`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

Jul 29, 2026 - 15:01
0
`'Energy Drink' என்ற பெயரை நீக்க வேண்டும்' - ரெட் புல், ஸ்டிங் நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு!

'எனர்ஜி ட்ரிங்க்' (Energy Drink) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் பானங்களின் பிராண்டிங்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI), பெப்சிகோ, ரெட் புல், மான்ஸ்டர், கேம்பா, ஹெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, தங்களது தயாரிப்புகளில் இடம்பெறும் "Energy Drink" என்ற வார்த்தையை அடுத்த 90 நாட்களுக்குள் முழுமையாக நீக்க வேண்டும். இதன் மூலம், லேபிள், பேக்கேஜிங், விளம்பரங்கள், இணைய விற்பனைத் தளங்கள் என அனைத்து இடங்களிலும் இதற்கான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, பானங்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை அல்ல. மாறாக, இந்திய உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி "Energy Drink" என்ற தனித்த உணவு வகைப்பாடு இல்லாத நிலையில், அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் என FSSAI கருதுகிறது. எனவே, இத்தகைய பானங்கள் இனி "காஃபின் கலந்த பானங்கள்" (Caffeinated Beverages) என்ற வகைப்பாட்டின் கீழ் மட்டுமே சந்தைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, 90 நாட்கள் அவகாசம் வழங்கி இந்த இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், "உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும்", "மனதைச் சுறுசுறுப்பாக்கும்", "செயல்திறனை அதிகரிக்கும்" போன்ற அறிவியல் ஆதாரமற்ற விளம்பர வாசகங்களையும் இனிப் பயன்படுத்தக் கூடாது என்றும் FSSAI கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவால், நிறுவனங்கள் தங்களது கேன்கள் மற்றும் பாட்டில்களின் வடிவமைப்பை மாற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள், விளையாட்டுப் போட்டிகளுக்கான அனுசரணைப் பிரசாரங்கள் (Sponsorships), இ-காமர்ஸ் தளங்களில் உள்ள தயாரிப்பு விவரங்கள் ஆகியவற்றிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இதனால் குறுகிய காலத்தில் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும், நுகர்வோருக்குத் தெளிவான மற்றும் சட்டப்பூர்வமான தகவல்களை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக FSSAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உத்தரவால், இந்தியாவின் காஃபின் பானங்கள் சந்தையின் பிராண்டிங் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன. நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட 90 நாள் காலக்கெடுவுக்குள் அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும்; இல்லையெனில், உணவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User