மகாராஷ்டிரா: 'ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்' - வெங்காய விலையின் கடும் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

May 12, 2026 - 08:01
0
மகாராஷ்டிரா: 'ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்' - வெங்காய விலையின் கடும் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

நாட்டில் வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா முன்னணியில் இருக்கிறது. அடிக்கடி அதிகப்படியான விளைச்சல் காரணமாக வெங்காய விலை மிகவும் மோசமாகச் சரியும். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுண்டு. தற்போது அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள பைதன் நகருக்கு அருகில் உள்ள வருடி என்ற கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ் என்ற விவசாயி தனது தோட்டத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார். அவர் தனது தோட்டத்தில் விளைந்த 25 மூட்டை வெங்காயத்தை பைதனில் இருக்கும் வேளாண் விளைபொருள் மார்க்கெட்டான ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த வெங்காயம் மார்க்கெட்டில் வெறும் ரூ.1262க்கு மட்டுமே விற்பனையானது. இதில் போக்குவரத்து கட்டணம், எடை கட்டணம், இறக்குகூலி உட்பட அனைத்து செலவுகளையும் கழித்தது போக பிரகாஷிற்கு எதுவும் மிஞ்சவில்லை.

மாறாக வெங்காயம் விற்ற பணம் செலவுக்குப் பற்றவில்லை என்றும் ரூ.1 செலுத்தும்படியும் பிரகாஷிடம் வியாபாரி கேட்டுக்கொண்டார்.

பிரகாஷ்

அதனைக் கேட்டு பிரகாஷ் அதிர்ச்சியடைந்தார். வெங்காயத்தை விற்பனை செய்த வியாபாரி அனுப்பிய ரசீதை விவசாயி பிரகாஷ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இருக்கிறது.

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்ற அளவுக்குதான் விற்பனையானது.

இது குறித்து பிரகாஷ் கூறுகையில், ''எனது தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வெங்காயத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தேன். ஆனால் மோசமான விலை வீழ்ச்சியால் என்னிடம் இருந்த வெங்காயத்தைக் கனத்தை இதயத்துடன் சாலையோரம் தட்டிவிட்டேன்.

எனது மகளுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தேன். அதற்காக வாங்கிய கடனை இன்னும் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். வெங்காய விலை வீழ்ச்சி என்னை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது," என்று அவர் கூறினார்.

அதிகப்படியான வெங்காய வரத்து காரணமாகவே விலை இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பிரகாஷ் வெங்காயத்தை விற்பனை செய்த பைதன் ஏபிஎம்சி வியாபாரி இப்ராஹிம் பக்வான் இது குறித்து கூறுகையில், "வெங்காயத்தை விற்பனை செய்வதற்கு முன்பு இதனை விற்பனை செய்வதால் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்று நாங்கள் அவரிடம் கூறியிருந்தோம். இருந்தபோதிலும், பின்னர் ஏதாவது அரசாங்க உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரகாஷ் தனது வெங்காயத்தை விற்க வலியுறுத்தினார்.

தரமான வெங்காயம் தற்போது 100 கிலோவுக்கு 400-800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது'' என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிரா விவசாயிகள் ஏற்கனவே கடன் தொல்லையில் இருக்கின்றனர். வெங்காய விலை நெருக்கடி அவர்களை மேலும் மன அழுத்தத்திற்குத் தள்ளி இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User