`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

Jun 15, 2026 - 15:30
0
`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவும், தியாகத்திற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரை மேலும் கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் அசாதாரண வீரத்தைப் பாராட்டி, ரூ.48 லட்சத்திற்கான காசோலையை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வழங்கியிருக்கிறார்.

முதல்வரை சந்தித்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம்
முதல்வரை சந்தித்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தலைமைச் செயலகத்தில் இன்று (15.6.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் வெளிப்படுத்திய அசாதாரண வீர தீரச் செயலைப் பாராட்டி, ரூ.48 லட்சத்திற்கான நிதியுதவிக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கி, தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மத்திய அரசின் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அவர்கள் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வரும் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், அவர் தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.

முதல்வரை சந்தித்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம்
முதல்வரை சந்தித்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம்

அவரது இந்த அசாதாரண வீர தீரச் செயலைப் பாராட்டி, மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் கடந்த 8.6.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் இவருக்கு "கீர்த்தி சக்ரா" விருதினை வழங்கிச் சிறப்பித்தார். தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இவரது நாட்டுப்பற்று, துணிச்சல் மற்றும் கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறையினரிடையே வீர உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., பொதுத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் திருமதி எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப., முன்னாள் படைவீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் திரு. எம். சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் குடும்பத்தினரும், அரசு உயர் அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்." எனத் தெரிவித்திருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User