கோவை மாவட்டம் வெள்ளலூர் தேனீஸ்வரர் திருக்கோயில்: வேண்டிய வரம் அருளும் மும்மூர்த்திகள் சந்நிதி!

May 12, 2026 - 08:01
0
கோவை மாவட்டம் வெள்ளலூர் தேனீஸ்வரர் திருக்கோயில்: வேண்டிய வரம் அருளும் மும்மூர்த்திகள் சந்நிதி!

ஈசன் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் தலங்கள் மகிமை நிறைந்தவை. அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் சிவத்தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பு பெற்றவை. அப்படி ஒரு ஆலயம்தான் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோயில். கோயம்புத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

ஈசன் இங்கே சுயம்பு மூர்த்தமாக லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ஸ்ரீசிவகாமி அம்பாள். அம்பாளை ஒருமுறை தரிசனம் செய்தால் தன் அழகால் நம் மனதைக் கொள்ளை கொள்வாள். வலக் கரத்தில் நீலமலர் தாங்கியும், இடக்கரத்தை எழிலாகத் தொங்கவிட்ட நிலையிலும் இந்த அம்பிகை காட்சியளிக்கிறாள்.

இவள் மங்கல வாழ்வருளும் மாதரசி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். அன்னையை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண தோஷம், குழந்தை இன்மை ஆகிய பிரச்னைகள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். அம்பிகை சந்நிதி அருகே சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது.

வெள்ளலூர் தேனீஸ்வரர்
வெள்ளலூர் தேனீஸ்வரர்

காமதேனுவின் பக்தியை மெச்சி இங்கு எழுந்தருளிய ஈசன், அதன் பெயரையே ஏற்று காமதேனீஸ்வரர் என்றானார் என்றும் தலவரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மலர் வனமாக இருந்த இந்தத் தலத்தில் தேனீக்கள், தேனை எடுத்துச் சேமித்து வைக்காமல் ஈசனின் மீது அபிஷேகம் செய்தன. தேனீக்களின் பக்தியை மெச்சிய ஈசன், அவற்றை இனிய கானம் பாடும் கந்தர்வர்களாக மாற்றினார் என்கிறது தலவரலாறு. இங்கு ஈசனுக்குத் தேனால் அபிஷேகம் செய்து வழிபட, இனிய வாழ்வு கிட்டும்.

கரிகாலச் சோழன் தனக்கு உண்டான தோஷம் நீங்கும் பொருட்டு கொங்கு நாட்டில் அவர் எழுப்பியது இந்த ஆலயம் என்பர். சங்ககாலம் தொட்டே வரலாற்றில் புகழப்பட்ட இந்த வெள்ளலூர் சரித்திரப் புகழ் வாய்ந்தது என்கிறார்கள். இவ்வூரில் தொல்லியல் துறையினர் செய்த அகழாய்வில், சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

அவை, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டறியப்பட்டது. இதனால், ரோமானியர்களோடு தமிழர்கள் மேற்கொண்ட வாணிபத் தொடர்பை அறியமுடிகிறது என்கிறார்கள்.

மூன்றாம் கரிகாலன் காலத்தில் சிங்கத்தம்மன் என்பவர், கோயில் தீப வழிபாட்டுக்காக 20 கழஞ்சு பொன் தானமாக வழங்கியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

அன்னதானச் சிவபுரி என விக்கிரமச் சோழனின் கி.பி.1291 -ம் ஆண்டு கல்வெட்டு இவ்வூரைக் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் அரிதான 8 கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுகள் வழியே கால்நடைகள், நிலங்கள் போன்றவற்றை தானம் செய்த செய்திகளை அறிய முடிகிறது.

ஆலய முகப்பில் தோரணக்கல்லில் 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தகச் சோழன் பற்றிய செய்திகள், வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு உள்ளன. இது ஆலயத்தின் பழைமையைக் கூறுகிறது.

இத்தலத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகல்யாண கணபதி, ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஸித்தி விநாயகர் என நான்கு விநாயகர் சந்நிதிகள் இருப்பது கூடுதல் சிறப்பு.

வெள்ளலூர் தேனீஸ்வரர்
வெள்ளலூர் தேனீஸ்வரர்

இங்கே உள்ள ஸ்ரீகால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசந்திரன், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

அகத்திய முனிவர் இங்கு வந்து வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீதேனீஸ்வரர் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில், ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசங்கரநாராயணரும் சந்நிதி கொண்டிருப்பதால், மும்மூர்த்திகளும் அருள் வழங்கும் திருத்தலம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

சித்திரை முதல் நாளில், அதாவது தமிழ் வருடப் பிறப்பன்று, சூரிய பகவான் தன் கதிர்களால் சிவபெருமானை வணங்கும் தலம் என்பது சிறப்பு. திருமணத் தடையால் அவதிப்படும் அன்பர்கள் இங்கு வந்து சிவ- பார்வதிக்கு பூமாலை சார்த்திப் பிரார்த்தித்து, அந்த மாலையையும் எலுமிச்சைப் பிரசாதத்தையும் பெற்று வீட்டுக்கு எடுத்துச் சென்றால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதிகம்.

திருமண வரம் வேண்டும் பெண்கள் தங்கள் ஜாதக நகலை சுவாமியிடம் வைத்து அவருக்கு மாலை சாத்தி வழிபடுகிறார்கள். திருமண வரம் வேண்டும் ஆண்கள் ஜாதக நகலை அம்பிகையிடம் வைத்து மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு தாங்கள் சாத்திய மாலையை அணிந்து கொண்டு வீடு திரும்புவர். திருமணம் நடந்ததும் அந்த மாலையை கோயிலுக்குக் கொண்டு வந்து மீண்டும் சேர்த்துவிடுவது வழக்கம்.

சித்ரா பௌர்ணமி நாளில், சிவனாருக்குச் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறுகின்றன. அன்று, 108 சங்காபிஷேகம் கோலாகலமாக நடைபெறும். அதைத் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.

வெள்ளலூர் தேனீஸ்வரர்
வெள்ளலூர் தேனீஸ்வரர்

தல விருட்சம் வன்னி மரம். இங்குள்ள வன்னி மரம் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மற்றொரு தலவிருட்சமாக மந்தார மரம் உள்ளது. ஒரு காம்பில் ஐந்து இலைகள் கொண்ட மந்தார மரத்தில் பூக்கும் பூக்களை வைத்து வழிபட்டால் ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வெள்ளலூர் தேனீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User