`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

Jun 15, 2026 - 15:30
0
`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த  ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. ஆனால், அவர் அறிமுகம் செய்யப்பட்ட நொடியில், அந்த அரங்கம் அமைதிக்குப் பதிலாக அதிர்வலைகளால் நிரம்பியது. சுமார் 200 மாணவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று, பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தும், விசில் அடித்தும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தொழில்நுட்ப உலகின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை, அவரது முன்னாள் கல்வி நிறுவனத்திலேயே மாணவர்கள் அவமதித்ததன் பின்னணி என்ன?

சுந்தர் பிச்சை பேசத் தொடங்கியபோது, பட்டமளிப்பு அங்கியுடனும் தொப்பியுடனும் மாணவர்கள் கோஷமிட்டவாறே அரங்கத்தை விட்டு வெளியேறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல மாணவர்கள் 'கெஃபியே' எனப்படும் பாரம்பரிய சிகப்பு - வெள்ளை நிறக் கைக்குட்டையை அணிந்திருந்தனர்.

"நான் கொடுக்கும் இரண்டாவது பட்டமளிப்பு விழா உரை இதுதான், முதல் உரையை என் வீட்டுத் தோட்டத்தில்தான் கொடுத்தேன்" என்று சுந்தர் பிச்சை ஒரு நகைச்சுவையுடன் தனது உரையைத் தொடங்கினாலும், மாணவர்களின் எதிர்ப்பு முழக்கங்கள் அதையும் மீறி ஒலித்தன.

இந்த திடீர் எதிர்ப்பின் மையப்புள்ளியாக இருப்பது 'புராஜெக்ட் நிம்பஸ்' (Project Nimbus) என்றழைக்கப்படும் ஒரு மெகா ஒப்பந்தம். இது கூகுள் நிறுவனம் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் செய்துகொண்ட $1.2 பில்லியன் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், கூகுளின் தொழில்நுட்ப சேவைகள் இஸ்ரேலுக்கு வழங்கப்படுகின்றன. பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள், இந்த தொழில்நுட்பம் இஸ்ரேலுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தே 'பாலஸ்தீனத்திற்கான மாணவர் நீதி' (Students for Justice in Palestine) மற்றும் 'பிரிவினைவாதத்திற்கு தொழில்நுட்பம் வேண்டாம்' (No Tech for Apartheid) ஆகிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தன.

பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள், அதற்கு மாற்றாக "மக்களின் பட்டமளிப்பு விழா" (People's Commencement) என்ற பெயரில் தனியொரு நிகழ்ச்சியை நடத்தினர். இதில், 2024-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக 100 நாட்களுக்கும் மேலாக அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹ்மூத் கலீல் சிறப்புரையாற்றினார். இது, மாணவர்களின் எதிர்ப்பு என்பது வெறும் கோஷங்கள் மட்டுமல்ல, அதற்கொரு உறுதியான கருத்தியல் தளம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாக அமைந்தது.

சுவாரஸ்யமாக, தனது உரையில் சுந்தர் பிச்சை செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இன்றைய பட்டதாரிகளிடையே AI தங்களின் வேலைகளைப் பறித்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக உள்ள நிலையில், மற்ற தொழில்நுட்பத் தலைவர்கள் இது குறித்துப் பேசி மாணவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன.

கடந்த மாதம் 'ஹார்ட் ஃபோர்க்' என்ற தொழில்நுட்ப பாட்காஸ்டில் பேசியபோது, ஸ்டான்ஃபோர்டு மாணவர்களிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புகள் குறித்து சுந்தர் பிச்சையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இளம் தலைமுறையினர் மீது நான் எப்போதும் அபார நம்பிக்கை வைத்திருக்கிறேன். AI மீதான விமர்சனங்களை வைக்கும் மாணவர்கள்கூட, எதிர்காலத்தில் அந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்திருந்தார்.

ஆனால், கள நிலவரமோ வேறு செய்தியைச் சொல்வதாக அமைந்திருக்கிறது. தொழில்நுட்பமும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்பதையும், பெருநிறுவனங்களின் முடிவுகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்த மாணவர்கள் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User