செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட்சி பெண் கவுன்சிலர்

Nov 25, 2026 - 21:01
0
செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட்சி பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தங்களில் கமிஷன் பெறப்படுவதால், பணிகள் அனைத்தும் தரமற்ற நிலையில் செய்யப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் செங்கோட்டை நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 18 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்த 45 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் பலரும் தங்களது வார்டுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள்.

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் பேசுகையில், "கடந்த காலத்தில் கூட்டத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றை மீண்டும் இந்தக் கூட்டத்திலும் வைத்து நிறைவேற்றி உள்ளனர். முந்தைய கூட்டங்களில் குறைந்த மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு தற்போது கூடுதல் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பெறுவதால் பணிகள் தரமற்றவையாகச் செய்யப்படுகின்றன. நகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தெரிவித்து மன்ற அரங்கில் இருந்து வெளியேறினார்கள்.

தி.மு.க-வைச் சார்ந்த கவுன்சிலர்களான மேரி அம்மாள் மற்றும் ரஹிம் ஆகியோர் நகராட்சியில் லஞ்சம் பெறப்படுவதாகத் தெரிவித்தனர். அவர்கள் பேசுகையில், "நாங்கள் கவுன்சிலர்களாகத் தேர்வானதில் இருந்து யாரிடமும் எந்த பணமும் பெறவில்லை. யாரும் எங்களுக்கு பணம் கொடுக்கவும் இல்லை. கவுன்சிலர் பதவியை பயன்படுத்தி இதுவரை எந்த லாபமும் பெறவில்லை. இந்த நகராட்சியில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்தனர்.

நகராட்சி கூட்டரங்கில் இருந்து வெளியே வந்து கவுன்சிலர் மேரி அம்மாள், "ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூல் செய்து கவுன்சிலர்கள் தங்களுக்குள்ளாகவே பங்கு வைத்துக் கொள்கிறார்கள்.

எனக்கு எந்தப் பங்கும் வரவில்லை. நானும் கவுன்சிலர் என்ற முறையில் கையெழுத்து போட்டு தான் உங்களுக்கு இப்படி பணம் கிடைக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் தருவதில்லை" என்று வெகுளியாகப் பேசினார்.

நகராட்சியில் லஞ்சம் வாங்கப்படுவது குறித்து கவுன்சிலர் வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கவுன்சிலர் மேரி அம்மாள் பேசிய வீடியோ வைரலாக பரவியது. இந்தப் பரபரப்புக்கு மத்தியில், நகராட்சி தலைவர் ராமலட்சுமி, "யாரெல்லாம் லஞ்சம் வாங்கினார்கள் என்பது எனக்குத் தெரியும் அவர்கள் பெயரை வெளியிட்டால் நாறிப் போய்விடும்" எனப் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. செங்கோட்டை நகராட்சியின் இந்த சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் ஆடியோ பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User