Kaadhal Saranya: ``என்னை Abuse பண்ணவனை நேரில் பார்த்தபோ அவன்ட இததான் நான் கேட்டேன்" - நடிகை சரண்யா
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில் சமீபத்தில் 'Sayswag' யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

அவரின் பேட்டியின் ஒருபகுதியில், ``வாழ்க்கை என்பது எல்லாரையுமே ஒரே சீரான பாதையில் அழைத்துச் செல்வதில்லை. ஏற்ற இறக்கங்களும், நாம் எதிர்பார்க்காத கடினமான சூழ்நிலைகளும் ஒவ்வொருவரின் வாழ்விலும் கடந்துபோகத்தான் செய்கின்றன. ஆனால், அத்தகைய சோதனையான நேரங்களில் நாம் எடுக்கும் துணிச்சலான ஒரு முடிவே, நம் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கிறது.
எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அச்சுறுத்தலையும், அதை நான் கையாண்டு வென்றெடுத்த விதத்தையும் இங்கே பகிர்வது, என்னைப்போன்ற பலருக்கும் ஒரு நம்பிக்கைத் தீபமாக இருக்கும் என நம்புகிறேன்.
முன்பு ஒரு காலத்தில் என்னை அப்யூஸ் செய்த நபர் ஒருவர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என் வாழ்க்கைக்குள் நுழைய முயன்றார். நான் என்னுடைய அலுவலகக் கட்டடத்தின் முதல் தளத்தில் வெளியே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் என்னைப் பார்த்துவிட்டார்.
நான் வளர்ந்து, சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதை அறிந்த அவர், இரண்டு நாட்களாக என்னை ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.

ஒருநாள், அகந்தையோடும் திமிரோடும் ஸ்கூட்டியில் என் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் வந்து நிறுத்தி, என் பெயரைச் சொல்லிச் சத்தமாகக் கூப்பிட்டார். ஆண்டுகள் பல கடந்திருந்தாலும், அந்த அச்சுறுத்தலான குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே என் பழைய நினைவுகள் மேலெழும்பி, உடல் நடுங்கத் தொடங்கியது. பயத்தின் உச்சத்தால் நொடிப் பொழுதில் கைகளில் வேர்வை கொட்டியது.
அந்த இறுக்கமான சூழ்நிலையில், என் அலுவலகத்தில் இருந்த மற்றவர்கள் பதற்றமடைந்து, "யார் இவர்? இவ்வளவு தைரியமாகக் கூப்பிடுகிறார்?" என்று கேட்டனர்.
ஆனால், "என் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது; என்னை அப்யூஸ் செய்தவன் கீழே நிற்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியவே கூடாது" என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களை உள்ளே செல்லக் கூறினேன். கீழே நின்றிருந்த நபா், "இதுதான் உன் ஸ்டுடியோவா? இரண்டு நாளா உன்னை ஃபாலோ பண்றேன், மெஸேஜ் அனுப்புறேன்... நீ பார்க்கலையா?" என்று அதிகாரமாகக் கேட்டார்.
சுமார் 30 முதல் 40 வினாடிகள்... நான் ஆழமாக மூச்சை உள்ளிழுத்தேன். எனக்குள்ளே ஒரு குரல் ஒலித்தது.

"இவனுக்கு நீ எப்போது பதில் கொடுக்கப் போகிறாய்? இப்போது இந்தச் சூழ்நிலை உன்னுடையது, இந்தக் நிறுவனம் உன்னுடையது, இந்த வாழ்க்கை உன்னுடையது. இனி யாரைக் கண்டு நீ பயப்பட வேண்டும்?" எனத் தோன்றியது. என் கைகள் பயத்தால் நடுங்கினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க அங்கிருந்த சுவர் இரும்புக் கம்பியை இறுகப் பிடித்துக் கொண்டேன்.
முகத்தில் எந்தவிதப் பதற்றத்தையும் காண்பிக்காமல், தைரியமாக, "ஆமா, இது என் ஸ்டுடியோதான். இப்போது எதுக்கு இங்கே வந்த? இன்னொரு முறை என்னைப் பார்க்க வந்தா போலிஸுக்கு போன் பண்ணிடுவேன்... எங்கே உன் போன் எடுத்து உன் பொண்டாட்டிக்கு போன் பண்ணு நானும் பேசுறேன்" எனத் தீர்க்கமான குரலில் பேசினேன்.
என் குரலிலும் பார்வையிலும் இருந்த அந்தத் திடமான தைரியத்தைக் கண்டவுடன், அச்சுறுத்த வந்த நபரின் முகம் மாறியது. சூழ்நிலை தனக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த அவன், ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
அச்சத்தால் பிடிந்திருந்த இரும்புக் கம்பியில் இருந்த வேர்வை மெல்ல மறைந்தது; நொடிக்கு நொடி என் தன்னம்பிக்கை அதிகரித்தது. "நாம் தைரியமாக ஒரு அடி எடுத்து வைத்தால், நம்மைப் பயமுறுத்த நினைப்பவன் நம் முன்னால் நிற்பதற்குக்கூடத் தகுதியில்லாதவன்" என்ற உண்மை எனக்குப் புரிந்தது.

ஒருவேளை அந்தச் சூழ்நிலையில் நான் பயந்து, ஓடி ஒளிந்திருந்தால், அவன் என்னைப் பலமுறை மிரட்டி, தவறாகப் பயன்படுத்த முயன்றிருப்பான். ஆனால், என் வாழ்க்கையை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இது என் வாழ்க்கை, இது என் உழைப்பு, இங்கு நான் மட்டுமே அதிபதி என்று நிமிர்ந்து நின்றதால் மட்டுமே சூழ்நிலை எனக்குச் சாதகமாக மாறியது.
நாம் வாழ வேண்டும் என்று உறுதியாக நினைத்துவிட்டால், எந்தப் புயலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. மாறாக, நாம் பலவீனமாக இருந்து நம் புலம்பல்களை மற்றவர்களிடம் காண்பித்தால், இந்த உலகம் நம்மை மேலும் மேலும் கீழே தள்ளுமே தவிர, தூக்கி விடாது. துணிச்சலும் தன்னம்பிக்கையும்தான் நமக்கான உண்மையான கவசம்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)