5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இது விபத்து என்றே போலீஸார் நினைத்தனர். ஆனால் எரிந்து நின்ற காரை தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது காரின் முன்இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை. அதோடு சர்க்யன் உடம்பில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் ராம் சிங் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவரது முதல் மனைவி சுனிதா தனது கணவர் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது வாக்குமூலத்திற்கும், காரில் இறந்து கிடந்தவர்களின் நிலைக்கும் முன்னுக்கு முன்முரணாக இருந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த ராம் சிங் மைனர் மகனிடம் விசாரித்தனர்.

அதோடு வீட்டில் ரத்தக்கரையும் சுவர்களில் இருந்தது. விசாரணையில் மைனர் மகன்தான் தனது தந்தை உட்பட 4 பேரையும் கொலை செய்து இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி வர்தன் கூறுகையில்,''ராம் சிங் சவுத்ரியின் இரண்டாவது திருமணத்தைத் தொடர்ந்து குடும்பத்திற்குள் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. ராம் சிங் தனது மனைவியை மோசமாக நடத்தியதை கண்டு பிள்ளைகள் தந்தையிடம் வெறுப்பை வளர்த்துக் கொண்டனர். சிறுவன் வீட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததான். இதனால் குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அவன் தொடர்ந்து பார்ப்பதையும் ஆன்லைன் கேம்களில் நீண்ட நேரம் செலவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தான்.
5 மாதங்களாக திட்டம்
குற்றக் காட்சிகள், போலீஸ் நடைமுறைகள் மற்றும் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கும் வழிகளை அவன் ஆன்லைனில் ஆய்வு செய்துள்ளான். தனது தந்தையை கொலை செய்ய 5 மாதங்களாக திட்டமிட்டு இருப்பதாக நம்புகிறோம்'' என்றார்.
போலீஸாரின் விசாரணையில் ராம் சிங்கும், அவரது இரண்டாவது மனைவியும் இரவில் பீர் குடித்து விட்டு உறங்க சென்றுள்ளனர்.
அவர்கள் உறங்கும் வரை மைனர் சிறுவன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான். அதிகாலை 4 மணிக்கு அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது மைனர் சிறுவன் தனது தந்தையும், சித்தியும் உறங்கிக்கொண்டிருந்த அறைக்குள் சென்றான்.
கணவனை கொலை செய்ய உதவிய மனைவி
உள்ளே சென்று தனது தந்தையை மைனர் கத்தியால் குத்தினான். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உறங்கிக்கொண்டிருந்த சர்க்யன் எழுந்தார். அவர் தனது கணவனை காப்பாற்ற முயன்றார். அவர்களின் சத்தத்தால் ராம் சிங் தாயார் பூசி தேவி மற்றும் உறவினர் மஹிமா உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் அறைக்குள் வந்தனர். அதோடு குற்றம் சாட்டப்பட்ட மைனரின் தாய் மற்றும் மைனரின் சகோதரியும் அறைக்குள் நுழைந்து சுர்க்யான், பூசி தேவி மற்றும் மஹிமாவைக் கொலை செய்ய மைனருக்கு உதவியதாக போலீஸார் தெரிவித்தனர்.
குடும்ப நிதி, நிலப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிக் கணக்குகளை மஹிமா நிர்வகித்து வந்தார். மஹிமாவும், சுர்க்யனும் சேர்ந்து ராம் சிங் சவுத்ரியிடம் இருந்த சொத்துக்களை அபகரிக்கக்கூடும் என்ற அச்சம் குடும்பத்தில் இருந்த மற்றவர்களுக்கு இருந்தது. கொலையை விபத்தாக மாற்ற அவர்கள் உடல்களை காரில் போட்டு தீவைத்தனர். ஆனால் அவர்கள் கொலை செய்ய கத்தியால் குத்தியிருந்தனர். இதனால் கத்திக்குத்து காயங்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பதை காட்டிக்கொடுத்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)