RR: கேப்டன் பராக் பேச்சால் சலசலப்பு? 'அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!' - சங்கக்காரா தடாலடி

May 30, 2026 - 13:31
0
RR: கேப்டன் பராக் பேச்சால் சலசலப்பு? 'அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!' - சங்கக்காரா தடாலடி

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2 வரை முன்னேறி அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டன் ரியான் பராக் பேசிய கருத்து ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்கு வருவோம் என எதிர்பார்க்கப்படவில்லை" என்று பராக் கூறியிருந்த நிலையில், அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா அதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

RR கேப்டன் ரியான் பராக்
RR கேப்டன் ரியான் பராக்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வென்றதன் மூலம், நான்காவது இடத்தைப் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். பின்னர், எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, குவாலிஃபயர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்!

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், "எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார்.

"இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை வென்று தரக்கூடிய, உடனடியாகக் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களை முடிந்தவரை வாங்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த அணுகுமுறையில்தான் அனைத்தையும் செய்தோம். வைபவ் போன்ற வீரர்கள் விதிவிலக்காக இருக்கலாம், ஆனால் அவரும் எங்கள் முதல் பதினோரு பேரில் விளையாடப் போதுமான திறமையைக் கொண்டிருப்பதாக நம்பியே வாங்கினோம்," என்று சங்கக்காரா விளக்கமளித்தார்.

2022-ல் மாறிய தத்துவம்!

அணியின் 'வீரர்களை உருவாக்கும் பார்வை' குறித்துப் பேசிய சங்கக்காரா, கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த மனநிலையிலிருந்து அணி முழுமையாக வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தார். "வீரர்களை உருவாக்கும் நோக்கத்திலிருந்து நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முற்றிலும் விலகிவிட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏலத்தில், எங்களிடம் இருந்த பணத்தை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் சில நேரங்களில் அப்படித்தான் நடக்கும். இப்போது விளையாடிய வீரர்களில் சிலரிடம் அனுபவக்குறைவு இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் இங்கு வெல்வதற்காகவே இருக்கிறார்கள்," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கேப்டன்சிக்கு பாராட்டு!

பராக்கின் கருத்துடன் முரண்பட்டாலும், இந்த சீசனில் முதல் முறையாக முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்ற பராக்கின் செயல்பாடுகளை சங்கக்காரா மனதாரப் பாராட்டினார். "கேப்டனாக ரியான் பராக்கின் முதல் சீசன் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் தனது அணியையும், களத்தில் எடுத்த முடிவுகளையும் மிகச் சரியாகக் கையாண்டார். அவர் இன்னும் வளர்ந்து கற்றுக்கொள்வார், மற்ற வீரர்களும் அப்படித்தான். நாங்கள் இன்னும் வலிமையாகத் திரும்பி வருவோம்," என்றார்.

மேலும், "தொடர் தொடங்கியபோது நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று உண்மையில் யாரும் எங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்து, நல்ல கிரிக்கெட்டை விளையாடி, ஆட்டத்தை ரசிக்கும்போது சில சிறப்பான விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது," என்று கூறி, விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசி முடித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User