`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

Mar 30, 2026 - 11:01
 0
`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. அதற்காக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு முடித்திருக்கின்றன.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ஆர்.வசந்தவேலுக்கு, பேருந்து நிலையம் அருகே நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது ரிஷிவந்தியம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயனும் ஜி.ஆர்.வசந்தவேல் வந்த அந்த வாகனத்தில் இருந்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.ஆர்.வசந்தவேலுடன், வசந்தம் கார்த்திகேயன்

அப்போது பேசிய வசந்தம் கார்த்திகேயன், ``எங்கள் வீட்டுப் பிள்ளையாக நிற்கும் ஜி.ஆர்.வசந்தவேல் அவர்களை சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஜி.ஆர்.வசந்தவேல்.

அவர் பணக்காரர் இல்லை. பெரிய மாட மாளிகைகள் அவரிடம் இல்லை. பல்வேறு பதவிகளில் இருந்து பணத்தை வாரிச் சுருட்டவில்லை. எதுவுமே இல்லாத அப்பாவி அவர். இந்தத் தேர்தலில் அவர் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

நம் வீட்டுப் பிள்ளை சாகலாமா ? அவர் உயிருக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்தானே ? அவரை காப்பாற்ற வேண்டும்தானே ? வசந்தவேல் தோற்றால் இந்த வசந்தம் கார்த்திகேயன் செத்ததாக அர்த்தம். இந்தத் தேர்தலில் எனக்கு எந்த வேலையும் இல்லை. அண்ணன் வசந்தவேல் அவர்களின் வெற்றிக்காக உழைப்பதுதான் என் வேலை.

அதனால் வசந்தவேல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால், 25 நாட்களுக்கு நாம் அயராது பாடுபட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளையின் வெற்றிக்கு நாம்தான் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் வசந்தவேல்தான், நாம்தான் உதயசூரியன் என்ற எண்ணத்துடன், வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவுடன் அவரை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும்.

நான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதி கூட எனக்கு முக்கியம் இல்லை. உளுந்தூர்பேட்டை தொகுதி வெற்றிதான் எனக்கு முக்கியம். உங்கள் பார்வையில் வேண்டுமானால் வசந்தவேலிடம் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.

அதை வசந்தவேலிடம்தான் கேட்க முடியுமே தவிர, வசந்தம் கார்த்திகேயனிடம் கேட்க முடியாது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் வீடு பார்க்குமாறு கூறியிருக்கிறேன். அவரை சட்டமன்ற உறுப்பினராக்க நீங்கள் அயராது பாடுபட வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.

தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்

இதை விட்டுவிட்டால் உளுந்தூர்பேட்டை தொகுதியை காப்பாற்றவே முடியாது. எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``வசந்தம் கார்த்திகேயனின் விளம்பர மோகத்துக்கு அளவே இல்லையா ? அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

அப்படி இருக்கும்போது, அவர் தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் வேலை செய்வாரா ? மேலும் உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்தில் வருகிறது.

அதன் மாவட்டச் செயலாளர் எங்கள் எம்.எல்.ஏ உதயசூரியன்தான். அவர் இருக்கும்போது இவர் முந்திரிக் கொட்டைத்தனமாக நடந்து கொண்டதுடன், எதிர்க்கட்சிகள் கேலி செய்யுமளவுக்கும் பேசி வைத்திருக்கிறார்" என்று கடுகடுக்கின்றனர் மேற்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியனின் ஆதரவாளர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0