Ravi Mohan: "ஆர்த்தி தனியாக 40 லட்சம் கேட்கிறார் என்பது பொய்!" - ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்
நடிகர் ரவி மோகன், கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆர்த்தி தரப்பிலிருந்து மாதத்திற்கு ரூ.40 லட்சம் கோரப்பட்டதாகவும், அதனை நிராகரித்து மாதத்திற்கு ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்து ரவி மோகனின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "நாங்கள் மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக மொத்தமாகக் கேட்கவில்லை. எங்கள் தலையில் அவர் வைத்துவிட்டுப் போன கடன்கள் நிறைய இருக்கின்றன. அதை அடைக்க முடியாமல் வீடு ஜப்திக்கு வரும் நிலை ஏற்பட்டு, வங்கியிலிருந்து நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், கடந்த இரண்டு வருடங்களாகக் குழந்தைகளுக்கு அவர் எந்தச் சலுகையும் செய்யவில்லை. அவர் சாப்பாட்டிற்குக்கூடப் பணம் கொடுக்கவில்லை. சொந்தக் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியது தந்தையின் கடமைதானே? பள்ளிக் கட்டணம், சாப்பாடு, டியூஷன், ஸ்பெஷல் ஆக்டிவிட்டீஸ் என எதற்குமே அவர் பணம் தரவில்லை.
இப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 40 லட்சம் ரூபாய் என்பது எங்களுக்குச் சாதகமாக வந்திருக்கிறது. ஆனால், அதை அவர்கள் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருவருக்கும் சேர்த்து வருடத்திற்குப் பள்ளிக் கட்டணம் மட்டுமே 86 லட்சம் ரூபாய் வருகிறது. அந்த 86 லட்சத்தையும் அவரே செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த செய்தி வெளியில் வரவில்லை.
அதேபோல், ஆர்த்திக்கு மாதத்திற்கு 3 லட்சமும், மகன்கள் ஆரவுக்கு 1 லட்சமும், அயானுக்கு 1 லட்சமும் என மொத்தம் மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர, குழந்தைகளின் டியூஷன், கராத்தே, டான்ஸ், செஸ் மற்றும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கான கட்டணங்கள் அனைத்தையும் அவரே செலுத்த வேண்டும்.
இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கூட்டிப் பார்த்தால்தான் அந்தத் தொகை வருகிறதே தவிர, ஆர்த்தி தனியாக 40 லட்சம் கேட்கிறார் என்பது பொய்யான செய்தி.

அவரை நாங்கள் குழந்தைகளைப் பார்க்கக் கூடாது என எப்போதுமே சொன்னதில்லை. அவர் வந்து குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கடந்த வருடமே விசிடேஷன் மனு தாக்கல் செய்திருந்தோம்.
ஒரு வருடமாக நீதிமன்றத்தில் இருந்த அந்த மனுவிற்கு எந்தப் பதிலும் வராமல் இருந்தது. ஆர்த்தி, ஆரவ், அயான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய நான்கு பேரும் மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரில் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நியாயம்" எனக் கூறியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)