"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

Apr 10, 2026 - 18:33
 0
"இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

2023-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனும் மசோதா மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதா நிறைவேற்ற 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுவரையறைப் பணிக்குப் பிறகு நடைமுறைக்கும் வரும் எனத் தெரிகிறது.

அதற்காக மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், அத்துடன் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

இந்த மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக, ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது விவாதிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், ``பெண்கள் முன்னேறும்போதுதான் சமூகமும் முன்னேறும் என்ற இந்தியாவின் நாகரிக விழுமியங்களை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்களும், அதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தல்களும் பெண்கள் இட ஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது மிக அவசியமானது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தளத்தில், ``பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மோடி அரசு எடுத்துள்ள திடீர் நிலைமாற்றம் நிர்வாகத்தில் அது அடைந்துள்ள மிகப்பெரிய தோல்விகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவுகளையும் மறைக்கும் நோக்கத்தையே கொண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் 'நாரி சக்தி வந்தன் அதினியம், 2023' சட்டம் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டபோது, ​​அதை 2024-ம் ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

இக்கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லை. அச்சட்டத்தை அமல்படுத்துவதை தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளைச் சார்ந்திருக்கும் வகையில் அவர் அமைத்துவிட்டார். அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே, அரசு தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. 30 மாதங்கள் கழித்து, சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதமர் தனது மனதை மாற்றிக்கொண்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுவரையறைப் பணிகள் நிறைவடைய அதிக காலம் பிடிக்கும் என்ற காரணத்தைக் காட்டி, அவற்றை நாம் மறந்துவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் 2027-ம் ஆண்டிற்குள் வெளியாகும் என்று அவரது மக்கள் தொகை பதிவாளர் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தும், அவர் இவ்வாறு கூறுகிறார். இது பொய்கள் மற்றும் மழுப்பல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஒரு பிரசாரம்.

திருவனந்தபுரத்தில் மோடி பிரசாரம்

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்கள் பா.ஜ.க-வை நோக்கித் திரண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில், இம்மாநிலங்களில் வேறு எந்தவொரு முக்கியப் பிரச்சினையிலும் பா.ஜ.க-விடம் முன்வைக்கக்கூடிய உருப்படியான கருத்துருவோ அல்லது நிலைப்பாடோ ஏதுமில்லை. இது மோடி அரசு எடுத்துள்ள ஒரு 'திடீர் நிலைமாற்றம்' (U-turn) ஆகும். எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட அரசுக்கு விருப்பமில்லை என்பதையும், அரசிடம் எவ்விதத் திட்டமிடலும் இல்லை என்பதையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அவரது பாசாங்குத்தனம் மற்றும் வஞ்சகத்திற்கு அளவே இல்லை. இவை அனைத்தும், நிர்வாகத்தில் அவர் அடைந்த மாபெரும் தோல்விகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவுகளையும் மறைப்பதற்காகவே செய்யப்படுகின்றன." எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0