர் திரு. பி. எஸ். எடியூரப்பா அவர்களின் தலைசிறந்த ராஜதந்திரத்தாலும், தமிழக முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களின் அதே அளவிலான பெருந்தன்மையான அணுகுமுறையாலும் இறுதியில் சுமுகமாகத் தீர்க்கப்பட்ட பெங்களூரு திருவள்ளுவர் சிலை விவகாரம் எனக்கு நினைவுக்கு வருகிறது.
மக்களின் நலன் முன்னிற்கும் போது, எவ்வளவு கடினமானப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதை அவர்களின் அந்த முதிர்ச்சி நிரூபித்தது.
காவிரியே வாழ்வாதாரம்
அந்த உணர்வோடுதான் இன்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்,
கர்நாடக முதல்வர் திரு. டி. கே. சிவகுமார் அவர்களுடன் காவிரி நீர் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் 'நம்ம பெங்களூருக்கு' வருகை தரவுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன்.
இந்த விவாதங்களை அதே அளவிலான தலைமைத்துவப் பண்போடும், மிக முக்கியமாக கர்நாடக விவசாயிகள் மற்றும் குடிமக்கள் மீது பரிவோடும் அணுகுமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெங்களூருவிலும், காவிரிப் படுகை முழுவதும் உள்ள பல நகரங்களிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குக் காவிரியே வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.


கூட்டுறவின் வலுவான அடையாளம்
கர்நாடகாவில் வாழும் கன்னடிகர்கள், தமிழர்கள் இருவருமே தங்களின் குடிநீர் தேவைகளுக்கு இந்கக் காவிரியையே நம்பியுள்ளனர். போதிய மழையின்மையும், பருவமழை பொய்த்தலும் விவசாயிகளுக்கும் குடிமக்களுக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ள இந்த நேரத்தில், அவர்களின் கவலைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது.
அத்துடன், மேகதாட்டு திட்டத்தைச் கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுகுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தின் நியாயமான நீர் தேவைகளைப் பாதிக்காமல், பெங்களூருவின் குடிநீர் தேவையை இத்திட்டம் பெருமளவில் பூர்த்தி செய்யும். இத்திட்டத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு, நமது இரு மாநிலங்களுக்கும் இடையிலான கூட்டுறவின் வலுவான அடையாளமாக மாறும்.
ஒன்றிணைக்கட்டும்!
தமிழகத்தின் உரிமைகளை மதிக்கும் அதே வேளையில், கர்நாடகாவின் நியாயமான நலன்களையும் பாதுகாக்கும் ஒரு முதிர்ச்சியான நிலையை நீங்கள் எடுப்பீர்கள் என்றும், நமது இரு மாநிலங்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பிணைப்பை வலுப்படுத்த உதவுவீர்கள் என்றும் நான் மனதார நம்புகிறேன்.
காவிரி நம் மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)