Miyazaki: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.3.5 லட்சம்? உலகின் காஸ்ட்லியான மியாசாகி மாம்பழம் உருவாவது எப்படி?
மாம்பழங்கள் என்றால் பல வகை உண்டு. ஆனால், சில மாம்பழங்கள் பழக்கடையில் இல்லாமல், ஒரு சொகுசு நகைக் கடையில் இருக்க வேண்டிய தகுதியுடன் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு மாம்பழம்தான் ஜப்பானின் 'மியாசாகி' மாம்பழம்.
வெறும் இரண்டு மாம்பழங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஜப்பானில் இது சகஜம். உலகின் மிகவும் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த அரிய வகை மாம்பழங்கள், மாம்பழப் பிரியர்களுக்கு ஒரு லெஜண்டரி கனவு.

உலகின் காஸ்ட்லி மாம்பழம்!
இதற்கு 'தையோ-நோ-டொமாகோ' (Taiyo-no-Tomago) என்றொரு செல்லப்பெயரும் உண்டு. இதன் அர்த்தம் 'சூரியனின் முட்டை'. தனது பிரமிக்க வைக்கும் தோற்றம், அதீத இனிப்புச் சுவை மற்றும் வளர்க்கப்படும் அசாதாரணமான முறைக்காக இந்த மியாசாகி மாம்பழம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
இது ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள மியாசாகி மாகாணத்தில் விளைகிறது. இந்தப் பகுதி அதன் இதமான தட்பவெப்பநிலை மற்றும் உயர்தர பழங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு பலவகையான பழங்கள் விளைந்தாலும், அனைத்திலும் தனித்து நிற்பது இந்த மியாசாகி மாம்பழம்தான்.
சாதாரண மாம்பழங்களைப் போல மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இல்லாமல், இந்த மாம்பழங்கள் அடர் ரூபி-சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். பார்க்கப் பழம் போலவே தெரியாது, ஏதோ பட்டை தீட்டப்பட்ட ரத்தினக் கற்களைப் போல காட்சியளிக்கும். இதன் வழவழப்பான தோல் மற்றும் வித்தியாசமான வடிவத்தால், பலர் இதை டைனோசர் முட்டைகளுடன் ஒப்பிடுகின்றனர்.
ஆனால், உண்மையான ஆச்சரியம் பழத்தை வெட்டும்போதுதான் தொடங்குகிறது. அடர் சிவப்புத் தோலுக்குள், மென்மையான, கிரீமியான, சாறு நிறைந்த, முற்றிலும் நார் இல்லாத தங்க நிற சதைப்பகுதி இருக்கும். மற்ற மாம்பழ வகைகளைப் போல இல்லாமல், இதன் பட்டுப் போன்ற தன்மை வாயில் வைத்ததுமே கரைந்துவிடும். ஒரு பழம் பிரீமியம் தரத்திற்குத் தகுதி பெற வேண்டுமானால், அதில் குறைந்தபட்சம் 15% சர்க்கரை அளவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இதன் இனிப்பு அலாதியானது.
ஏன் இவ்வளவு விலை?
மியாசாகி மாம்பழங்கள் கிடைப்பதற்கு அரிது என்பதால் மட்டும் விலை உயர்ந்தவை அல்ல. அவற்றை வளர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் நம்ப முடியாத கவனிப்பு, உழைப்பு மற்றும் பொறுமைதான் அதன் விலைக்கு முக்கியக் காரணம்.
இந்த மாம்பழங்கள் திறந்த பண்ணைகளில் இல்லாமல், வெப்பநிலை, சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம் என அனைத்தும் கவனமாகக் கட்டுப்படுத்தப்படும் பசுமைக் குடில்களுக்குள் (greenhouses) வளர்க்கப்படுகின்றன.
மரம் தனது முழு சத்தையும் ஒரு சில பழங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் செடியிலிருந்து சுமார் 80% பூ மொட்டுகளைக் கிள்ளி எறிந்து விடுகிறார்கள். இதனால்தான், விளையும் பழங்கள் சாதாரண மாம்பழங்களை விடப் பெரியதாகவும், அதிக சாறுடனும், கூடுதல் இனிப்புடனும் உருவாகின்றன.
மியாசாகி மாம்பழ சாகுபடியில் உள்ள தனித்துவமான விஷயங்களில் ஒன்று, பழங்கள் பாதுகாக்கப்படும் விதம். மாம்பழங்கள் சிறியதாக இருக்கும்போதே, விவசாயிகள் ஒவ்வொரு பழத்தையும் ஒரு பிரத்யேக வலைப் பைக்குள் வைத்து மூடிவிடுகிறார்கள். பின்னர், பழத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சூரிய ஒளி சமமாகப் படுவதை உறுதி செய்வதற்காக, அந்த வலையை பசுமைக் குடிலுக்குள் கம்பிகளிலிருந்து கவனமாகத் தொங்க விடுகிறார்கள். மேலும், பழங்களுக்குக் கீழே பிரதிபலிப்பான்களை (reflectors) வைத்து, சூரிய ஒளி எல்லா திசைகளிலிருந்தும் பழத்தின் மீது படுமாறு செய்கிறார்கள்.

எல்லா மாம்பழங்களும் 'சூரியனின் முட்டை' ஆகிவிடாது!
இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், விளையும் ஒவ்வொரு பழத்திற்கும் மதிப்புமிக்க 'தையோ-நோ-டொமாகோ' பட்டம் கிடைத்துவிடாது. கடுமையான ஆய்வுக்குப் பிறகு, மிகச் சிறந்த மாம்பழங்கள் மட்டுமே தகுதி பெறுகின்றன. ஒரு பழம் 350 கிராமுக்கு மேல் எடை இருக்க வேண்டும், சீரான நிறத்தில் இருக்க வேண்டும், கீறல்கள் அல்லது அடையாளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும், உயர் சர்க்கரைத் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, பார்ப்பதற்கு எந்தக் குறையும் இல்லாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மாம்பழங்கள் ஜப்பானில் உள்ள மியாசாகி மத்திய மொத்த விற்பனை சந்தையில் ஏலத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அதன் விலை அதிர்ச்சியூட்டும் உச்சத்தை அடைகிறது. சில சமயங்களில் ஒரு ஜோடி மாம்பழங்கள் சுமார் 600,000 ஜப்பானிய யென், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. இது பல ஸ்மார்ட்போன்கள், சொகுசு கைப்பைகள் அல்லது சிறிய தங்க ஆபரணங்களின் விலையை விட அதிகம்.
இந்தியாவிலும் இந்த மாம்பழங்களை வளர்க்க முடியுமா?
முடியும், அதுதான் இந்திய மாம்பழப் பிரியர்களுக்கு இன்னும் உற்சாகமான செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் மியாசாகி மாம்பழ சாகுபடியை பரிசோதனை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு மாம்பழ விவசாயி இந்த மாம்பழங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளார். மேலும், தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இந்தப் பழம் பயிரிடப்படுகிறது.
எனினும் ஜப்பானிய விவசாயிகள் செலுத்தும் உழைப்பையும் கவனிப்பையும் மற்ற நாட்டினரும் கொடுத்தால் மட்டுமே இந்த தரத்துக்கு வர முடியும்.!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)