'கள்ளக்குறிச்சி கலெக்டர் மனமுடைந்து போயிருந்தார்!' - ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு வெளியிட்ட தகவல்!

Nov 25, 2026 - 08:31
0
'கள்ளக்குறிச்சி கலெக்டர் மனமுடைந்து போயிருந்தார்!' - ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு வெளியிட்ட தகவல்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்ற நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், கோ - ஆப்டெக்ஸின் மேலாண்மை இயக்குனராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் மனமுடைந்து போயிருந்தார் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அருள் விக்னேஷ்

கவிதா ராமு வெளியிட்டிருக்கும் பதிவில், 'சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

அந்த அதிகாரிக்கும் அவரது கணவருக்கும் இது மிகவும் அதிர்ச்சிகரமான, மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான தகவல்களும், சொந்தக் கருத்துகளும் பரவத் தொடங்கியபோது அவர்கள் பெரும் வேதனைக்கு ஆளாகினர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான இந்தச் சம்பவம் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால், சமூக வலைதளங்களில் இது தொடர்பாகப் பெரும் விவாதம் எழுந்த பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது.

இந்த மாதம் 11-ம் தேதி கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினேன். அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதே அதன் நோக்கம். இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Kavitha Ramu's Post
Kavitha Ramu's Post

அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் சிலர் இந்தச் சம்பவத்தை அணுகிய விதம் குறித்து அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். இப்படியொரு சம்பவமே நடக்காதது போல சில சமூக வலைதளக் கணக்குகள் இதைச் சித்தரித்து வந்தன அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவர் பணியிட மாற்றம் கோரியிருப்பாரோ என்று நான் நினைத்தேன். அதுகுறித்து அவரிடமே கேட்டேன். அதற்கு, தலைமைச் செயலாளரே வேறொரு மாவட்டத்துக்குச் செல்லுமாறு முன்பே பரிந்துரைத்ததாகவும், ஆனால் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தான் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து சக அதிகாரிகளான நாங்கள் ஏன் முன்பே குரல் கொடுக்கவில்லை என்று என்னிடம் குறுஞ்செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

நாங்களும் இந்த விவகாரத்தை எழுப்ப விரும்பினோம். ஆனால், பாதிக்கப்பட்ட அதிகாரியான எங்களுடைய சக பெண் அதிகாரியின் சம்மதமும் விருப்பமும் இல்லாமல் இதில் செயல்படுவது சரியாக இருக்காது என்று கருதினோம். அவருடைய கண்ணியமும் விருப்பமுமே எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது.

இப்படியொரு சூழலில் ஒரு பெண் என்ன மாதிரியான மன உளைச்சல்களையும் வேதனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

அவர் இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடந்து, தனக்குரிய மன அமைதியையும் வலிமையையும் மீண்டும் பெற்று, இந்த அத்தியாயத்தைத் தன் வாழ்விலிருந்து கடந்து செல்ல வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்' எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவை சில மணி நேரங்களில் அவரின் பக்கத்திலிருந்து நீக்கவும் செய்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User